"அவள் இறந்துவிட்டாள்" மனைவி கருகியும் தகன மேடையில் அலறிய வீடியோ கால்.. பிஜ்னோர் மோனிகா பின்னணி என்ன
சென்னை: உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம் தாய் மோனிகா என்பவர், சைபர் குற்றவாளிகளின் 'டிஜிட்டல் கைது' மிரட்டலுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.. சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தபோது கூட, அந்த மோசடி கும்பல் விடாமல் மொபைல் போனில் அழைத்து மிரட்டியது உறவினர்களை நிலைகுலைய வைத்துள்ளது.. அப்படி என்ன நடந்தது? யாரிந்த மோனிகா
நவீன டிஜிட்டல் யுகத்தின் இருண்ட பக்கமாக உருவெடுத்துள்ளது டிஜிட்டல் கைது.. உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் வசித்து வரும் 28 வயதே ஆன மோனிகா என்ற இளம் பெண், கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

மோனிகா எடுத்த முடிவு
ஒருகட்டத்தில் இந்த டிஜிட்டல் மாயையில் விழுந்துவிட்டார்.. பல இதனால் மாதங்களாக துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறார். கடும் மன உளைச்சலுக்கு ஆளான மோனிகா, தற்கொலை செய்து கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டார்... தற்கொலைக்கு பிறகு, அவரது உடல் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டு கொண்டிருந்த அந்த கனத்த தருணத்திலும், அவரது செல்போன் போன் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருந்தது.
இறுதிச் சடங்குகள் முடிந்து திரும்பிய உறவினர்கள், அந்த போனுக்கு வந்த வீடியோ அழைப்பை எடுத்துப் பார்த்தபோதுதான், மோனிகாவின் தற்கொலைக்கான காரணமே ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் தெரிந்தது.
அவள் இறந்துவிட்டாள்
ஆம், அந்த வீடியோ அழைப்பை மோனிகாவின் கணவர் எடுத்துள்ளார்.. காவல் துறை உயரதிகாரி போன்ற யூனிபார்ம் அணிந்த ஒரு நபர் வீடியோவில் தோன்றி, மோனிகா எங்கே என்று கேட்டுள்ளார்..
அவள் இறந்துவிட்டாள் என்று மோனிகாவின் கணவர் பதிலளித்தார். ஆனால் அப்போதுகூட அந்த நபர் துளியும் இரக்கமின்றி மோனிகாவின் கணவரை மிரட்டத் தொடங்கினார்...
இதனால் பதறிப்போன குடும்பத்தினர், ஒருவேளை இந்த நபரின் மிரட்டலால்தான் மோனிகா தற்கொலை செய்திருப்பாரோ? என்று சந்தேகப்பட்டு வீடு முழுக்க ஆய்வு செய்தனர்.. அப்போது மோனிகா கைப்பட எழுதிய டைரி ஒன்று கிடைத்தது.
வீடியோ அழைப்பிலேயே இருக்கணும்
அதில் கடந்த 5 மாதங்களாக அவர் அனுபவித்த நரக வேதனைகளை கண்ணீருடன் பதிவு செய்திருந்தார்.. ஆள் கடத்தல் போன்ற மிகக் கடுமையான குற்றங்களில் மோனிகாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி மிரட்டிய அந்த மோசடி கும்பல், அவரை டிஜிட்டல் கைது என்ற பெயரில் ஒரு மாயச் சிறைக்குள் தள்ளியுள்ளது. அதாவது எப்போதும் வீடியோ அழைப்பிலேயே இருக்க வேண்டும், யாரிடமும் பேசக்கூடாது, வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என அவர்கள் விதித்த கட்டுப்பாடுகள் மோனிகாவைத் தீராத மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளன.
தன்னைப் பற்றிய இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் தனது குடும்பத்திற்கு ஆபத்து நேருமோ என்று அஞ்சிய மோனிகா, யாரிடமும் எதையும் பகிராமல் தனக்குள்ளேயே குமுறியுள்ளார். இறுதியில், அந்த மோசடி கும்பலின் இடைவிடாத மிரட்டல்களைத் தாங்க முடியாமல், தற்கொலை என்ற முடிவை எடுத்துள்ளார்.
கண்ணீர் மல்க புகார்
தனது மனைவியின் டைரியில் இருந்த விவரங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர், எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு ஒரு குடும்பத்தையே அழித்த அந்தச் சமூக விரோதிகளைக் கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என போலீசில் கண்ணீர் மல்கப் புகார் அளித்துள்ளார்.. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் கடும் அதிர்வலைகளை உண்டுபண்ணி வருகிறது.
டிஜிட்டல் கைது என்பது சட்டபூர்வமான நடைமுறை அல்ல, அது முற்றிலும் ஒரு மோசடி என்பதை மக்கள் உணர வேண்டும். யாராவது உங்களை வீடியோ அழைப்பில் மிரட்டினால் அச்சப்படாமல் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ள வேண்டும். அதேபோல, இக்கட்டான சூழலில் தற்கொலை எண்ணம் தோன்றினால் '104' என்ற எண்ணிற்கு அழைத்து ஆலோசனை பெறுவது அவசியம்.!!!












Click it and Unblock the Notifications