குழந்தைகளோடு குழந்தையாக தரையில் அமர்ந்த சிவ்தாஸ் மீனா! நேரடி கள ஆய்வுக்கு முக்கியத்துவம்!
சென்னை: தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் சிவ்தாஸ் மீனா, நேரடி கள ஆய்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையிலிருந்து இன்று காலை டிஸ்சார்ஜ் ஆகிய நிலையில் அவர் வீட்டில் ஓய்வில் இருந்தார்.
முதல்வர் தலைமைச் செயலகம் வராத நிலையில் அடையாறு பகுதி நகர்ப்புர சமுதாய நல மையம், திருவான்மியூர் பாரதிதாசன் சாலை மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையத்தினை சிவ் தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, புறநோயாளிகள் பிரிவினையும், வருகைப் பதிவேட்டினையும் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர், புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் பதிவு அட்டைக்கு பதிலாக பதிவுப் புத்தமாக வழங்கிட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, புறநோயாளிகள் காத்திருப்பு அறையினை பார்வையிட்டு புறநோயாளிகளின் வருகையை சராசரியாக கணக்கிட்டு, கூடுதல் இருக்கைகளை அமைக்க அறிவுறுத்தினார். பின்னர், கர்ப்பிணித் தாய்மார்களிடம் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். கர்ப்பிணித் தாய்மார்களுக்கான பதிவினை நகர்ப்புர சமுதாய நல மையத்தில் பதிவு செய்து அதன் விவரத்தினை ஆரம்ப சுகாதார நிலையப் பதிவிற்கு அனுப்பி வைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு முன்பு வழங்கப்படும் சிகிச்சை வழிமுறைகள் குறித்து செவிலியர்களிடம் கேட்டறிந்தார். மேலும், தாய் சேய் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள ஆய்வகத்தினை ஆய்வு செய்து, தற்போதுள்ள உபகரணங்களின் எண்ணிக்கை, தேவைப்படும் உபகரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறும், அதன் பேரில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அங்குள்ள மருந்தகத்தினை பார்வையிட்டு அத்தியாவசியமான மருந்துகளின் இருப்புகள் குறித்து கேட்டறிந்து, காலவாதியாக உள்ள மருந்துகளை விழிப்புணர்வுடன் கையாளுமாறு மருந்தாளுனருக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, அங்குள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையத்தின் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு, மையத்தை சுத்தமாக பராமரிக்கவும், சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்கவும் அறிவுறுத்தினார். மேலும், குழந்தைகளுடன் தலைமைச் செயலாளர் தரையில் அமர்ந்து கலந்துரையாடினார். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.












Click it and Unblock the Notifications