படார்.. மொட்டை மாடியில் கையில் ஏணியோடு! வெடித்துச் சிதறிய உடல்.. ரொம்ப கவனமாக இருக்கனும் மக்களே!
சென்னை: மொட்டை மாடியில் அலுமினிய ஏணியோடு நின்றிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உடலில் தீப்பற்றி உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வீடியோ எங்கே? எப்போது எடுக்கப்பட்டது? என்ன விவகாரம் என்ற தகவல் வெளியாகாத நிலையில், மின்சார வயருக்கு அருகே இருக்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
தொட்டால் தூக்கி விடுவேன் என்பது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ மின்சாரத்துக்கு நிச்சயம் பொருந்தும். அந்த அளவுக்கு மக்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்ய மின்சாரம் மிக முக்கியமான ஒன்று.

காலையில் எழுவது தொடங்கி, உறங்கி, மீண்டும் எழுவது வரை மின்சாரம் இல்லை என்றால் ஒரு நாளை கடத்துவது மிகவும் கடினம். எந்த அளவுக்கு பயனுள்ளதோ அந்த அளவுக்கு மிகவும் அபாயகரமானது மின்சாரம். ஒரு நொடி பிசகினாலும் அவ்வளவு தான்..
மின்சாரத்தை கவனமின்றி கையாண்டால் அதன் விளைவுகள் மிக பயங்கரமானதாக இருக்கும். குறிப்பாக மழைக் காலங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மின்சாரம் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் போதிய அளவில் இல்லாததே இதற்கு காரணம். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட லேப்டாப் சார்ஜ் போடும்போதும், செல்போன் சார்ஜ் போடும்போதும் இளம்பெண்கள் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு துளி வியர்வை இருந்தால் கூட அது மின்சாரத்தை பெரிய அளவில் ஈர்க்கும் என்கின்றனர் மின்சாரத்துறை நிபுணர்கள்.
குறிப்பாக உப்பு கலந்த நீர் மின்சாரத்தை அதிக அளவில் கடத்தும் என்பதால் குளித்த உடனேயோ அல்லது வியர்வை உடலுடன் உடனே சார்ஜ் போடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் மின்சாரம் தாக்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் மொட்டை மாடிகளில் சில வீடுகளுக்கு மிக அருகில் மின்சாரம் செல்லும் அப்போது அந்த வயர்களை தொட்டால் மிகப்பெரிய கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். சில நேரங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படும்.
இந்த நிலையில் அப்படி ஒரு வீடியோ தான் ட்விட்டரில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோ எப்போது? எங்கு எடுக்கப்பட்டது? என்ற விவரங்கள் இல்லை என்றாலும், விழிப்புணர்வுக்காக அந்த வீடியோவை அதிக அளவில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். மொட்டை மாடியில் நிற்கும் இளைஞர் ஒருவர் கீழிருந்து அலுமினிய ஏணி ஒன்றை எடுக்க, அதனை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக தூக்கிய போது, அருகே சென்ற மின்சார வயரில் பட்டு மின்சாரம் பாய்ந்தது.
ஒரே நொடியில் அந்த இளைஞரின் உடல் வெடித்து சிதறியதோடு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். தற்போது இந்த வீடியோ அதிக அளவில் பரவி வரும் நிலையில் இதற்கு பின்னணி குறித்து விவரிக்கின்றனர் மின்சார துறை பணியாளர்கள். இது தொடர்பாக நாம் பேசிய போது, பொதுவாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின்சாரத்தை கொண்டு செல்ல அலுமினிய வயர்களையே பயன்படுத்துகின்றனர். காரணம் அலுமினியம் மின்சாரத்தை மிக எளிதில் கடத்தக்கூடியது. மேலும் மின் சேதாரத்தையும் மின் இழப்பையும் அது கட்டுப்படுத்துகிறது. தற்போது அந்த வீடியோவில் இருக்கும் இளைஞர் அலுமினிய ஏணியைத் தான் தூக்கி இருக்கிறார். எனவே மின்சாரம் வயரில் பட்ட போது உடனடியாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்திருக்கிறார்.
பொதுவாக மொட்டை மாடிகளில் துணி காய போடுவது, பந்தல் போடுவது உள்ளிட்ட சில வேலைகளை மக்கள் செய்வார்கள். மிக அருகில் மின்சாரம் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். மூங்கில் குச்சி கூட மின்சாரத்தை கடத்தும் பண்பை கொண்டு இருக்கிறது. எனவே மின் வயர் செல்லும் இடங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் மொட்டை மாடிகளில் வசிப்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். முடிந்தவரை மின்சார வயர்களில் பிளாஸ்டிக் பை போன்றவற்றை சொருகி மின் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். குறிப்பாக மழைக்காலங்களில் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஈரமாக இருக்கும் துணிகளை காற்றில் வீசும் போது கூட மின்சார தாக்கி உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications