காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்!
சென்னை: ஊழலை ஒழிப்போம், எங்கள் ஆட்சியில் முறைகேடுகளே இருக்காது என்று சொல்லிதான் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அதிகாரத்தை பிடித்திருந்தது. இப்படி இருக்கையில், காஞ்சிபுரம் படப்பையில், 73 வயது முதியவரை ஏமாற்றி ரூ.9 லட்சத்தை தவெக பெண் நிர்வாகி சுருட்டியிருப்பதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வீடு வாங்குவதெல்லாம் லேசுபட்ட காரியம் கிடையாது. ஆனால், குடிசை மாற்று வாரியத்தின் கீழ், சென்னையின் பூர்வகுடி மக்களுக்கு வீடு வழங்கப்படுகிறது. ஆனாலும், அதிலும் கூட காசு கொடுத்தால்தான் காரியம் நடக்கும்.

மண் அள்ளி போட்ட பெண் நிர்வாகி
ஜெயலலிதா இருந்தபோதும் சரி, திமுக ஆட்சியிலும் சரி இப்படித்தான் இருந்தது என்று சென்னை மக்கள் சரமாரியாக குற்றம்சாட்டி வந்திருந்தனர். சரி தூய சக்தி என்று சொல்லிக்கொண்டு ஆட்சியை பிடித்திருக்கும் தவெக, இந்த குற்றங்களை எல்லாம் ஒழித்துக்கட்டும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இப்படி இருக்கையில்தான் மக்களின் எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளி போட்டிருக்கிறார் படப்பை தவெக பெண் நிர்வாகி கலைவாணி.
என்ன நடந்தது?
சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். 73 வயது முதியவரான இவர் தனது குடும்பத்துடன் படப்பை அருகே குடியேறி வசித்து வருகிறார். இப்படி இருக்கையில்தான் படப்பையில் அரசு வீடு வாங்கி தருவதாக கூறி காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் கலைவாணி, முதியவர் விஸ்வநாதனை அணுகியிருக்கிறார்.
ரூ.9 லட்சம் சுருட்டல்
வீடு தானே.. அதெல்லாம் சிறப்பா செஞ்சுடலாம்! எனக்கு வெட்ட வேண்டியதை வெட்டி விடுங்க.. என்று சொல்லி ரூ. 7 லட்சத்தை கேட்டு வாங்கியிருக்கிறார். சரி ரூ.40 லட்சம் மதிப்பிலான வீட்டுக்கு ரூ.7 லட்சம் செலவழிப்பது பெரிய விஷயம் கிடையாது என்று ஏமாந்த விஸ்வநாதன், கலைவாணிக்கு பணத்தை கொடுத்திருக்கிறார். ஆனால் பணத்தாசை யாரை விட்டது? எனவே கலைவாணி மேலும் ரூ.2 லட்சம் ஏடிஎம் மூலம் என மொத்தமாக ரூ.9 லட்சத்தை பெற்றிருக்கிறார்.
கம்பி நீட்டிய கலைவாணி
ஆனால், பணத்தை வாங்கியபோது இனிக்க, இனிக்க பேசியதோடு சரி. அதன் பின்னர் கலைவாணி நாட் ரீச்சபிள் ஆகியிருக்கிறார். முதியவர் தொடர்ந்து எவ்வளவோ முயற்சித்தும் பணமும் கிடைக்கவில்லை, வீடும் கிடைக்கவில்லை. மட்டுமல்லாது நிலம் தொடர்பான பத்திரத்தையும் தராமல் கலைவாணி இழுத்தடித்ததாக சொல்லப்படுகிறது.
முதியவர் தற்கொலை
எனவே மனம் உடைந்துபோன முதியவர், படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் புகாரின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, முதியவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதன் காரணமாக முதியவரின் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் குரல் எழுப்பியிருக்கின்றனர். பணத்தையும், முதியவரின் மரணத்திற்கு ஈடான இழப்பீட்டு தொகையையும் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications