படி படி என்றதால் ஆத்திரம்! தாய்-தம்பியை கொன்று பார்சல் செய்த கல்லூரி மாணவர்! நடுங்கிய திருவொற்றியூர்
சென்னை: சென்னை திருவொற்றியூரில் படி படி என்று தொந்தரவு செய்ததால், பெற்ற தாயையே கழுத்தை அறுத்து மகன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. மேலும், தனது தம்பியையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தாய் மற்றும் தம்பியை கொடூரமாக கொன்ற கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூர் அருகே திருநகர் முதல் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பத்மா. முருகன் ஓமன் நாட்டில் கிரேன் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். பத்மா சென்னை அண்ணாசாலையில் அக்குபஞ்சர் சிகிச்சைக்கு தெரபிஸ்டாக வேலை பார்த்து வந்தார். முருகன் பத்மா தம்பதிக்கு இரண்டு மகன்கள்.

மூத்த மகன் நித்தேஷ் (வயது 20) பிஎஸ்சி டேட்டா அனலிசிஸ் படித்து முடித்துள்ளார். தற்போது தான் இறுதி செமஸ்டர் தேர்வை எழுதியுள்ளார். இதேபோல் இளைய மகன் சஞ்சய் (14) 10 ஆம் வகுப்பு படித்து வந்தான். முருகன் - பத்மா தம்பதியின் கனவு இவர்கள் இருவர்களையும் நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக வரவேண்டும் என்பது தான். இதனால் மூத்த மகன் படிப்பு செலவுக்காக முருகன் வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பளம் அனுப்புகிறார்.
இதேபோல் பதமாவும் வேலை பார்த்துக்கொண்டே குடும்பத்தையும், மகன்களையும் பார்த்துக்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில், நித்தேஷ் கல்லூரி படிப்பில் அதிக அரியர்ஸ் போட்டு இருப்பது பத்மாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் மகன் நித்தேசை கண்டித்தார். இதில் மகன் நித்தேசுக்கு அம்மா மீது கோபம் வந்துள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார் நித்தேஷ். எனினும் நண்பர்கள் பேசி மீண்டும் அம்மாவிடம் பேச வைத்து நித்தேசை வீட்டில் விட்டு சென்றனர்.
இந்த நிலையில் தேர்வு ரிசல்ட் வந்துள்ளது. இதிலும் நித்தேஷ் பாஸ் ஆகவில்லை என்று தெரிகிறது. இதனால் மீண்டும் வீட்டில் பிரச்சினை வந்துள்ளது. இதனால் நித்தேஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நித்தேசின் வீடு பூட்டியே இருந்துள்ளது. தாய் மற்றும் மகன் சஞ்சய் 2 நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு பத்மாவின் அக்கா மகாலட்சுமிக்கு பத்மாவின் செல்போனில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், "அக்கா உன் வீட்டுக்கு வெளியே ஒரு பை இருக்கிறது. அதில் சாவி மற்றும் செல்போன் இருக்கிறது" என்று அனுப்பப்பட்டிருந்தது. இதை நள்ளிரவு 12 மணிக்கு தான் மகாலட்சுமி பார்த்துள்ளார். பார்த்ததும் ஒரு நிமிடம் ஷாக் ஆன மகாலட்சுமி அந்த பையை எடுத்துகொண்டு உடனடியாக பத்மாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் கதவை திறந்து பார்த்த அவர் அப்படியே உறைந்து போனார்.
வீட்டிற்குள் 2 பாலித்தீன் பைக்குள் பத்மா மற்றும் மாணவன் சஞ்சய் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி கதறி அழுதார். இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நள்ளிரவில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு நித்தேஷ் இல்லாததால் அவர் தான் கொலை செய்திருக்க கூடும் என்று கருதிய போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை நித்தேஷை போலீசார் கைது செய்தனர். அப்போது நித்தேஷ் தான் இந்த கொலையை செய்ததாக கூறினார். தாய் பத்மா, படி படி என்று தொந்தரவு செய்ததால் இரவு முழுக்க முழித்து இருந்து நள்ளிரவில் நன்கு தூங்கிய பின் கத்தியை எடுத்து அவரை கழுத்தை அறுத்து கொன்றேன் என்றும், பின்னர் தம்பி சஞ்சயை யார் பார்த்துக்கொள்வார்கள் என்று கருதி அவனையும் கத்தியால் அறுத்து கொன்றுவிட்டேன் என்றும் கூறினார். மேலும் கொலை செய்த பிறகு விடிய விடிய நான் அழுதேன் என்றும் கூறினார்.
நித்தேஷ் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:- என் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். என் தாயும், நானும், என் தம்பியும் இங்கே வசித்து வந்தோம். என்னை எங்கள் பெற்றோர் கஷ்டப்பட்டு தான் படிக்க வைத்தனர். கடந்த ஆண்டு கூட கல்லூரிக்கு ஒரு லட்ச ரூபாய் கட்ட முடியாமல் சிரமப்பட்டோம். இருப்பினும் நான் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக அந்த பீசை கஷ்டப்பட்டு பெற்றோர் கட்டினர்.
நானும் எப்படியாவது நன்றாக படித்து நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னால் சரியாக படிக்க முடியவில்லை. நான் நினைத்தது போல் எனக்கு மார்க் வரவில்லை. 14 பாடங்ககளில் தோல்வி அடைந்து விட்டேன். இதனால் என்னை தாய் பத்மா கடுமையாக திட்டினார். இதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டேன். பின்னர் நண்பர்கள் என்னை சமாதானப்படுத்தி வீட்டில் கொண்டு வந்து விட்டனர்.
அதன் பிறகு அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் அனுப்புகிறார், நீ இப்படி படிக்காமல் இருக்கிறாயே என்று கூறி, படி படி என்று நச்சரித்து வந்தார். தொடர்ந்து படி படி என்று சொன்னது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அம்மாவை கொலை செய்து விட வேண்டி திட்டம் போட்டேன். அதன் பிறகு தம்பியை யார் பார்த்துக் கொள்வார் என்று கருதி அவனையும் கொண்று விட முடிவு செய்தேன்.
இதற்காக கடந்த சில நாட்களாக திட்டம் போட்டேன். மேலும் இதற்காக புதிய கத்தி, டேப் ஆகியவற்றையை வாங்கி வீட்டில் வைத்திருந்தேன். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி அன்று இரவு இருவரையும் கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி இருவரும் நன்கு தூங்கும் வரை நான் முழித்து இருந்தேன். நள்ளிரவு கடந்தும் நான் முழித்து இருந்தேன். நன்கு உறங்கிய வின்னர் முதலில் தாயை கொன்றேன். நான் வாங்கி வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன்.
பின்னர் தம்பியின் கழுத்தையும் அறுத்து கொலை செய்தேன். இதன் பிறகு இரண்டு பேரும் உடல்களையும், நான் வாங்கி வைத்திருந்த பாலித்தீன் பைகளில் தனித்தனியாக வைத்து கட்டினேன். அதற்கு பிறகு எப்படி உடல்களை வெளியே கொண்டு போய் போடுவது?.. என்று தெரியாமல் திணறினேன். அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை. அழுகை வந்துவிட்டது. விடிய விடிய அழுது கொண்டுதான் இருந்தேன்.
பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியில் சுற்றிக் கொண்டிருந்தேன். நண்பர்களுடன் சுற்றிக் கொண்டிருந்தேன். பின்னர் மகாராஜா படத்திற்கு போனேன். இரண்டு நாட்களாக இப்படியே சுற்றிக்கொண்டு இருந்தேன். ஆனால் யாரும் இதனை கண்டுபிடிக்கவில்லை. இதனால் எங்கள் பெரியம்மா மகாலட்சுமிக்கு, அம்மா போனில் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினேன். அந்த மெசேஜில் "அக்கா உன் வீட்டுக்கு வெளியே ஒரு பை இருக்கிறது. அதில் சாவி மற்றும் செல்போன் இருக்கிறது" என்று அனுப்பியிருந்தேன்.
இரண்டு நாட்களாக யாரும் இந்த சம்பவத்தை கண்டுபிடிக்காததால் வேறு வழியின்றி நானே இதை தெரியப்படுத்தினேன். இதற்குப் பிறகு எங்கும் தப்பி செல்ல எனக்கு மனம் வரவில்லை. இதனால் பீச் பக்கத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். அதற்குள் நள்ளிரவில் சென்னை போலீசார் என்னை கைது செய்து விட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். படி படி என தாய் நச்சரித்ததால் பெற்ற தாயையே கல்லூரி மாணவர் கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.











Click it and Unblock the Notifications