நான் பாஜக போகமாட்டேன்.. அவர்கள் பெரியார் வாழ்க என சொல்லட்டும்.. அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி
சென்னை: கனிமொழி பாஜகவிற்கு வந்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி பரிசீலிப்பதாக அண்ணாமலை கூறியிருந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனிமொழி நறுக் பதில் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. பாஜக கூட்டணியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே தோற்றுவிட்டார். தூத்துக்குடியில் போட்டியிட்ட கனிமொழி எம்பி மீண்டும் வெற்றி பெற்றார். இந்த நிலையில் தான் கனிமொழி மற்றும் அண்ணாமலை இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கனிமொழி பாஜகவிற்கு வந்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி பரிசீலிப்பதாக அண்ணாமலை இன்று கூறியதற்கு கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார். கனிமொழி கூறியதாவது:-
லோக்சபா தேர்தலில் மக்கள் மிக தெளிவாக ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்கள். மோடியின் ஆட்சிக்கு எதிராக கருத்தியலுக்கு எதிரான முடிவை தேர்தலில் தந்து இருக்கிறார்கள். இதை யாருமே மறுதலிக்க முடியாது. பிரிவினைவாதம், மக்களை பிரித்தாளக்கூடிய அரசியலுக்கு எதிரான ஒரு தெளிவான முடிவை மக்கள் தந்து இருக்கிறார்கள்.
எனவே இதற்கு தார்மீக பொறுப்பேற்று அங்கே இருக்கும் தலைவர்கள் தலைவணங்க வேண்டும் அதுதான் நியாயமாக இருக்கும். தேர்தல் தமிழகத்தில் நியாயமாகத்தான் நடந்துள்ளது. அதிமுகவிற்கு நான் ஆலோசனை சொல்ல முடியாது. 10 வருடத்திற்கு முன்பு பாஜக 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக பெற்றுள்ள மொத்த வாக்கு என்பது 19 சதவிகிதமாக இருந்தது.
இன்று பாஜக எங்கேயுமே ஜெயிக்கவில்லை. பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து 10 முறை பிரசாரம் செய்தார். அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்தார். இப்போதும் கூட 18 சதவிகிதம் வாக்குகள் வாங்கியுள்ளார்கள். பாஜக எத்தனையோ கோடி செலவு செய்தும் பாஜக பெறும் வாக்குகள் சரிந்து கொண்டிருக்கிறதே தவிர எந்த வளர்ச்சியையும் நான் பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, கனிமொழி பாஜகவிற்கு வந்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி பரிசீலிப்பதாக அண்ணாமலை கூறியது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கனிமொழி, "பாஜக பெரியார் வாழ்க என சொல்ல ஆரம்பிக்கட்டும். ஆனால், ஒன்று பாஜகவை வளர்க்க நான் அங்கே போக வேண்டிய அவசியம் இல்லை. திமுகதான் எனக்கு தெரிந்த இயக்கம். வளர்ந்த இயக்கம். என்னை இங்கிருந்து எதற்காகவும் அசைக்க முடியாது. அதைத்தாண்டி பாஜகவை வளர்ப்பது என் வேலை இல்லை" என்றார்.
முன்னதாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "திமுக எம்பி கனிமொழி என்ன உழைத்தார்?... அப்பா பெயரை வைத்து வாழ்ந்து வருகிறார். கருணாநிதி என்ற பெயரை தூக்கி விட்டால் கனிமொழி யார்?... பிரதமர் மோடி பற்றி பேச அவருக்கு என்ன தகுதி இருக்கு? கனிமொழி முதலில் கண்ணாடியை பார்த்து பேசி பழக வேண்டும். மோடி பற்றி பேச ஒரு தகுதி வேண்டும். அது அரை சதவீதம் கூட கனிமொழிக்கு இல்லை" என்று பேசியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த எம்பி கனிமொழி, "எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று அண்ணாமலை அடிக்கடி என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார். 2வது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக தற்போது அவருக்கு பதில் சொல்கிறேன். இந்த தகுதி கூட இல்லாத ஒரு நபர் பாஜகவுக்கு தலைவராக இங்கே நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லதல்ல" என்று கூறினார்.
இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கனிமொழிக்கு பதில் தெரிவித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "என்னுடைய அப்பா அரசியல்வாதி அல்ல. அவர் பெயர் குப்புசாமி. விவசாயம் செய்கிறார். எங்க அப்பா ஆடு மாடு மேய்க்கிறார். இதனால் நான் வெற்றி பெறுவதற்கு நேரம் ஆகும். என் அப்பா கருணாநிதியாக இருந்திருந்தால் நானும் வெற்றி பெற்றிருப்பேன். மேலும் கனிமொழி பாஜகவிற்கு வந்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது பற்றி பரிசீலிக்கிறேன்" என்று கூறினார். இந்த நிலையில் தான் அண்ணாமலை இப்படி பேசியதற்கு கனிமொழி பதில் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications