ரஜினி இதில் கவனமா இருக்க வேண்டும்? கிட்னியில் பிரச்சினையா? உண்மையை உடைத்த டாக்டர்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு என்ன பிரச்சினை? என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றி மிக தெளிவான விளக்கத்தை டாக்டர் சொக்கலிங்கம் எடுத்துக் கூறியுள்ளார்.
கடந்த மாதம் 'வேட்டையன்’ இசை வெளியீட்டு விழாவில் உற்சாகமாகப் பேசிய ரஜினியைப் பார்த்த ரசிகர்கள் யாருமே விரைவில் அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அளவுக்கு மருத்துவமனையில் சேர்க்கப்படுவார் என ஊகித்திருக்க மாட்டார்கள். ஆனால், அந்த மகிழ்ச்சியான தருணத்திற்குப் பின் அவர் உடல்நிலையில் ஒரு சின்ன சறுக்கல் ஏற்பட்டுள்ளது.

அடிவயிற்றில் ஏதோ வலியை உணர்ந்த ரஜினிகாந்த், கடந்த மூன்று நாட்கள் முன்னதாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதயத்திலிருந்து அடிவயிற்றுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்துள்ளனர். அறுவை சிகிச்சை என்பது முன்பு போல உடலைக் கிழித்துச் செய்யப்படுவதில்லை. இப்போது ஒரு சொட்டு கீறல் இல்லாமல் பல அறுவை சிகிச்சைகளைச் செய்யும் அளவுக்கு மருத்துவ உலகம் முன்னேறிவிட்டது. எனவே விரைவில் வீடு திரும்ப இருக்கிறார் ரஜினி.
அவர் உடம்பில் என்ன மாற்றம் நடந்தது? என்ன சிகிச்சை செய்யப்பட்டது என்பது பற்றி அவருக்குச் சிகிச்சை அளித்த புகழ்பெற்ற இதய நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம் விளக்கம் அளித்துள்ளார். ரஜினியே மக்களிடம் தனது நடந்த சிகிச்சை பற்றித் தெளிவாக எடுத்துச் சொல்லும்படி கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டாக்டர் சொக்கலிங்கம் பேசும்போது, "நடிகர் ரஜினிகாந்த் எனக்குக் கடந்த 50 ஆண்டுகால நண்பர். அவரைப் பல ஆண்டுகளாக அறிந்தவன் நான். இரண்டு நாட்கள் முன்னதாக அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். வயிற்று வலி என வந்தார். உடனே அவரை ஸ்கேன் செய்து பார்த்ததில் மகாதமணி என்று சொல்லக் கூடிய குழாயில் கொழுப்பு அடைப்பு ஏற்பட்டிருந்தது. உடனடியாக அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான் நேற்று மாலை அவரை சென்று பார்த்தேன். உடல்நலத்துடன் இருக்கிறார்.
என்னைப் பார்த்ததும் கைகளைப் பற்றிக்கொண்டார். வழக்கம் போல் இயல்பாக இருந்தார். நான் அவரிடம், 'எல்லா தொலைக்காட்சிகளிடம் இருந்து என்னை அழைத்து ரஜினிக்கு என்ன ஆனது?’ எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்று சொன்னேன். உடனே, 'நடந்ததைச் சொல்லுங்கள். மக்களுக்குத் தெரியட்டும். கட்டாயம் அடுத்து படங்கள் நடிக்க வருவேன் என்று சொல்லுங்கள்’ என்று ரஜினி சொன்னார்.
ரஜினிக்குச் சிகிச்சை முடிந்துவிட்டது. அவர் வீடு திரும்பியதும் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டி இருக்கும். உடனே நடிக்க முடியாது. ரஜினி மன தைரியத்தை அடித்துக்கொள்ள முடியாது. இப்போது அவருக்கு 73 வயதாகிறது. அதை உணர்ந்து தான் செயல்பட வேண்டும். ரஜினிக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்லிவிடுகிறேன். இதயத்தில் இரண்டு பாகங்கள் உள்ளன. ஒரு புறம் கெட்ட ரத்தம் வெளியேறும். மறுபுறம் நல்ல ரத்தம் வெளியேறும். இந்தப் பகுதியில்தான் பெரிய குழாய் ஒன்று இருக்கும். அதற்குப் பெயர்தான் மகா தமணி. இந்த ரத்தக்குழாய் உடல் முழுவதும் நல்ல ரத்தத்தை எடுத்துச் செல்லும். வயிற்றின் அடிப்பகுதிக்குப் போகும் இந்தக் குழாயில்தான் ரஜினிக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட குழாயில் கொழுப்பு அதிகரித்து பாதையின் அளவு சுருங்கியுள்ளது. இது வயதான காலங்களில் ஏற்படும் பிரச்சினைதான்.
முன்பு எல்லாம் அறுவை சிகிச்சை செய்து இந்த ரத்தக்குழாயில் உள்ள கொழுப்பை அகற்ற வேண்டும். இப்போது பல புதிய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அறுவை சிகிச்சை இல்லாமலே அந்தக் குழாயில் ஒரு ஸ்டென்ட் பொருத்திவிடுவோம். அதன் மூலம் ரத்தம் தடையின்றி செல்ல ஆரம்பித்துவிடும். இந்த ஸ்டென்ட் இருபது ஆண்டுகள் வரை தாங்கும். எனவே அச்சம் தேவையில்லை. அதற்கான மருந்துகளை உட்கொண்டால் போதும்” என்கிறார் இந்த டாக்டர்.
தொடர்ந்து பேசிய அவர், “ரஜினிக்கு சில ஆண்டுகள் முன்பு சிங்கப்பூரில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனால் இந்தப் பிரச்சினை வரவில்லை. சொல்லப் போனால் இதற்கு கிட்னி அறுவை சிகிச்சைக்கும் சம்பந்தமே இல்லை. இரத்தக் குழாயில் கொழுப்பு படிவது வழக்கமாக வயதாகும் போது ஏற்படுவது. சரியான தூக்கம் இன்மை, சர்க்கரையின் அளவு மாற்றம், ரத்த அழுத்தம் ஆகிய மாற்றங்களால் இது நேரலாம். ரத்தக் குழாயில் கொழுப்பு படிவது என்பது 3வயதிலிருந்தே தொடங்கிவிடும். அது வயதாகும்போதுதான் வெளிப்படும்.
ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கக் கவலைதான் காரணம். அடுத்து மன அழுத்தம். இவை இரண்டும் மிக முக்கியமாகத் தவிர்க்கப்பட்ட வேண்டும். அதற்குத்தான் உடற்பயிற்சி தேவை. சரியான உணவு. நல்ல தூக்கம். இவை கெடும்போது ரத்த குழாயில் கொழுப்பு சேர ஆரம்பிக்கும். ரஜினியைப் பொறுத்தவரை வயதும் ஒரு காரணம். அவர் இப்போது மது அருந்துவது இல்லை. புகைப்பழக்கம் இல்லை. மருத்துவர்கள் தரும் அறிவுரையைச் சரியாகக் கடைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர். எனவே பிரச்சினை இல்லை” என்கிறார்.












Click it and Unblock the Notifications