டாஸ்மாக் 1000 கோடி வழக்கில் திருப்பம்.. சங்கிலியை அறிய வேண்டாமா.. அமலாக்கத்துறை முக்கிய பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக சோதனையில் தெரிய வந்துள்ளதாக வாதிட்ட அமலாக்கத்துறை, டாஸ்மாக் ஊழியர் லஞ்சம் வாங்கினால், அதன் சங்கிலி பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் உள்ளது என்றும் அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வாதத்தின் போது கூறியிருந்தது.

சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என்று அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

Shouldn t we know the chain of events related to the Rs 1 000 crore scam in TASMAC ED main point

அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன

இவற்றின் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, விகாஸ் சிங் ஆகியோர், விசாரணையை துவங்கிய அன்றே அமலாக்கத்துறை நேரடியாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியதின் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பினர்.

சிபிஐக்கு அனுமதி இல்லை

சோதனைக்கு வந்த நாளில் முதல் தகவல் அறிக்கையை தவிர, வேறு எந்த ஆதாரங்களும் அமலாக்கத் துறை வசம் இல்லை என்று வாதிட்ட அவர், மத்திய விசாரணை அமைப்புகளுக்கு தமிழக அரசு வழங்கியிருந்த ஒப்புதல் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் திரும்ப பெற்றதை அடுத்து மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ வழக்கு பதிவு செய்ய முடியாது என்று கூறினார்.

எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை

எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை என்றும், இந்த முதல் தகவல் அறிக்கைகள் இல்லாமல் வாதங்களை முன்வைப்பது இயலாத காரியம் என்றும் கூறினார்கள்.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள்

நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த துவங்கினால் அந்த அபாயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் டாஸ்மாக் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

தூக்கி எறியப்படுவார்கள்

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நேற்று வாதிடுகையில், அமலாக்கத் துறையின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கூறினார். டாஸ்மாக்கில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அது தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் தவறு செய்தவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

குறுக்கிட்ட நீதிபதிகள்

அப்போது குறுக்கிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு மாநில அரசு அமலாக்கத் துறைக்கு உதவலாமே? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சட்டத்தை மீறி அமலாக்கத் துறை இவ்வளவு செய்த பிறகு எப்படி உதவ முடியும் என கேள்வி எழுப்பினார்.

1000 கோடி மோசடி என பேட்டி

அமலாக்கத் துறையின் சோதனை நடந்து கொண்டிருந்த போதே, டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி என ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பேட்டியளித்தார். அதற்கு என்ன அர்த்தம் எனவும் பி.எஸ்.ராமன் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தனர்.


அமலாக்கத்துறைக்கு என்ன நம்பிக்கை

இந்த நிலையில், 4வது நாளாக இன்றும் விசாரணை நடந்தது. அப்போது, அப்போது டாஸ்மாக் சார்பில் மூத்த வக்கீல் விக்ரம் சவுத்ரி மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆகியோர் வாதிட்டனர். அவர்கள் வாதிடுகையில், அமலாக்கத்துறை எப்போதும் வெளிப்படையாக இருந்தது கிடையாது. வெளிப்படையாக இருப்பதாக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் அமலாக்கத்துறை ஒளிந்து கொண்டிருக்கிறது. எந்த நம்பிக்கையின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கருதுகிறது? எதற்காக சோதனை செய்கிறோம்? என்பதை அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க வேண்டும்.

டாஸ்மாக் குறி வைக்கப்படுகிறது

அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக் நிறுவனத்தின் நற்பெயருக்கும், மறைமுகமாக தமிழ்நாடு அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டிருக்கிறது. 2007-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஆண்டு முறைகேடு கூறப்படும் நிலையில், தற்போது தான் ஞானம் வந்தது போல அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது ஏன்? என்று வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினார்கள். இன்றைக்கு டாஸ்மாக் குறிவைக்கப்படுகிறது. நாளை ஒவ்வொரு துறையும் குறிவைக்கப்படும். விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகளை அடைத்து வைத்து நள்ளிரவில் வீட்டுக்கு அனுப்பியது சரியான நடத்தையா? என்று வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.

அமலாக்கத்துறை வேலை அல்ல

அப்போது குறுக்கிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அனைத்து துறைகளிலும் ஊழலை ஒழிப்பது தானே அரசின் நோக்கம்..? என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமன், "ஊழலை ஒழிப்பதுதான் அரசின் நோக்கம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதை மாநில அரசு கவனித்துக்கொள்ளும். அமலாக்கத்துறை அல்ல" என்று கூறினார்.

அமலாக்கத்துறை பதிலடி

டாஸ்மாக் தரப்பில் மூத்த வக்கீல் விக்ரம் சவுத்ரி மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆகியோரின் வாதத்தை தொடர்ந்து, அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு தனது வாதத்தை இன்று தொடங்கினார். அவர் வாதிடுகையில், "மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. முறைகேடு நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம்.

சங்கிலி தொடர்பு என்ன

டாஸ்மாக் ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக முதல் தகவல் அறிக்கையில் இருக்கிறது. அவர்களில் சிலர் லஞ்ச பணத்தைக் கொண்டு சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் வந்தது. அதனால் தான் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கினால் அதன் சங்கிலி என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டாமா? இதற்கும் உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதை அறிந்து கொள்ள வேண்டாமா? அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் உள்ளது.. இதற்காக தான் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது என்று வாதிட்டார். வாதங்களை தொடர்ந்து வழக்கின் விசாரணையை நாளைக்கு (ஏப்ரல் 17) ஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+