சத்தமில்லாமல் மகளிர் புரட்சி! ஒரு தரப்புக்கு குஷி.. மறுதரப்புக்கு திருப்பம்! தமிழக 2026 தேர்தல் சூடு
சென்னை: ,சத்தமில்லாமல் உருவாகி வரும் ஒரு "மகளிர் புரட்சி" பற்றிதான் தமிழக அரசியல் களம் பேசப்பட்டு வருகிறது.. இதனால் தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய வியூகங்கள் இப்போதே மேலும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டன. அனைத்துக் கட்சிகளின் கணக்கீடுகளையும் தலைகீழாக மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது. ஒரு தரப்புக்கு பெரும் குஷியையும், மறுதரப்புக்கு எதிர்பாராத திருப்பத்தையும் தரப்போகும் இந்த ஆதரவு அலை, யாருக்குச் சாதகமாக வீசுகிறது? இதனை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமே வாக்கு எண்ணிக்கைக்காகத் தவம் கிடக்கும் வேளையில், வெளியாகியுள்ள தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அரசியல் களத்தில் அனலை கூட்டியுள்ளது.

வழக்கமாக 2 முனை போட்டியை கண்டு பழகிய தமிழகம், இம்முறை திமுக, அதிமுக, தவெக மற்றும் நாதக என 4 முனைப் போட்டியை சந்தித்திருக்கிறது. இந்த சூழலில் வெளியாகியுள்ள பல்வேறு நிறுவனங்களின் கணிப்புகள், மக்களின் மனவோட்டம் எந்தத் திசையில் இருக்கிறது என்பதை ஓரளவுக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
ஆளும் திமுக ஆட்சி பீடம்
அக்னி நியூஸ், மின்னம்பலம் மற்றும் ரிபப்ளிக் பி-மார்க் போன்ற பெரும்பாலான நிறுவனங்களின் கணிப்புகள் ஆளுங்கட்சியான திமுக கூட்டணிக்கே மீண்டும் ஆட்சி பீடம் ஏறும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணி சுமார் 140 முதல் 160 இடங்கள் வரை பிடித்து பெரும்பான்மையை தக்கவைக்கக்கூடும் என்பது பொதுவான பார்வையாக இருக்கிறது. இதற்கு பிரதான காரணமாகப் பார்க்கப்படுவது Index of Opposition Unity அதாவது எதிர்க்கட்சி வாக்குகளின் சிதறல்.
பொதுவாக ஆட்சிக்கு எதிரான வாக்குகள் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிடம் மட்டுமே சேர வேண்டும். ஆனால், இந்த முறை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் களம் கண்டிருப்பதால், திமுக எதிர்ப்பலை வாக்குகளை அதிமுக மற்றும் தவெக ஆகிய 2 கட்சிகளும் தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்கின்றன.
இந்த வாக்குப்பிளவு இயல்பாகவே திமுகவின் வெற்றியை எளிதாக்கும் ஒரு காரணியாக உருவெடுத்துள்ளது. பீப்புள்ஸ் பல்ஸ் கணிப்பின்படி, திமுக கூட்டணி 38.4% வாக்குகளைபெற்றாலே, அதிமுக மற்றும் தவெக பிரிக்கும் வாக்குகளால் தனிப்பெரும் இடங்களைக் கைப்பற்ற முடியும் என்று தெரிகிறது.
அதிமுகவின் கோட்டைகளும் சவால்களும்
அதிமுக கூட்டணியை பொறுத்தவரை, அவர்களுக்கு சாதகமான முடிவுகளையும் சில நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. குறிப்பாக மேற்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களில் அதிமுக வலுவான நிலையில் இருப்பதை மின்னம்பலம் போன்ற கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
பாமக உடனான கூட்டணி வட தமிழகத்தில் அதிமுகவுக்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா போன்ற நிறுவனங்கள் அதிமுகவுக்கு மிகக் குறைந்த இடங்களையே கொடுத்திருந்தாலும், கள யதார்த்தம் வேறாக இருக்கிறது. 1989 மற்றும் 1996 தவிர்த்த மற்ற எல்லா தேர்தல்களிலும் அதிமுக தனது வாக்கு வங்கியை தக்கவைத்தே வந்திருக்கிறது.
அந்த வகையில், கொங்கு மண்டலமும் வட மாவட்டங்களும் இம்முறை அதிமுகவைக் கரைசேர்க்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது.
தவெக தந்த அதிர்வுகள்
நடிகர் விஜய்யின் தவெக இந்த முறை, தேர்தலில் மிகப்பெரிய X-Factor ஆக உருவெடுத்துள்ளது. சில கணிப்புகள் தவெக 30 முதல் 40 இடங்கள் வரை வெல்லும் என்று அடித்து சொல்ல, ஆக்சிஸ் மை இந்தியா மட்டும் 120 இடங்கள் வரை வென்று ஆட்சியை பிடிக்கும் என அதிரடி கிளப்பியுள்ளது.
சென்னை மற்றும் நகர்ப்புறங்களில் தவெக இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் வாக்குகளை பெருமளவில் அறுவடை செய்திருப்பது தெரிகிறது. ஒருவேளை இக்கணிப்புகள் உண்மையானால், அது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாக அமையும்.
அண்ணாமலை - கோயம்புத்தூர் மண்டலம்
அதேபோல, தமிழக அரசியலின் மிக முக்கியக் களமாகப் பார்க்கப்படும் கொங்கு மண்டலத்தில், குறிப்பாக கோயம்புத்தூர் பகுதியில் இம்முறை கடும் போட்டி நிலவுவதை எக்ஸிட் போல் முடிவுகள் உறுதி செய்கின்றன. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்தப் பகுதியில் தீவிர கவனம் செலுத்தி வந்த நிலையில், அங்குள்ள பெண்களின் வாக்கு வங்கி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
பாரம்பரியமாக அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோவையில், ஆளுங்கட்சியின் திட்டங்கள் ஒருபுறமும், அண்ணாமலையின் தனிப்பட்ட பிரச்சாரம் மறுபுறமும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அமைதியான முறையில் பதிவாகியுள்ள பெண்களின் வாக்குகள் யாருடைய கணக்கை தலைகீழாக மாற்றப்போகிறது என்ற விவாதம் எழுந்துள்ளது.
குறிப்பாக, விலைவாசி உயர்வு மற்றும் உள்ளூர் பிரச்சனைகளை முன்வைத்து பெண்கள் அளித்த வாக்குகள், அண்ணாமலை எதிர்பார்த்த வெற்றியைத் தருமா அல்லது அவருக்கு சவாலாக அமையுமா என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸிட் போல் தந்துள்ள மாற்றம்
கருத்துக்கணிப்புகள் என்பவை மக்களின் தற்போதைய மனநிலையைப் பிரதிபலிக்கும் ஒரு கருவி மட்டுமே. ஒவ்வொரு நிறுவனமும் பின்பற்றும் வெவ்வேறு ஆய்வு முறைகளால் முடிவுகளில் பெரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
கடந்த காலங்களில் பல எக்ஸிட் போல் முடிவுகள் தலைகீழாக மாறிய சரித்திரமும் உண்டு. தமிழக வாக்காளர்கள் எப்போதும் அமைதியாகப் புரட்சியை ஏற்படுத்துபவர்கள். அவர்களின் உண்மையான தீர்ப்பு மின்னணு வாக்கு இயந்திரங்களுக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் 4 நாட்களில் தமிழகத்தின் அடுத்த 5 வருட பயணத்தை தீர்மானிக்கப் போகும் அந்த ஒரிஜினல் ரிசல்ட் தெரிந்துவிடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!














Click it and Unblock the Notifications