தங்கத்தை விடுங்க.. ஜெட் வேகத்தில் வெள்ளி விலை.. கடும் உயர்வு ஏன்? நிபுணர்கள் விளக்கம்
சென்னை: தங்கம் விலை தான் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது என்றால், வெள்ளி விலையும் (Silver Price) போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.29-ம், கிலோவுக்கு ரூ.29,000-ம் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை இப்படி தாறுமாறாக உயர்வதற்கான காரணம் என்ன? வரும் காலத்திலாவது வெள்ளி விலை குறையுமா? என்பது குறித்து நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
தங்கம் விலை தொடர்ச்சியாகவே அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டே தங்கம் விலை கடுமையாக உயர்ந்த போதிலும், இந்த ஆண்டில் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு தங்கம் விலை தினந்தினம் உச்சம் தொட்டு வருகிறது. இனி தங்கத்தை எல்லாம் கனவில்தான் வாங்க முடியுமோ என எண்ணும் அளவிற்கு விலை உச்சம் தொட்டு வருகிறது.

போட்டி போட்டு உயரும் வெள்ளி விலை
தங்கம் விலைதான் இப்படி டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது என்றால், வெள்ளி விலை போட்டி போட்டுக்கொண்டு விலை உயர்ந்து வருகிறது. அதிலும் சமீப நாட்களாக வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டு வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.99 ஆகவும், ஒரு கிலோ ரூ.99 ஆயிரமாகவும் இருந்தது. ஆனால், நடப்பாண்டு வெள்ளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து அதிகரிக்கும்
குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.29-ம், கிலோவுக்கு ரூ.29,000-மும் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், இந்த விலை உயர்வு இதோடு நிற்கப் போவதில்லை. தொடர்ந்து அதிகரிக்கும் என்பதே நகை வியாபாரிகள் கூறும் கருத்தாக உள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தங்கத்தின் மீது முதலீடு அதிகரிப்பு, சர்வதேச பொருளாதார சூழ்நிலை, போர் பதற்றம் என பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் வெள்ளி விலை உயர்வுக்கான காரணம் என்ன? வெள்ளி விலை இப்படி தாறுமாறாக உயர்வது ஏன்? என்பது பலருக்கும் குழப்பமானதாகவே உள்ளது.
வெள்ளி விலை உயர்வு ஏன்?
வெள்ளியும் தங்கத்தைப் போலவே ஒரு உலோகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தங்கத்தின் மதிப்பைவிட வெள்ளி குறைவாக இருந்தாலும், அதன் பயன்பாடு மின்சாதனங்களில் அதிகளவில் உள்ளது. விமான உற்பத்திப் பாகங்கள், மின்சார வாகனங்கள், சூரிய மின்சார உற்பத்தி, மின் கடத்திகள் போன்ற பல உற்பத்திகளில் வெள்ளி முக்கிய பங்கு வகிக்கிறது.
தற்போது மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், உலக முதலீட்டாளர்களின் கவனம் வெள்ளியின் பக்கம் திரும்பியுள்ளது. இதன் காரணமாகவே வெள்ளியின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. வெள்ளியை அதிகளவில் வாங்கி குவித்து முதலீடு செய்து வருகிறார்கள்.
இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்
எதிர்காலத்தில் தங்கத்தை விட வெள்ளியில் லாபம் அதிகம் கிடைக்கும் என முதலீட்டாளர்கள் கருதுவதால், அதன் பக்கம் முதலீடு அதிகரித்துள்ளது. இத்தகைய காரணிகளே வெள்ளி விலை உயர்வுக்கு காரணம் என பொருளாதார நிபுணர்கள் வாதிடுகின்றனர்.
வெள்ளி விலை இப்படியே உயர்ந்து கொண்டு சென்றால், இனி குறைய வாய்ப்பே இல்லையா என கேள்வி எழும் நிலையில், நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷாலானி இது குறித்து கூறியதாவது:- "வெள்ளி விலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை. வரும் நாட்களில் இதைவிட பல மடங்கு அதன் விலை கூடும்" என்றார்.












Click it and Unblock the Notifications