முதலமைச்சர் ஸ்டாலினை வீடு தேடி வந்து சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர்! ஆக்கப்பூர்வமான ஆலோசனை!
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினை அவரது வீடு தேடி சென்று சந்தித்து பேசியிருக்கிறார் சிங்கப்பூர் நாட்டு போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரன்.
இந்தச் சந்திப்பின் போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்.
இதனிடையே சிங்கப்பூர் நாட்டு அமைச்சருடனான சந்திப்பை அற்புதமான தருணம் எனக் குறிப்பிட்டு பதிவு வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

சிங்கப்பூர் அமைச்சர்
சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சராக இருப்பவர் ஈஸ்வரன். இவர் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்காக சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் மூலம் பல நாட்களுக்கு முன்னர் முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து இது தொடர்பான தகவலை தலைமைச் செயலாளர் கவனத்திற்கும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கவனத்திற்கும் சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் கொண்டு சென்றிருக்கின்றனர்.

முதல்வர் இல்லம்
அவர்களும் முதலமைச்சர் ஸ்டாலினிடத்தில் இந்த தகவலை தெரியப்படுத்தி இருக்கின்றனர். இதையடுத்து இன்று சந்தித்து பேச நேரம் ஒதுக்கப்பட்டு அந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசுவதற்காக இன்று அவரது வீட்டுக்கே சென்றிருக்கிறார் சிங்கப்பூர் நாட்டு அமைச்சர் ஈஸ்வரன். தமிழகம் மற்றும் சிங்கப்பூர் இடையேயான பொருளாதார உறவுகள் பற்றி இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன.

அமைச்சர்கள் இருவர்
அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜனும், தங்கம் தென்னரசுவும் தொழில்துறையிலும், தமிழகத்தின் வளர்ச்சியிலும் திமுக அரசும், முதலமைச்சர் ஸ்டாலினும் காட்டும் ஆர்வத்தையும் வேகத்தையும் எடுத்துக் கூறியிருக்கின்றனர். அதனை கவனமாக கேட்டுக்கொண்ட சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன், தமிழகம் சிங்கப்பூர் இடையேயான பண்பாடு மற்றும் வர்த்தகம் பற்றி ஆலோசித்திருக்கிறார்.

ஸ்டாலின் பதிவு
இதனிடையே இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது ''சிங்கப்பூரின் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் வர்த்தக தொடர்பு அமைச்சர் திரு. ஈஸ்வரன் அவர்களை சந்தித்தது ஒரு அற்புதமான தருணம். தமிழ்நாட்டிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பண்பாடு மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தினோம்.''












Click it and Unblock the Notifications