தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல புதிய திட்டங்கள்! முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டிய சிங்கப்பூர் அமைச்சர்!
சென்னை: மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறீர்கள் எனக் கூறி முதலமைச்சர் ஸ்டாலினை சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றம் வர்த்தகத்துறை அமைச்சர் ஈஸ்வரன் பாராட்டியுள்ளார்.
மேலும், அக்டோபர் மாதம் சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் Fintech மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசின் குழுவை அனுப்பி வைக்குமாறு ஈஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள குறிப்பு வருமாறு;

சிங்கப்பூர் நாட்டிற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் Temasek, Sembcorp, CapitaLand ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று அழைப்புவிடுத்தார்.
அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் நாட்டின் போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ஈஸ்வரனை சந்தித்த ஸ்டாலின், பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றி பேசினார்.
புதிய தொழில் முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்வது குறித்து உரையாடியதோடு, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
இச்சந்திப்பின்போது, வழக்கமான முதலீடுகள் தவிர பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது குறித்தும், செமிகண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் தயாரிப்பிற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஈஸ்வரன் விவாதித்தார்.
மேலும் சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாட்டில் பசுமை சக்தியை உருவாக்குவது குறித்து பேசி வருவதாக சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரனிடம் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக, சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் தனது பாராட்டுகளை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications