ஒரு லேப்டாப் ரூ.20 ஆயிரம்.. 20 லட்சம் மாணவர்களுக்கு கொடுக்க போகிறோம்.. தங்கம் தென்னரசு அறிவிப்பு!
சென்னை: மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான தரமான லேப்டாப் அளிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சட்டசபையில் ரூ.10 ஆயிரம் செலவில் மாணவர்களுக்கு எப்படி லேப்டாப் வழங்க முடியும் என்று அதிமுக உறுப்பினர் தங்கமணி எழுப்பிய கேள்விக்கு, லேப்டாப் வழங்குவதற்கு முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவையென்றால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டு வந்த லேப்டாப் வழங்கும் திட்டம், 2019ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அதிமுக ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் அளிக்கப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு தரப்பினரும் மாணவர்களுக்கான லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் அதிமுக ஆட்சி காலத்திலேயே லேப்டாப் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டிருந்தாலும், அதனை திமுக ஆட்சியிலேயே நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பட்ஜெட்டிலேயே லேப்டாப் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தில் அதிமுக உறுப்பினர் தங்கமணி, ரூ.10 ஆயிரம் மதிப்பில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் லேப்டாப் வழங்குவதற்கு அடுத்த ஆண்டும் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லேப்டாப்-ன் மதிப்பு ரூ.20 ஆயிரமாக இருக்கும் என்று அறிவித்தார். தொடர்ந்து, அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் விருப்பப்பட்டால் டேப் அல்லது லேப்டாப் அளிக்கப்படும்.
அதேபோல் தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலமாக மாணவர்களுக்கு தரமான லேப்டாப் ரூ.20 ஆயிரம் செலவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மாணவர்களுக்கு புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது லேப்டாப் திட்டமும் செயல்பாட்டுக்கு வரவிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications