SIR பணிகள் தீவிரம்.. ரொம்ப உஷாரா இருங்க.. ஒருவேளை உங்கள் பெயர் நீக்கப்பட்டால்.. உடனே இதை பண்ணுங்க
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஒருவேளை உங்களின் பெயர் நீக்கப்பட்டால் என்ன செய்யலாம் என்பது தொடர்பான விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார், 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் இரண்டாம் கட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

முதல் கட்டப் பணிகள் பீகாரில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்டம் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள், சத்தீஸ்கர், கோவா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் SIR
முதற்கட்டமாக, இந்த மாநிலங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர்கள் 2002, 2003, 2004 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடப்படும். இந்வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 அன்று வெளியிடப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும்.
அக்டோபர் 27, 2025 நிலவரப்படி ஒவ்வொரு வாக்காளருக்கும் தனிப்பட்ட எண்ணிடப்பட்ட படிவங்களை தேர்தல் பதிவு அலுவலர்கள் (EROs) மற்றும் உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள் (AEROs) அச்சிடுவார்கள். இந்த படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் (BLOs) அனைத்து வாக்காளர்களுக்கும் விநியோகிக்கப்படும். படிவங்களில் தற்போதைய வாக்காளர் பட்டியலிலிருந்து தேவையான அனைத்து விவரங்களும் இருக்கும்.
அதன்பின்னர், BLO-க்கள் படிவங்களை தற்போதுள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கத் தொடங்குவார்கள். படிவங்களில் பெயருள்ள அனைவரும் தங்கள் பெயர் 2003 வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். பெயர் இருந்தால், கூடுதல் ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்க தேவையில்லை.
பெயர்கள் பட்டியலில் இல்லாதவர்கள், ஆனால் அவர்களது பெற்றோரின் பெயர்கள் இருந்தால், அவர்களும் கூடுதல் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை. அடையாளச் சான்று மட்டும் போதுமானது. 2002/03/04 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் சரிபார்ப்பதற்காகக் கிடைக்கும்.
வாக்காளர் பட்டியல் எப்போது வெளியாகும்?
இந்த படிவங்களை சோதனை செய்த பின் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 அன்று வெளியிடப்படும். அதன் பின்னர், நீக்கப்படுவதற்கு எதிரான கோரிக்கைகளும், சேர்க்கப்படுவதற்கு எதிரான மூன்றாம் தரப்பு ஆட்சேபனைகளும் டிசம்பர் 9 முதல் ஜனவரி 8, 2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும். இந்தக் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்த விசாரணைகள் டிசம்பர் 9 அன்று தொடங்கி, ஜனவரி 31, 2026 க்குள் முடிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும்.
பெயர் நீக்கப்படும்- நீக்கப்பட்டால் என்ன செய்வது?
SIR-காக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும்.. முகவரி மாற்றம் செய்திருந்தாலும் அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறாது என்று அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று தெரிவித்தார். அதாவது நீங்கள் ஆவணத்தை வாங்க வீட்டில் இல்லாமல் போய், அதை நிரப்பி முடியாமல் போனால் உங்கள் பெயர் நீக்கப்படும்.
ஆனால் இதில் மேல்முறையீடு செய்ய முடியும். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள விளக்கத்தில், இந்திய தேர்தல் ஆணைய 27.10.2025 ஆம் நாளிட்ட கடிதம் எண் 23/2025-ERS (Vol.II)-இன் படி வாக்காளர் பதிவு அலுவலர் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களையும் சேர்த்து, வரைவு வாக்காளர் பட்டியலை தயாரிப்பார்.
மேல்முறையீடு செய்யும் வாய்ப்பு உள்ளது
வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் நிரப்பப்பட்ட வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை அளிக்க இயலாத வாக்காளர் குறித்த நேர்வில், படிவம் 6 உடன் குறிப்பிடப்பட்டுள்ள உறுதி மொழி படிவத்தையும் கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளுக்கு அளிக்கப்பட்ட காலமான 9.12.2025 முதல் 8.1.2026 வரை, தங்கள் பெயரை சேர்ப்பதற்கு தாக்கல் செய்யலாம்.
1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் கீழ், 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 24(a) பிரிவின் படி, வாக்காளர் பதிவு அலுவலரின் யாதொரு முடிவிற்கும் எதிராக, மாவட்ட நடுவரிடம் மேல்முறையீடு செய்யலாம். மேலும், முதல் மேல்முறையீட்டு அதிகாரி வழங்கிய முடிவிற்கு எதிராக, 24(b) ஆம் பிரிவின் கீழ், தலைமை தேர்தல் அதிகாரியிடம் இரண்டாம் மேல்முறையீடு செய்யலாம். இத்தகைய மேல்முறையீடுகள் 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளைச் சேர்ந்த, 27 ஆம் விதியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும், என்று கூறி உள்ளது.












Click it and Unblock the Notifications