"சார்" பணிகள்.. வாடகை வீட்டு முகவரியை வாக்காளர் அட்டையில் வைத்து இருந்தால் என்ன நடக்கும்?
சென்னை: சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்காக (SIR) அலுவலர்கள் வீடு வீடாக உறுதிமொழிப் படிவங்களை வழங்கி வருகிறார்கள். இந்த சூழலில் பெருநகரங்களில் வாடகை வீட்டு முகவரியில் வோட்டர் ஐடி எடுத்து வைத்து இருப்பவர்கள் வீடு மாறி சென்றால் என்ன நடக்கும்? என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. இது பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் நேற்று முதல் தொடங்கி உள்ளன. நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக விண்ணப்பங்கள் வழங்கி வருகின்றனர்.

வாக்காளர் பட்டியல்
வீடு வீடாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செல்லும்போது, முன்கூட்டியே அந்த தெரு மக்களுக்கு முன் அறிவிப்பு செய்யப்பட்டது. ஊழியர்கள் விண்ணப்பத்துடன் வீடு வீடாக வரும்போது அவர்களுடன் கட்சி நிர்வாகிகளும் உடன் வந்தனர். 2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை வைத்து அதன் அடிப்படையில் விண்ணப்ப படிவங்கள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
புதிய வாக்காளராக பெயரை சேர்ப்பதற்காக படிவம் 6-ஐ நிரப்பி தர விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதன்படி, 2002 அல்லது 2005 வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதை தெரிவிக்கலாம். உரிய ஆவணங்களை காட்டி விண்ணப்பிக்கலாம் என்று மக்களிடம் கூறினர். டிசம்பர் 9 ஆம் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்படுகிறது.
வாடகை வீட்டில் இருக்கும் மக்கள்
இதில் பெயர் இடம் பெற்று இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆட்சேபனை இருந்தால் பெறப்பட்டு அதன் மீது விசாரணை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதே நேரத்தில் பெருநகரங்களில் அடிக்கடி வீடு மாறுபவர்கள் வீட்டு முகவரியை சரியாக கொடுக்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்பது குறித்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அதாவது, சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை வீட்டில் இருக்கும் மக்கள், தங்கள் வாக்காளர் அட்டை முகவரிகளை சொந்த ஊரில் இருந்து குடிபெயர்ந்த வாடகை வீட்டு முகவரிக்கு மாற்றியிருப்பதை பார்க்க முடிகிறது. பிறகு அந்த வீட்டில் இருந்து வேறு வீட்டிற்கு மாறியிருப்பார்கள். முதலில் இருந்த வாடகை வீட்டு முகவரியில் வாக்காளர் அட்டை பெற்று இருப்பார்கள். அதே நேரத்தில் வாக்காளர் அட்டை முகவரியை மாற்றம் செய்யாமல் இருப்பார்கள்.
'மிஸ்சிங்' என பதிவு
இப்படி இருந்தால், அவரின் வாக்காளர் அட்டை முகவரி உள்ள வாடகை வீட்டிற்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் செல்வார்கள். அங்கு அவர் இல்லை என்றால், அந்த வீட்டின் உரிமையாளரிடம், இந்த முகவரியில் உள்ள வாக்காளர் குறித்து விசாரிப்பார்கள்.
அவர் இங்கு இருக்கிறார் என்று வீட்டின் உரிமையாளர் தெரிவித்தால், வீட்டின் உரிமையாளரிடம் வாடகை வீட்டுதாரரின் விண்ணப்பத்தை வழங்கிவிட்டு செல்வார்கள். இங்கு வரமாட்டார், ஏற்கனவே இடம் பெயர்ந்துவிட்டார் என்று தெரிவித்தால், விண்ணப்பத்தில் 'மிஸ்சிங்' என பதிவு செய்து திருப்பி அனுப்பிவிடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications