தேர்தல் ஆணையத்தின் SSRக்கும் SIRக்கும் என்ன வித்தியாசம்! பறிபோகும் வாக்குகள்? உண்மையில் சிக்கலா?
சென்னை: பீகாரைத் தொடர்ந்து தமிழகத்திலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ள இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் சிறப்பு சுருக்க முறை பட்டியல் தயாராகும் நிலையில், அதற்கும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்..
இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 'சிறப்பு சுருக்க முறை பட்டியல்' என்ற பெயரில் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும். இந்த ஆண்டு திருத்தப் பணிகள் சாதாரண முறையிலேயே நடந்து கொண்டிருக்கும்.
இந்நிலையில், தான் "சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்" அல்லது SIR எனப்படும் ஒரு திட்டத்தை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முன்வந்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கடும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிறப்பு சுருக்க முறை பட்டியல்
சாதாரணமாகப் பார்த்தால், வருடாவருடம் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படும். அந்த பட்டியலில் பெயர் இல்லையெனில் விண்ணப்பித்து சேர்க்கலாம். பெயரில் ஏதேனும் பிழை இருந்தால் திருத்திக் கொள்ளலாம். பெயர் தவறுதலாக நீக்கப்பட்டிருந்தால் மீண்டும் சேர்க்கலாம். இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். அதிகாரிகள் வீடு வீடாகவும் சென்று சரிபார்ப்பார்கள். பின்னர் டிசம்பர் மாதத்தில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜனவரி மாதத்தில் இறுதி பட்டியல் வெளியாகும். இது எல்லோருக்கும் தெரிந்த சாதாரண செயல்முறை.
SIR என்றால் என்ன?
இந்த முறை ஒரு பெரிய மாற்றமே. SIR என்பது பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் மிகச்சிறப்பு நடவடிக்கை. இதில் வாக்காளர் பட்டியல் தற்காலிகமாக நிறுத்தப்படலாம். வீடு வீடாக மூன்று முறை சென்று அதிகாரிகள் சரிபாரிப்பார்கள். அந்த நேரத்தில் புதிய பெயர் சேர்க்கலாம், திருத்தம் செய்யலாம் என்பதில்லை. மாறாக, பட்டியலை சுத்திகரிப்பதே முக்கிய நோக்கம். அதாவது போலி வாக்காளர் பெயர்களை நீக்குவதே ஆணையத்தின் வாதம்.
பீகார் SIR
இதே முறையை அண்மையில் பீகார் மாநிலத்தில் செயல்படுத்தியபோது, சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். இதனால் அங்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்றும், மக்கள் வாக்குரிமையை திருடும் முயற்சி என்றும் கண்டனம் தெரிவித்தன.
மு.க. ஸ்டாலின்
அந்த சர்ச்சை அடங்கும் முன்பே, இதே முறையை தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் தொடர திட்டமிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு முதலாவதாக எதிர்ப்பு தெரிவித்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். "உழைக்கும் மக்கள், பட்டியலினத்தினர், சிறுபான்மையினர், பெண்கள் போன்றவர்களின் பெயரை நீக்கி பாஜக மற்றும் அதிமுகக்கு லாபம் கிடைக்க செய்யும் முயற்சி இது," என்று அவர் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். "மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க திமுக சட்ட ரீதியாகவும், மக்கள் மத்தியில் நின்றும் எதிர்க்கும்," என்றும் கூறினார்.
அதிமுக என்ன சொல்கிறது?
அதிமுக இதை எதிர்க்கவில்லை. தேர்தல் பட்டியல் தூய்மைப்படுத்துவது தவறல்ல எனும் நிலைப்பாட்டில் உள்ளது. இதனால் இந்த விவகாரம் அரசியல் வடிவம் பெற்றுள்ளது. மொத்தத்தில், வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் ஒருபுறம் இருந்தாலும், அதே நேரத்தில் மக்கள் பெயர்கள் தவறுதலாக நீக்கப்படுவார்கள் என்ற அச்சமும் பெரிது. குறிப்பாக ஏழை மக்கள், இடம் மாறி வேலை பார்க்கும் தொழிலாளர்கள், பழங்குடியினர், முதியவர்கள் போன்றோருக்கு சிக்கல் ஏற்படலாம் என்று எதிர்க்கட்சிகள் எச்சரிக்கின்றன. தமிழகத்தில் இது குறித்து தீவிர விவாதம் நடக்கிறது. இறுதியில், வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டும், ஆனால் அதற்காக ஒருவரின் வாக்குரிமை பாதிக்கப்படக் கூடாது என்பது மக்களின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications