என்னங்க ‘SIR' ஒரே குழப்பமா இருக்கு! தலையை பிய்த்துக் கொள்ளும் வாக்காளர்கள்! எஸ்கேப்பாகும் BLOக்கள்!
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நவம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 68,000க்கும் மேற்பட்ட பிஎல்ஒ எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடுதோறும் சென்று கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி வருகின்றனர். ஆனால், இந்த எஸ்ஐஆர் பணியில் பல இடங்களில் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. சில வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே இதற்கான விளக்கம் தெரியாத நிலையில், ஆயிரக்கணக்கான வாக்குகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள 234 சட்டப்சபைத் தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பணியின் ஒரு பகுதியாக, SIR (Special Intensive Revision) எனப்படும் கணக்கீட்டு படிவங்கள் வீடுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய அல்லது நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
SIR வாக்காளர் பட்டியல்
இந்நிலையில், பல இடங்களில் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் புதுப்பிப்புக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவங்களை நிரப்புவதில் பலரும் சிக்கலில் சிக்கியிருக்கிறார்கள். குறிப்பாக கிராமப்புறங்களில், "இந்த படிவத்தை எப்படி நிரப்புவது, எங்கு பழைய விவரங்களை பெறுவது" என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. வாக்காளர் கணக்கீட்டு படிவத்தில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில், வாக்காளர் பற்றிய தகவல்கள் (பெயர், பிறந்த தேதி, ஆதார் எண், கைப்பேசி எண், பெற்றோர் பெயர், வாழ்க்கைத்துணை பெயர்) கேட்கப்படுகிறது.
வாக்காளர்கள் குழப்பம்
இரண்டாவது பிரிவில், 2002 முதல் 2005 வரை நடந்த முந்தைய திருத்தத்தில் இருந்த விவரங்கள் கேட்கப்படுகிறது. மூன்றாவது பிரிவில், அந்த உறவினர்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை எழுத வேண்டும். இதில்தான் முக்கிய பிரச்னை. 2002, 2005 ஆண்டுகளில் எந்த தகவல்கள் சேர்க்கப்பட்டன என்பதை ஒரு சாதாரண வாக்காளர் எவ்வாறு நினைவில் வைத்திருப்பார்? வாக்காளர் இணையதளத்தில் பழைய பட்டியலை பார்க்க முடிந்தாலும், கிராமப்புறங்களில் இணைய வசதி குறைவாக இருப்பதால் அது சாத்தியமில்லை.
வாக்குச்சாவடி அலுவலர்கள்
அதிகாரிகள், பிஎல்ஓக்கள் (வாக்குச்சாவடி அலுவலர்கள்) உதவி செய்வார்கள்" என கூறினாலும், நடைமுறையில் பல இடங்களில் அவர்கள் உதவுவதில்லை என்ற குற்றச்சாட்டு வாக்காளர்களிடமிருந்து எழுந்துள்ளது. முந்தைய தகவல்களை நீங்களே நிரப்புங்கள் என்று கூறிவிட்டு போய்விடுவதாகவும் புகார் கூறப்படுகிறது. இன்னொரு சிக்கல், வீடு மாறிய வாக்காளர்களுக்கேற்பும். பழைய முகவரியில் இல்லாதவர்கள் பற்றிய தகவலை பக்கத்து வீட்டு நபர் அளிக்காவிட்டால், அங்கு வாக்காளர் இல்லை என்று பதிவு செய்யப்படும் அபாயம் உள்ளது. இதனால் பலரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலை உருவாகும்.
வாக்காளர்கள் புகார்
முந்தைய விவரங்கள் பொருந்தவில்லை என்றால், பிறந்த தேதி மற்றும் இடத்தை உறுதி செய்யும் ஆவணங்களை (பாஸ்போர்ட், பிறப்புச் சான்றிதழ், கல்வி சான்றிதழ், அரசு அடையாள அட்டை) அளிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. "20 ஆண்டுகளுக்கு முன் தகவல்களை ஏன் கேட்கிறார்கள்? தற்போதைய பட்டியல் ஏற்கனவே ஆணையத்திடம் உள்ளது அல்லவா?" என வாக்காளர்களும், அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்புகின்றன. இதற்கு பதிலாக, "பழைய விவரங்களை ஒப்பிட்டு தவறுகளைத் திருத்துவதே எஸ்ஐஆரின் நோக்கம்" என அதிகாரிகள் விளக்குகின்றனர்.
எஸ்ஐஆர் பணி
எஸ்ஐஆர் பணி வாக்காளர் பட்டியலை துல்லியமாக்கும் முயற்சியாக இருந்தாலும், நடைமுறையில் வாக்காளர்களுக்கு குழப்பம் மற்றும் சிரமம் அளிக்கிறது என்பதே களநிலவரம். வாக்காளர்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்க்கும் விதமாக அதிகாரிகள் தெளிவான விளக்கங்களை வழங்குவது அவசியம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையேல் பீகாரைப் போல் தமிழகத்திலும் லட்சக்கணக்கான வாக்குகள் பறிபோகும் சூழல் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications