இரண்டு உலக சாதனைகள்.. தமிழக அரசு உருவாக்கிய ‘சிற்பி’கள்... இது 5 ஆயிரம் மாணவர்களின் ரியல் ஸ்டோரி
சென்னை: ஒருவழியாக டார்கெட்டை தட்டித் தூக்கி இருக்கிறான் 'சிற்பி'. வகுப்பறை பாடப் புத்தகத்தைக் கடந்து, வானம் வரை உள்ள வாழ்வியல் அனுபவங்களை நேரடியாக மாணவர்களுக்கு வழங்குவதுதான் இத்திட்டத்தின் டார்கெட். அதை முழுமையாக எட்டிப் பிடித்திருக்கிறார்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள். இந்த 'திராவிட மாடல்' ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட தனித்துவமான திட்டம் என இதைத் தயங்காமல் சொல்லலாம்.
ஒரு அரசுப் பள்ளியிலிருந்து 50 மாணவர்கள். மொத்தமாக 100 பள்ளிகள். ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் பேர் எனச் சென்னை முழுக்க இயங்கி வந்த அரசுப் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு 'சிற்பி' திட்டத்தில் இணைக்கப்பட்டார்கள்.

இன்று அந்த 5 ஆயிரம் பிள்ளைகளும் பாடப் புத்தகத்தைத் தாண்டி, பல அனுபவங்களைப் பெற்று பள்ளிக்குத் திரும்பி இருக்கிறார்கள். சில தினங்கள் முன் 'சிற்பி' திட்டத்திற்கான நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார்.

நேரு ஸ்டேடியம் முழுக்க 'சிற்பி'கள் நிறைந்திருந்தார்கள். அவர்கள் மத்தியில் ஸ்டாலின், "மாணவர்கள் படிப்பில் முதல் மதிப்பெண் எடுப்பதைப் போன்றே, ஒழுக்கத்திலும் பொறுப்பிலும் முதன்மையானவர்களாக மாற்றுவதற்காகத்தான் இந்த 'சிற்பி' திட்டம்.

இதன் மூலம் குற்றமற்ற சிறந்த இளம் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று அறிவித்தோம். அதனைத் தொடர்ந்து, 2,558 மாணவிகள், 2,442 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் மூலம் சிறந்த பொறுப்புள்ள சீர்மிகு சிற்பிகளாக இன்றைக்கு நீங்கள் எல்லாம் உருவாகி இருக்கிறீர்கள்" என்று உணர்வுபூர்வமாகப் பேசினார்.

முதல்வர் சொன்னதைப் போலவே சிற்பி செல்வங்கள் காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்காக முன்முயற்சிகள் எடுத்துள்ளனர். அதைவிடச் சிறப்பான காரியமாக 5 லட்சம் விதைப் பந்துகளைத் தயாரித்து வனத்துறையினரிடம் வழங்கியுள்ளனர். மேற்கொண்டு 5 ஆயிரம் மரக் கன்றுகளைச் சென்னை முழுவதிலும் பரவலாக நட்டுள்ளனர். இது மாணவர்கள் செய்த உலக சாதனை.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக உழைத்த சில ஆசிரியர் மற்றும் ஆசிரியை எனப் பல தரப்பினருடன் பேசினோம். அவர்கள் பெற்றது என்ன? விவரித்தார்கள் அவர்கள்.
ஆசிரியை புனிதா, "ஆசிரியர்கள்தான் பிள்ளைகளின் 2வது பெற்றோர் எனச் சொல்வார்கள். காலை முதல் மாலை வரை பிள்ளைகள் எங்களோடுதான் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். பள்ளிப்பருவத்தில் அவர்கள் பெற்றோருடன் இருக்கும் நேரம் மிகக் குறைவு. அதனால்தான் எங்களை 2வது பெற்றோர் என்கின்றனர்.

Students in Responsible Police Initiatives என்பதன் சுருக்கம்தான் SIRPI. இதுவரை மாணவர்களின் ஒழுக்கத்தை நெறிப்படுத்துவதைப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து செய்து வந்தார்கள். இத்திட்டத்தில் காவல்துறையும் இணைந்து மாணவர்களை ஒழுக்கத்தில் சிறந்து விளங்க உதவி செய்யத் தொடங்கியிருக்கிறது.

பொதுவாக மாணவர்கள் காவல்துறையைக் கண்டாலே பயப்படவே செய்வார்கள். அந்த அச்சத்தில் உண்மை இல்லை என்பதை இத்திட்டத்தின் மூலம் நாங்களும் மாணவர்களும் உணர்ந்துள்ளோம். 'காவல்துறை உங்களின் நண்பன்' என்பதை நேரில் நாங்கள் உணரும்படி இருந்தது காவல்துறையினரின் அரவணைப்பு.
மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கும்போது பெரிய பெரிய காவல்துறை அதிகாரிகள்கூட மிக அக்கரையோடு, கனிவாக நடந்து கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் பிள்ளைகளுக்கு வகுப்பு நடக்கும். அத்தனைப் பிள்ளைகளிடமும் முகம் கோணாமல் காவல்துறையினர் நடந்துகொண்டனர். அந்த வகுப்புகளில் பிள்ளைகளுக்கு எது 'குட் டச்'? எது 'பேட் அச்?' எனப் பலவற்றைப் பக்குவமாகப் புரியவைத்தார்கள். அத்துடன் மன ஆரோக்கியத்தைக் காப்பாற்றும் வகையில் யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன. அதேபோல், கராத்தே போன்ற தற்காப்புக் கலைகளையும் பழக்கினார்கள்.
மேலும் பொது அறிவு விஷயங்கள் அவர்களுக்குக் கற்றுத்தரப்பட்டன. குறிப்பாக ஆன்லைன் மூலம் நடக்கும் மோசடிகள் பற்றிய விழிப்புணர்ச்சியை மிகத் தெளிவாகச் சொல்லிக் கொடுத்தார்கள். இன்றைய காலத்தில் இது மிகமிக பயனுள்ளது.
இப்படி எந்தெந்த வகைகளில் எல்லாம் பிள்ளைகளை நல் ஒழுக்கப்படுத்த முடியுமோ, அந்தந்த வகையில் எல்லாம் பல விஷயங்களைக் கற்றுத் தந்தார்கள். இதைக் கற்றுக்கொண்ட எங்களது பிள்ளைகள் எதிர்காலத்தில் மிகத் தெளிவான தலைமுறையாக வளருவார்கள் என உறுதியாக நம்புகிறோம்" என்கிறார்.
தீ விபத்து ஏற்பட்டால் அதைத் தடுப்பதற்கான தற்காப்பு பயிற்சி, சாலை விதிகளைப் புரிந்துகொண்டு அதைக் கடைப்பிடிப்பதற்கான பயிற்சி, பாலியல் ரீதியாக வரும் சீண்டல்களை எதிர்கொண்டு தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான பயிற்சி, தடைகளைக் கடந்து மன உறுதியோடு நிற்பதற்கான மனவளப் பயிற்சி எனப் பலவற்றைக் கற்றுத் தேறியுள்ளனர் சிற்பி குழுவினர்.
முக்கியமாக ஆணுக்கு நிகர் பெண் என்பதை உணர வைத்துள்ளது மிக இந்தத் திட்டம்.
இந்தப் பயிற்சி திட்டத்தில் தற்காப்புக் கலைகளைத் தாண்டி, குழந்தைகள் வேறு சில விஷயங்களிலும் புதிய உற்சாகத்தைப் பெற்றதாகக் குறிப்பிட்டுச் சொல்ல முன்வந்த ஆசிரியை புனிதா, "எங்கள் பிள்ளைகள் அனைவரும் வறுமைக் கோட்டுக்குக் கீழாக உள்ளவர்கள். அவர்கள் சின்ன சின்ன விஷயங்கள்கூட அவர்களுக்கு அபூர்வம்தான்.
குழந்தைகள் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது அவர்கள் உடல்ரீதியாகச் சோர்ந்துபோய்விடக் கூடாது என்பதற்கான ஜூஸ், பழவகைகள், சத்து உருண்டை, எள்ளு உருண்டை எனப் பல பண்டங்களைக் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த பல உணவுப் பொருட்களை இதுவரை எங்கள் குழந்தைகள் பார்த்ததே இல்லை. குறிப்பாக ட்ராகன் ஃபுரூட்ஸ் போன்றவற்றை முதன்முறையாகப் பார்த்த பிள்ளைகள் மிக உற்சாகமாக அதனை உண்டார்கள்" என்கிறார்.
இந்தத் திட்டத்தில் மொத்தம் 5 ஆயிரம் பிள்ளைகள் அடையாளம் கண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பள்ளிக்கு 50 பிள்ளைகள் எனத் தேர்ந்தெடுத்து மொத்தம் 100 பள்ளிகளுக்கு 5 ஆயிரம். அவர்களுக்குப் பொது அறிவு பற்றிய தேடல் மற்றும் விழிப்புணர்ச்சி உருவாக வேண்டும் என்பதற்காக வெளியூர்களுக்குச் சுற்றுலாவும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாகச் சென்னையில் மட்டுமே இந்தச் சிற்பி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதை விரைவில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று தன்னார்வலர் பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
"அம்மா என்றால் அன்பு என்பார்கள். அப்பா என்றால் அறிவு என்பார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் எல்லா பிள்ளைகளுக்கும் ஒரு தந்தையாக இருந்து இத்திட்டத்தைப் பார்த்துப் பார்த்து செய்து கொடுத்துள்ளார். அவருக்கு என் பிள்ளைகள் சார்பாக நான் நன்றி சொல்கிறேன்" என்கிறார்
"கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி இத்திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இது ஒரு மகத்தான திட்டம். எப்படி இத்திட்டம் மகத்தானது எனச் சொல்கிறேன் என்றால், எல்லா பள்ளிகளிலும் இதற்கு முன்னால் இடைநிற்றல் என்பது ஒரு சிக்கலாக இருந்துவந்தது. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னால், அந்த இடைநிற்றல் முழுமையாகக் குறைந்துவிட்டது.
குறிப்பாகச் சொன்னால், வருகைப்பதிவு அடர்த்தியாகி உள்ளது. மாணவர்களின் ஒழுக்கம் கூடியிருக்கிறது. எல்லாவற்றிலும் சட்டரீதியாக ஒரு தெளிவைப் பெற்றுள்ளனர். குறிப்பாகப் போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்ச்சி மிகமிக கூடி இருக்கிறது. இந்த மாற்றம்தான் மாபெரும் மாற்றம். காவல்துறை அறிக்கையின்படி இத்திட்டத்தின் மூலம் சிறார் குற்றச்செயல்கள் வெகுவாக குறைந்துள்ளதாகக் கூறியிருக்கிறார்கள்" என்கிறார் ஆசிரியர் வெங்கடேஷ் குமார்
மாணவன் கோகுல், "எங்களுக்கு முதலில் நல்ல ஒழுக்கம் என்றால் என்ன என்பதை கற்றுத் தந்தார்கள். மேலும் பொது அறிவு சார்ந்த பல விஷயங்களை நேரடியாகப் பார்த்து உணர்ந்துகொள்ள வைத்தார்கள். அதற்காகச் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். வரலாற்று அருங்காட்சியகம், காவல்துறை அருங்காட்சியகம் போன்றவற்றை நேரில் சென்று பார்த்தேன்.
இந்தப் பயிற்சியில் சைபர் க்ரைம் பற்றிப் பல விஷயங்களைச் சொன்னார்கள். இஸ்ரோவில் எப்படி செயற்கைக் கோள்களை அனுப்புகிறார்கள். செயற்கைக்கோள் எப்படிச் செயல்படுகின்றன? இதை எல்லாம் கற்றுத்தந்தார்கள். எந்தளவுக்கு மாணவர்களாகிய நாங்கள் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும், பெற்றோர்களுக்கு இதைப் பற்றி எப்படிச் சொல்லிக் கொடுப்பது என்பதை எல்லாம் விளக்கிச் சொன்னார்கள். அனைத்தும் எனக்குப் பயனுள்ளதாக இருந்தது" என்கிறார்
மாணவர் விஷாக், "முன்பெல்லாம் குறித்த நேரத்திற்கு நாங்கள் பள்ளிக்கு வரமாட்டோம். அது எந்தளவுக்குத் தவறான பழக்கம் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள். அதேபோல் சாலை விதிகளை நாம் எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு விளக்கம் படத்திற்கும் என்ன அர்த்தம் என்பதைச் சொல்லிக் கொடுத்தார்கள்.
இந்த சிற்பி திட்டத்தின் மூலம் நாங்கள் இரண்டு உலக சாதனை செய்தோம். மரம் நட்டோம், விதைப் பந்துகள் தயாரித்தோம். பசுமையைக் காப்பாற்றப் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். இப்படிச் செய்யும்போது தினம் பள்ளிக்கு வரவே உற்சாகமாக இருக்கும். படிப்பைத் தாண்டிப் பல உடற்பயிற்சிகளைச் கற்றோம். ஆரோக்கியமான உடல்தான் ஆரோக்கியமான மனதை அளிக்கும். பள்ளிக்குச் சரியான நேரத்திற்குப் போகவேண்டும் என்ற ஆர்வம் இதனால் அதிகரித்திருக்கிறது" என்கிறார்.
வித்யஸ்ரீ, "நான் தொடர்ந்து சிற்பி திட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால், அடுத்த வருடம் நாம் பத்தாம் வகுப்பு செல்வதால், அனுமதி இல்லை. இந்தத் திட்டத்தில் மூலம்தான் நிஜ காவலருடன் சேர்ந்து பயம் இல்லாமல் பழக முடிந்தது. எனக்கு முன்பு எல்லாம் காவல்துறையைப் பார்த்தால் பயம். இப்போது நானே போலீஸ் ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்தளவுக்கு இந்த சிற்பி என்னை மாற்றி இருக்கிறான்" என்கிறார்.
நவயுக சிற்பிகளை வரவேற்போம்.












Click it and Unblock the Notifications