“உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு”.. இந்தி திணிப்பை எதிர்த்து உயிர்நீத்த சிவா திலீபனின் கடைசி பதிவு!
சென்னை: இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் சென்னையில் ரயில் முன் பாய்ந்து படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி பலியான மே 17 இயக்க நிர்வாகி சிவா திலீபனின் கடைசி சமூக வலைதள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் கடந்த 11 ஆம் தேதி ஏராளமானோர் சென்னை பூங்கா ரயில் நிலையம் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்றும், திணிக்காதே திணிக்காதே இந்தியை திணிக்காதே, அழிக்காதே அழிக்காதே தமிழை அழிக்காதே என்றும் முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், கருப்பு ஸ்பிரே மூலம் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்த பெயர் பலகையில் இந்தியில் இருந்த எழுத்துகளை அழித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு இருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் போராட்டக்காரர்களை தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மே 17 இயக்கத்தைச் சேர்ந்த சிவா திலீபன், "இந்தி ஒழிக.. தமிழ் வாழ்க" என முழக்கமிட்டபடி தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் முன் திடீரென குதித்தார். இதில் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிவா திலீபன் சிகிச்சை பலனின்றி 6 நாட்களுக்குப் பிறகு புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். சிவா திலீபனின் மறைவு மே 17 இயக்கத்தினர் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிவா திலீபன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். "மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது.நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
முன்னதாக கடந்த 11 ஆம் தேதி அன்று மே 17 இயக்க நிர்வாகி சிவா திலீபன் வெளியிட்ட தமது கடைசி ஃபேஸ்புக் சமூக வலைதள பதிவில், "தமிழ் வாழ்க!.. இந்தி ஒழிக!... உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு !" எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications