சமையல் எரிவாயு சிலிண்டர்.. ரேஷன் கடைகளில் சத்தமே இல்லாமல் நடக்கும் சம்பவம்.. மக்கள் ஹேப்பி
சென்னை: தமிழக அரசு பொதுமக்கள் எளிதாக 2 கிலோ மற்றும் 5 கிலோ அளவிலான சிறிய ரக சமையல் கேஸ் சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டது. அதன்படி, 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரேஷன் கடைகளில் சிறிய ரக சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை தொடங்கப்பட்டது. இந்த சிலிண்டர் விற்பனைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சிலிண்டர் விற்பனையை பல்வேறு ரேஷன் கடைகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
வெளியூர்களில் வந்து சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர், ஈரோடு, சேலம், உள்பட தமிழகத்திற்குள்ளேயே பலர் புலம் பெயர்ந்து வசித்து வருகிறார்கள். இப்படி வசிப்பவர்கள் அடிக்கடி இடம் மாறுவதும் நடக்கிறது. இவர்கள் சிலிண்டர் வாங்கி சமையல் செய்ய பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. மேலும் முகவரி சான்றிதழும் தேவையாக இருந்தது. இதனால் பலராலும் எளிதில் சிலிண்டர் வாங்க முடியாத நிலை இருந்தது.

இதையடுத்து தமிழக அரசு பொதுமக்கள் நலன் கருதி 2 கிலோ மற்றும் 5 கிலோ அளவிலான சிறிய ரக சமையல் கியாஸ் சிலிண்டர்களை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்தது. அதன்படி, 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரேஷன் கடைகளில் சிறிய ரக சமையல் கியாஸ் சிலிண்டர் விற்பனை தொடங்கியது.
இதன்படி 2022ம் ஆண்டு நடைமுறையின் படி, (இப்போது மாறிவிட்டது) சென்னையில் முதன்முறையாக இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு 958 ரூபாயும், ஐந்து கிலோ காஸ் சிலிண்டரை பெறுவதற்கு 1515 ரூபாயும் நுகர்வோர் செலுத்த வேண்டியது இருந்தது. அதற்குப் பின்னர் கேஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் அதற்கான தொகையை மட்டும் கொடுத்து சிலிண்டரை வாடிக்கையாளர்கள் நிரப்பி கொள்ளலாம். சென்னையில் இந்த மாதம் இரண்டு கிலோ சமையல் எரிவாயு 250 ரூபாய்க்கும், ஐந்து கிலோ 575 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சிலிண்டர் விலையை பொறுத்து தற்போது சற்று விலை மாறுதலுக்கு உட்பட்டுள்ளது.
இந்த சிலிண்டர்களை பொறுத்தவரை தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பெரும்பாலான சிறப்பு அங்காடிகள், குறிப்பிட்ட சில ரேஷன் கடைகள் என சுமார் 800 கடைகளில் இந்த சிறிய ரக சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர, சிறிய ரக கியாஸ் சிலிண்டர்கள் தேவைப்படுபவர்கள் தமிழகத்தில் எந்த ரேஷன் கடைகளை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் ஓரிரு தினங்களில் சிறிய ரக சிலிண்டர்களை அருகில் உள்ள சமையல் கியாஸ் மையங்களில் இருந்து ரேஷன்கடை விற்பனையாளர்கள் பெற்றுத் தருவதாக கூறப்படுகிறது.
தற்போது வெறும் ஆதார் அட்டை நகலை கொடுத்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் 2 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டரை முன்பணத்துடன் ரூ.947-க்கும், காலி சிலிண்டரை கொடுத்து மாற்று சிலிண்டர் (ரீபில் சிலிண்டர்) பெறுவதற்கு ரூ.239-க்கும் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதே போன்று, 5 கிலோ சமையல் கியாஸ் சிலிண்டரை முன்பணத்துடன் ரூ.1,560-க்கும், காலி சிலிண்டரை கொடுத்து மாற்று சிலிண்டர் (ரீபில் சிலிண்டர்) பெறுவதற்கு ரூ.562-க்கும் பெற்றுக் கொள்ள முடிகிறது. கடந்த ஓராண்டில் ரூ.63 லட்சத்து 6 ஆயிரத்துக்கு சிறிய ரக சமையல் கியாஸ் சிலிண்டர்கள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெளிமாநிலத்தை சேர்ந்த பலருக்கும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் தனியாக தங்கி பணிபுரிபவர்களுக்கும், நீண்ட தூரம் லாரியில் பயணிப்பவர்களுக்கும், சுற்றுலா செல்பவர்களுக்கும் இந்த சிறிய ரக சிலிண்டர்கள் மிகவும் பயன் உள்ளதாக உள்ளது. பொது மக்களுக்கு பயன் உள்ள இந்த சிறிய ரக சிலிண்டர்கள் விற்பனையை தமிழகம் முழுவதும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications