snakebite: பாம்பு கடித்தால்.. இந்த தவறை மட்டும் செய்யாதீங்க! அப்புறம் காப்பாற்றவே முடியாது
சென்னை: பாம்பு கடி சமீப காலமாக பெரிய பிரச்சனையாக வெடித்து வருகிறது. பாம்பு கடித்து விட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் காப்பாற்றிவிடலாம். ஆனால் வீட்டு வைத்தியம், நாட்டு வைத்தியம் என்று சில முயற்சிகள் செய்து அது தோல்வி அடைந்த பிறகுதான் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். எனவே உயிரிழப்பு ஏற்படுகிறது.
எனவே பாம்பு கடித்து விட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும். மட்டுமல்லாது சில தவறுகளை செய்யவே கூடாது. அது என்ன என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.

பாம்பு மனிதர்களை கடிக்கிறது எனில் அதன் விஷம் கடித்த இடத்தில் இருந்து நரம்பு மண்டலத்திற்கு செல்ல சில வினாடிகள் தொடங்கி சில நிமிடங்கள் வரை ஆகும். ஆனால் பாம்பு கடியால் பயந்துவிட்டோம் என்றால் உடல் பதட்டம் அடைந்து ரத்த ஓட்டத்தை அதிகரித்து விஷம் வேகமாக பரவுவதற்கு வழி செய்து விடும். எனவே பாம்பு கடித்து விட்டால் அவசரப்படவோ பயந்து ஓடுவதோ அல்லது பீதி அடையவோ கூடாது. ஆனால் அதே நேரத்தில் விவேகமாக செயல்பட வேண்டும்.
மிக முக்கியமாக கடித்த இடத்தை வாய்வழித்து உறிஞ்சுவது கூடவே கூடாது. இப்படி செய்வது மூலம் விஷம் உறிஞ்சுபவரின் வாயில் ஏதேனும் காயங்கள் இருப்பின் அதன் மூலம் விஷம் அவரது உடலுக்குள் பரவும். வேறு சிலர் தம்பு கடித்த இடத்தை கத்தி வைத்து கீறுவார்கள், அல்லது வெட்டுவார்கள். இப்படி செய்வதன் மூலம் ரத்தப்போக்குதான் அதிகரிக்குமே தவிர விஷம் உடலில் இருந்து வெளியேறாது.
அதேபோல கடித்த இடத்திற்கு மேலே துணியை வைத்து அல்லது கயிறு கொண்டு மிக இறுக்கமாக கட்டுவது விஷத்தை உடல் முழுக்க பரவுவதை தடுக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இப்படி செய்வதன் மூலம் நிரந்தரமாக காலையோ அல்லது பாம்பு கடித்த இடத்தையும் இழக்க நேரிடலாம். எனவே பாம்பு கடித்த இடத்தை துணிவைத்து கட்டுவது கூடாது.
அதேபோல கடிபட்ட நபருக்கு வலி நிவாரணி மாத்திரைகளையோ அல்லது மயக்கம் மருந்துகளையோ கொடுக்கக் கூடாது. சிலர் பாம்பு கடிபட்டவர்களுக்கு ஆல்கஹால் அல்லது காபி கொடுப்பார்கள். இது இரண்டுமே உடலில் விஷத்தை வேகமாக பரவ வழிவகை செய்யும். பாம்பு கடிக்கு நாட்டு மருந்துகள் விஷமுறிவை ஏற்படுத்தும் என்று இதுவரை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே பச்சை இலையை கட்டுகிறேன் காபி பொடியை வைக்கிறேன் என்று நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
இன்னும் சிலர் கடித்த பாம்பை தேடி ஓடுவார்கள். அதை அடித்துக் கொள்ளவும் அல்லது உயிருடன் பிடிக்கவோ முயல்வார்கள். அப்படி செய்வது பாம்பு இரண்டாவது முறையாக கடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி விடும். எனவே அதை செய்ய வேண்டாம். பாம்பு கடித்த இடத்தை தேய்ப்பதோ அல்லது அதன் மீது அழுத்தம் கொடுப்பதோ செய்யக்கூடாது அப்படி செய்வதன் மூலம் விஷம் வேகமாக பரவ வழிவகை செய்து விடும்.
என்ன செய்ய வேண்டும்
கடிபட்டவர் பாம்பு கடித்து விட்டது என்பதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த நேரத்தில் பதட்டப்படாமல் இருக்க வேண்டும். கையில் மொபைல் ஃபோன் இருந்தால் உடனடியாக 108 ஆம்புலன்சை வர வைக்கவும். பாம்பு கடியைப் பொறுத்தவரை எந்த பாம்பு கடித்தது என்பதற்கு ஏற்பவே சிகிச்சை அளிக்கப்படும். எனவே பாம்பின் நிறம், வடிவம், அளவு குறித்து ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒருபோதும் கடித்த பாம்பை தேடி போக வேண்டாம்.
கடிபட்ட இடத்தை அதாவது கையில் கடித்து இருந்தாலும் அல்லது காலில் கடித்து இருந்தாலும் அதை அசைக்காமல் வைத்திருக்க வேண்டும். இறுக்கமான ஆடை அணிந்திருந்தால் தளர்த்தவும். ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் பாம்பு கடித்து விட்டது எனில் கடிபட்டவரின் உயிரை மருத்துவர் மட்டுமே காப்பாற்ற முடியும். எனவே முடிந்த அளவுக்கு வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்.












Click it and Unblock the Notifications