ஆலந்தூர் ஏடிஎம்மில் அவ்வளவு கூட்டம்.. இளைஞர்கள் கையில் இவ்வளவு பணமா? வருமான வரித்துறைக்கே ட்விஸ்ட்
சென்னை: சென்னை ஆலந்தூர் ஏடிஎம் ஒன்றில் நீண்ட நேரமாக 2 பேர் கட்டுக்கட்டாக பணம் செலுத்திக்கொண்டே இருந்தனர். இதனால் பணம் எடுக்க வந்த பொதுமக்கள் சந்தேகம் அடைந்து உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களை பிடித்த போலீசார், ஹவாலா பணமா? என்பது குறித்து விசாரிக்க வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.
சென்னையை ஆலந்தூர் எம்.கே.என்.சாலையில் பிரபல வங்கியின் ஏடிஎம் இருக்கிறது. அங்கு இரண்டு வாலிபர்கள் நீண்ட நேரமாக கட்டுக்கட்டாக பணம் செலுத்தி வந்திருக்கிறார்கள். இதனால் பணம் எடுக்க வந்தவர்கள் பணம் எடுக்கவோ, பணம் போடவோ முடியாமல் நீண்ட நேரமாக வெளியில் காத்துக்கிடந்தனர்..

ஏடிஎம்ககளில் ஓரளவுக்குத்தான் பணம் செலுத்துவார்கள்.. ஆனால் கட்டுக்கட்டாக பல லட்சம் பணத்தை செலுத்தி கொண்டே இருந்தததால் என்னடா இது.. இவ்வளவு பணம் டெபாசிட் செய்கிறார்கள் என்று சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக பரங்கிமலை போலீசார் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம். மையத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அப்போதும் தொடர்ந்து பணம் செலுத்தி கொண்டே இருந்த இரு வாலிபர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்க தொடங்கினர்
விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 23 வயதாகும் ரபி , 22 வயதாகும் முகமது யாசின் என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் சென்னை பாரிமுனையில் உள்ள ஒரு நபரிடம் தினமும் கட்டுக்கட்டாக பணம் வாங்கி கொண்டு அதை அவர் சொல்லும் வங்கி கணக்கில் செலுத்தி வந்திருக்கிறார்கள்.
இதற்காக ஒரு நாளைக்கு தலா ரூ.600 சம்பளம் பெற்றுவந்ததாகவும் அவர்கள் கூறியபடி அசோக் பில்லர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏ.டி.எம்.களில் ரூ.15 லட்சம் பணம் செலுத்தி வந்துள்ளார்கள்.. அதே பகுதிகளில் உள்ள ஏடிஎம்களிலேயே பணம் செலுத்தினால் சந்தேகம் வரும் என்பதால் பரங்கிமலை பகுதிக்கு வந்து, மேலும் ரூ.15 லட்சத்தை ஏடிஎம்களில் செலுத்த வந்தோம். இதில் ரூ.5 லட்சத்தை செலுத்தி விட்டோம் மீதமுள்ள ரூ.10 லட்சம் பணத்தை செலுத்தும் போது போலீசாரிடம் மாட்டிக்கொண்டோம் என்றார்கள்.
இதே போல் பல இளைஞர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள ஏ.டி.எம்.களில் தினமும் பணம் செலுத்தி வருவதாகவும் போலீசாரிடம் அந்த இளைஞர்கள் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரிடமிருந்து ரூ.10 லட்சம் ரொக்க பணம், 2 செல்போன், ஆகியவற்றை பறிமுதல் செய்தார்கள். மேல் விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இளைஞர்களை போலீசார் ஒப்படைத்தனர்.. ஹவாலா பணத்தை வங்கி கணக்குகளில் செலுத்தி வருகிறார்களா? அல்லது வேறு என்ன? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications