தண்டவாளங்களுக்கு நடுவில் மின்சாரம் உற்பத்தி.. முதல் முறையாக நாட்டிலேயே ரயில் பாதையில் சோலார் பேனல்
சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக வாரணாசி ரயில் பாதையில், 70 மீட்டர் தூரம், சோலார் பேனல் நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய முயற்சியை ரயில்வே துறை துவங்கி உள்ளது.. ரயில் தண்டவாளங்களில் சோலார் பேனல்களை பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை ரயில்வே தொடங்கியிருப்பது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக பெற்று வருகிறது. இந்த புதிய திட்டம் குறித்து ரயில்வே அதிகாரிகள் சொல்வதென்ன? சோலார் பேனலின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
ரயில்வே, தனக்கு சொந்தமான இடங்களில் சூரியசக்தி, காற்றாலைகளை நிறுவி, மின் உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறது. முக்கியமாக, ரயில் நிலையங்களின் மேற்கூரைகளில் தனியார் பங்களிப்போடு சோலார் பேனல் நிறுவி, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ரயில் தண்டவாளங்கள்
இந்தியாவிலுள்ள ரயில் நிலையங்களை மின்சார உற்பத்தி நிலையங்களாக மாற்றும் திட்டத்தில் ரயில்வே துறை இறங்கியதுடன், இதற்காக ரயில் தண்டவாளங்களில் எளிதில் அகற்றக் கூடிய வகையிலான சோலார் பேனல்களை அமைக்கும் புதிய முயற்சியிலும் ரயில்வே துறை வெற்றியும் கண்டுள்ளது. வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில்வே ஊழியர்கள் இதை சாத்தியப்படுத்தியும் காட்டியிருக்கிறார்கள்.
இதன் அடுத்த கட்டமாக ரயில் பாதைகளிலும் சோலார் பேனல் நிறுவி, சூரியசக்தி மின்சாரம் தயாரித்து பயன்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது.. அந்தவகையில், நாட்டிலேயே முதல் முறையாக, உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில்வே, கோமோமோட்டிவ் ஒர்க்ஸ் சார்பில், 70 மீட்டர் தூரத்துக்கு, 28 சோலார் பேனல் அமைக்கப்பட்டிருக்கிறது.
பேனல்கள் - தண்டவாளங்கள்
கான்கிரீட் படுகைகளின் மேல் இந்த பேனல்கள் ஒட்டப்பட்டுள்ளன.. அதேசமயம், ரயில் தண்டவாளங்களில் செல்லும்போது ஏற்படும் அதிர்வால் பாதிக்கப்படாத வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, தேவைப்படும்போது, இந்த பேனல்களை நீக்கியும் கொள்ளலாம்.. எந்த சிக்கலுமின்றி பராமரிப்பு பணியை எளிதாக மேற்கொள்ளவும் முடியும்.
இந்திய ரயில்வேயில் தண்டவாளங்கள் 1.2 லட்சம் கிமீ பரப்பளவில் இருப்பதால், தண்டவாளங்களுக்கு இடையிலான இடைவெளியில் இந்த பேனல்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, விரிவுபடுத்தப்பட்டால், வருடந்தோறும் தோறும், ஒரு கிலோ மீட்டருக்கு இந்த பேனல்கள் மூலம் 3,21,000 kwh மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்றும், இதிலிருந்து, 15 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
2030ம் ஆண்டிற்குள் பூஜ்ய கார்பன் உமிழ்வை அடையும் இந்திய ரயில்வேயின் நோக்கின் ஒரு பகுதியாகவே இந்த திட்டம் அமைக்கப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் செயல்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது...
போக்குவரத்துக்கு நோ இடையூறு
ரயில்வே பொது மேலாளர் நரேஷ் பால்சிங் இதுகுறித்து கூறும்போது, "தற்போது செயலில் உள்ள ரயில் பாதைகளுக்கு இடையில் இந்த சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது.. எந்தவிதமான போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது.. இந்த திட்டம் சூரிய ஆற்றல் பயன்பாட்டில் ஒரு புதிய பரிமாணம் மட்டுமல்ல, இனி வரும் காலங்களில் இந்திய ரயில்வேயில் பசுமை ஆற்றல் உற்பத்திக்கான வலுவான மாதிரியாக செயல்படும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முதல்முறையாக இந்த ரயில் தண்டவாளங்களுக்கிடையே மின்சாரம் உற்பத்தி செய்யும் முயற்சியில், இந்தியா ரயில்வேயின் உற்பத்தி பிரிவான BLW நிறுவனம் இறங்கியிருப்பது நாட்டு மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications