Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்த்து சிலர் வயிறு எரிகிறார்கள்.. முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்த்து சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும் நாம் சாதிப்போம் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.

stalin dmk edappadi

"மாதம் மும்மாரி பொழிந்ததா?" என்று அரண்மனை உப்பரிகையில் நின்று வேடிக்கை பார்த்தபடி மந்திரிமார்களிடம் நிலவரம் கேட்கும் ஆட்சியல்ல இது. அன்றாடம் மக்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான திட்டங்களை வகுத்து, அவை முறையாகச் செயல்படுகிறதா என்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து, பணிகளை நிறைவேற்றிடும் ஜனநாயக மாண்புமிக்கது நம் திராவிட மாடல் ஆட்சி.

இந்த ஆட்சியைப் பற்றி அரசியல் களத்தில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற பொறுப்பில் உள்ள உங்களில் ஒருவனான நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத வகையில், ஆட்சியின் தன்மையை மக்களின் முகமலர்ச்சியே பதிலாகச் சொல்லிவிடுகிறது. அந்த முகமலர்ச்சியானது அவர்களின் உள்ளத்தில் உள்ள மகிழ்ச்சியின் மொழிபெயர்ப்பு.

கோவையில் நவம்பர் 5, 6 தேதிகளில் நடைபெற்ற அரசுப் பணிகள் கள ஆய்வு, கழகப் பணிகள் கலந்தாய்வு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மக்களின் வரவேற்பு, உடன்பிறப்புகளுடனான சந்திப்பு எனச் சென்ற இடமெல்லாம் மகிழ்ச்சியும் எழுச்சியும் நிறைந்திருந்ததுபோலவே, நவம்பர் 9, 10 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொண்ட பயணமும் முழுமையான வெற்றியாக அமைந்ததை உடன்பிறப்புகளாம் உங்களிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தென்மாவட்ட மண்ணுக்கேயுரிய பாச உணர்வுடன் மக்களின் பேரன்பை விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேரில் கண்டேன். கழகத்தின் மருதிருவர் என்று நான் அடிக்கடி குறிப்பிடும் விருதுநகரின் இரண்டு மாவட்டச் செயலாளர்களான மாண்புமிகு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களும், தங்கம் தென்னரசு அவர்களும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள்.

ஒரு முறை தூத்துக்குடி மாவட்டத்திற்குச் சென்ற போது, அங்குத் தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களையும் அங்குப் பணியாற்றும் தொழிலாளர்களையும் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றியது நம் திராவிட மாடல் அரசு. அதுபோல, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலைகள் நிறைந்திருப்பதால், 9-ஆம் தேதியன்று ஒரு தொழிற்சாலைக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை நேரில் கேட்டறிந்தேன்.

தீபாவளிப் பண்டிகையையொட்டி இந்த ஆண்டு பட்டாசு விற்பனை நன்றாக இருந்ததாகவும், மக்களிடம் வாங்கும் சக்தி பெருகியிருப்பதாகவும் பட்டாசு ஆலையின் உரிமையாளர் தெரிவித்தார். அங்கே பணியாற்றிய தொழிலாளர்களின் தேவை குறித்து கேட்டேன். எதிர்பாராத வகையில் விபத்தில் இறந்துபோகும் தொழிலாளர்களுடைய குழந்தைகள் உயர்கல்வி கற்பதற்கான செலவுகளை அரசே ஏற்கவேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் வைத்தனர்.

அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, பட்டாசு ஆலை விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்விச் செலவை அரசே ஏற்கும் வகையில், மாவட்ட நிர்வாக அளவிலேயே ஒரு நிதியம் உருவாக்கவும், அந்த நிதியத்திற்கு முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் அறிவிப்பு வெளியிட்டேன். பட்டாசுத் தொழிலாளர்களின் அகத்திலும் முகத்திலும் மத்தாப்பாக ஒளிர்ந்தது அந்த அறிவிப்பு. உங்களில் ஒருவனான எனக்கோ, ஒரு விளக்கை ஏற்றி வைத்த உணர்வு.

கள ஆய்வுப் பணிகளின்போது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலனுக்கான திட்டங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையையும், பயனாளிகளிடம் அவை முறையாகச் சென்று சேர்வதையும் உறுதிப்படுத்திக் கொண்டு, கூடுதல் விண்ணப்பங்கள் மற்றும் மக்களின் பிற தேவைகளைக் கவனித்து, தகுதியுடையவற்றை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினேன். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற பிரசவங்களில் ஒரு குழந்தைகூட இறக்காத வகையில் மகப்பேறு துறை சார்ந்தவர்கள் பொறுப்புடனும் சிறப்புடனும் செயல்பட்டிருக்கும் விவரத்தை அறிந்தேன்.

அதுபோலவே, பட்டாசு ஆலைகளுக்குச் செல்லும் சிறுவர் - சிறுமியர் நிறைந்த மாவட்டத்தில் அவர்களின் பள்ளிப்படிப்பும் உயர்கல்வியும் இடைநின்று போகாதபடி அதிகாரிகளும் ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று தொடர் முயற்சிகளை மேற்கொண்டு, +2 முடித்தவர்களைக் கல்லூரியில் சேர்ப்பதில் உறுதியாக இருந்து வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர். இந்தச் சாதனைகளுக்கு காரணமான அதிகாரிகளை நேரில் அழைத்து அமைச்சர்கள் முன்னிலையிலும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலும் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தையும் பாராட்டினேன்.

ஆய்வுப் பணிகளை முடித்து உரிய ஆலோசனைகளை வழங்கியபிறகு, அன்னை சத்யா அரசு காப்பகத்தில் உள்ளவர்களைச் சந்திக்கப் புறப்பட்டேன். அங்குள்ள குழந்தைகளுக்கு என்ன வாங்கலாம் என யோசித்து, ஒரு இனிப்பகத்திற்குச் சென்று, நானே ஒவ்வென்றையும் பார்த்து, அங்குள்ள தின்பண்டங்களின் தரம், சுவை குறித்து கேட்டறிந்து, நானே ஒவ்வொன்றையும் தேர்வு செய்து வாங்கினேன். அதுபோல நல்ல பழங்களையும் வாங்கிக் கொண்டேன்.

காப்பகத்திற்குச் சென்றபோது மாலை நேர யோகா வகுப்பு நடந்துகொண்டிருந்தது. குழந்தைகள் தங்கள் பயிற்சியை முடிக்கட்டும் என விடுதிக் காப்பாளரிடம் சொல்லிவிட்டு காத்திருந்தேன். யோகா பயிற்சி முடிந்ததும், அங்கிருந்த குழந்தைகளைச் சந்தித்தேன். காப்பாளர் என்னை அவர்களிடம் காட்டி, "இவர் யார் தெரிகிறதா?" என்று கேட்டபோது, "அப்பா..." என்று அவர்கள் சொன்னதைக் கேட்டு உள்ளம் நெகிழ்ந்தேன். கண்ணீர் துளிர்த்தது.

அங்கிருந்த குழந்தைகளில் ஒருவர் நன்றாகப் பேசுவார் என்று சொன்னதையடுத்து, அவர் பேசத் தொடங்கினார். நான் வாங்கிச் சென்ற இனிப்புகளையும் பழங்களையும்விட நன்றி கலந்த அன்புடன் வெளிப்பட்ட அந்தக் குழந்தையின் பேச்சு அத்தனை சுவையாக இருந்தது. அங்கிருந்த குழந்தைகள் அனைவருமே என்னைத் தங்களின் தந்தையாகவே பார்த்து அன்பை வெளிப்படுத்தினர். வாழ்வின் பெரும்பயனை அனுபவித்த உணர்வைப் பெற்றேன்.

எளிய மக்கள், தொழிலாளர்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பினரும் நம் அரசின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பதையும், அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் 'எல்லாருக்கும் எல்லாம்' என்ற வகையில் திராவிட மாடல் அரசு நடைபெறுவதையும் உறுதி செய்துகொண்டு, இப்படியொரு நல்லாட்சி அமையவேண்டும் என்பதற்காக அயராது உழைத்த உடன்பிறப்புகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக கழகத்தின் இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை முன்கூட்டியே விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்று சிறப்பான முறையில் நிகழ்ச்சியை அமைத்திருந்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி என்கிற இலக்கை அடைவதற்கு சாதராண உழைப்பு போதாது, சதிகளை முறியடிக்கக்கூடிய சளைக்காத உழைப்பு தேவை என்பதை விருதுநகர் உடன்பிறப்புகளிடம் எடுத்துரைத்தேன். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகத்தின் மினிட் புத்தகங்களை ஆய்வு செய்தேன். விருதுநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜோ. ஞானராஜ் அவர்கள் அதிகபட்சமாக 37 நிகழ்ச்சிகளையும், ராஜபாளையம் மேற்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் சௌ. தங்கபாண்டியன் அவர்கள் 30 நிகழ்ச்சிகளையும் நடத்தியிருப்பதை மினிட் புத்தகத்தைப் பார்த்து, தெரிந்துகொண்டு அவர்களைப் பாராட்டினேன்.

விருதுநகர் மாவட்டத்தில் கழகம் தொடர்ந்து வெற்றி பெறும் தொகுதிகளான விருதுநகர், திருச்சுழி மற்றும் ராஜபாளையம் தொகுதிகளுக்குட்பட்ட நிர்வாகிகளையும் பாராட்டி, அந்த இரு தொகுதிகளின் வெற்றியைத் தக்க வைத்துக்கெள்வதுடன், மாவட்டத்தின் மற்ற தொகுதிகளிலும் 2026-இல் நிச்சய வெற்றி என்பதை உறுதி செய்யும் வகையில் உழைக்க வேண்டியதை உங்களில் ஒருவனாக வலியுறுத்தினேன்.

நவம்பர் 10 அன்று காலையில் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் சந்தித்து திராவிட மாடல் அரசின் திட்டங்கள் குறித்துப் பேசினர். விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்தை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பத்தாண்டுகாலம் கிடப்பில் போட்டுவிட்டதையும், நம்முடைய அரசு வந்தபிறகு அந்தத் திட்டம் விரைவுபடுத்தப்பட்டு 40% அளவுக்குப் பணிகள் நிறைவேறியிருப்பதையும் கூறித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து விருதுநகரில் மாபெரும் மக்கள் நலத்திட்ட விழாவுக்குச் சென்றேன். ஏறத்தாழ 40 ஆயிரம் பேருக்குப் பட்டா வழங்கும் விழா என்பதால், பயனாளிகள் அனைவருக்கும் பட்டா கிடைத்ததை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட அமைச்சர்களிடம் தெரிவித்தேன். நலத்திட்ட விழா நிறைவடைந்தபோது, அத்தனை பேருக்கும் பட்டா உள்ளிட்ட பயன் தரும் உதவிகள் முறையாகப் போய்ச் சேர்ந்திருப்பதை உறுதி செய்தனர். நியாயமாகக் கிடைக்க வேண்டிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதில் ஒருவர்கூட விடுபடுதல் கூடாது என்ற அக்கறை முதலமைச்சரான எனக்கு மட்டுமல்ல, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரை இருப்பதால் மக்களின் தேவையறிந்து நிறைவேற்ற முடிகிறது.

இதனைப் பொறுக்க முடியாமல்தான் அரசியலில் எதிர்முகாமில் இருப்பவர்கள் வன்மத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தன் நிலை மறந்து விமர்சிக்கிறார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பெயரிலான திட்டங்களும், கட்டடங்களும் மக்களுக்குப் பெரும்பயன் அளிப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல், கலைஞர் பெயரை வைப்பதா என அநாவசியமாகப் பொங்குகிறார்.

95 ஆண்டுகால வாழ்வில் 80 ஆண்டுகளுக்கு மேலான பொதுவாழ்வை தமிழ்மொழிக்கும் தமிழினத்திற்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் அர்ப்பணித்த மகத்தான தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்த சிற்பியான அவரது புகழ் போற்றும் வகையில் அவரது நூற்றாண்டின் நினைவாக சென்னையில் உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் மாபெரும் நூலகம், ஏறுதழுவுதல் அரங்கம் போன்றவற்றை அமைத்தோம். தலைவர் கலைஞரைப் போலவே மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் போற்றவும் இந்த அரசு தவறியதில்லை.

தந்தை பெரியார் பிறந்தநாளைச் சமூகநீதி நாளாகவும், அரசியல் சட்டம் வகுத்து தந்த டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாகவும், அருட்பிரகாச வள்ளலார் பிறந்தநாளைத் தனிப்பெருங்கருணை நாளாகவும் கடைப்பிடிக்கிறது திராவிட மாடல் அரசு. அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என அரும்பெரும் தலைவர்கள் பெயரில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்குப் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால், அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தையும் முன்பை விடச் சிறப்பாக நடத்தி வருவது திராவிட மாடல் ஆட்சிதான்.

விருதுநகரில் நான் சென்று பார்வையிட்ட அரசு காப்பகத்திற்கு அன்னை சத்யா காப்பகம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தலைவர் கலைஞரின் 40 ஆண்டுகால நண்பரான எம்.ஜி.ஆர். அவர்களின் தாயார்தான் அன்னை சத்யா. அவர் பெயரில்தான் அரசு காப்பகம் இன்னமும் இயங்கி வருகிறது. இந்த அடிப்படை கூட எதிர்க்கட்சித் தலைவருக்கு எப்படிப் புரியாமல் போனதோ, பண்பாடே இல்லாமல் அநாகரிகமாகப் பேசுவதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் ஒரு சில அரசியல் கட்சித் தலைவர்களைப் போல எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருப்பவர் பேசுவதையும், இப்படிப்பட்டவருடன் ஜனநாயக மாண்புமிக்க சட்டமன்றத்திலும் விவாதிக்க வேண்டியிருக்கிறதே என்பதையும் எண்ணி வேதனைப்படுகிறேன். வன்மம் கக்கும் வயிற்றெரிச்சல்காரர்களைக் கடந்து செல்வதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

மக்கள் நம் பக்கம் இருப்பதால்தான் மாற்று முகாம் கலக்கத்தில் என்னன்னவோ பேசுகிறது. ஆனால், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் என்ன என்பதை உலகம் அறிந்திருக்கிறது. பிரிட்டனிலிருந்து வெளியாகும் புகழ்பெற்ற ஆங்கில ஏடான Financial Times எழுதியுள்ள கட்டுரையில், "கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமான தமிழ்நாட்டில் உற்பத்தி பெருகிக்கொண்டே வருகிறது.

உலகளாவிய நிறுவனங்களான ஜாகுவார் லேண்ட் ரோவர், நைக், சிஸ்கோ, ஃபாக்ஸ்கான், ஃபோர்டு, கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் நம்பிக்கையுடன் முதலீடு செய்துள்ளன. தமிழ்நாட்டில் கல்வித்தரம் மிகவும் உயர்ந்துள்ளது. திறமைமிக்க தொழிலாளர்கள் உள்ளார்கள். இந்தியப் பெண் தொழிலாளர்களில் 40% பெண்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர். முதலீட்டிற்கும் வணிகத்திற்கும் ஏற்ற மாநிலமாகத் தமிழ்நாடு இருப்பதால் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடுகளைச் செய்கின்றன. முதலீட்டாளர்களுக்கு அரசியல்ரீதியாக எந்தச் சிக்கலும் நெருக்கடியும் வராதபடி தமிழ்நாடு அரசின் தொழிற்கொள்கை அமைந்துள்ளது.

இந்தியா தன்னுடைய உற்பத்தியை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியில் உலக அரங்கில் உயர வேண்டுமென்றால் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களும் பிரதிபலிக்க வேண்டும்" என்று திராவிட மாடல் அரசின் தொழிற்கொள்கையையும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியையும் பற்றி வெளியிட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆய்வுப் பயணத்திலும் அந்த மாவட்டத்தின் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்திலேயே நல்ல வேலையைப் பெறுகிற வகையில் தொழிற்பேட்டைகளை உருவாக்கி வருகிறோம். கோவை, விருதுநகர் மாவட்டங்களைத் தொடர்ந்து நவம்பர் 14, 15 தேதிகளில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கள ஆய்வுப் பணிகளை உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளவிருக்கிறேன். தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் நிறுவனம் தனது தொழிற்சாலையை அங்கே தொடங்க இருப்பதால் இரு மாவட்ட மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் மக்களின் நலன் காக்கும் நாட்களேயாகும். அதனால்தான் ஒவ்வொரு மாவட்டச் சுற்றுப் பயணத்திலும் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள். அதைப் பார்த்துச் சிலர் வயிறு எரிகிறார்கள். ஏதேதோ பேசுகிறார்கள். அவர்கள் பேசட்டும். நாம் சாதிப்போம். கழக ஆட்சியின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும். அன்புடன் மு.க. ஸ்டாலின் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+