பதவிக்கு ஆசைப்படுறதெல்லாம் சரி.. சொந்த ஊரில் இப்படியொரு சோகக்கதையா? டெல்லிக்கு பறந்த கடுதாசி!
சென்னை: சீமைத் தொகுதியின் மக்கள் பிரதிநிதியாக உள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவரின் வாரிசுக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என சொந்த தொகுதியை சேர்ந்த கதர்ச்சட்டையினர் சிலர் டெல்லிக்கு கடுதாசி எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.
இதில் ட்விஸ்ட் என்னவென்றால் சில நாட்களுக்கு முன்னர் வரை தந்தை தலைவரின் ஆதரவாளர்களாக அறியப்பட்டவர்கள் கூட இப்போது வாரிசின் அரசியல் ஸ்டைல் பிடிக்காமல் அவருக்கு எதிராக கச்சைகட்டி நிற்பது தான். கடந்த வாரம் சீமைத் தொகுதிக்குட்பட்ட கோட்டை நகரில் நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வாரிசை கண்டித்து வரிசையாக சில நிர்வாகிகள் பேசியது தந்தை தலைவருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் வாரிசுக்கு சீட் கொடுத்தால் உண்ணாவிரதம் இருப்போம் என மாவட்ட அளவில் பொறுப்பில் உள்ள பெரியவர் ஒருவரே பொங்கித் தீர்த்திருப்பது மாநிலத் தலைமை வரை சென்று விவாதம் நடந்து வருகிறது. வாரிசின் அதிரடி பாணி அரசியலும், பேச்சுக்களும் தான் இந்தச் சிக்கலுக்கு காரணம் எனக் கருதும் தந்தை தலைவர், சீமை தொகுதியில் முகாமிட்டு கச்சைக்கட்டி நிற்கும் கதர்சட்டையினரை அழைத்துப் பேசி சரிக்கட்டும் வேலையை பார்க்க இருக்கிறாராம்.
அதேபோல் வாரிசின் அதிரடி ஸ்டைல் பேச்சுகளுக்கும் தடை போட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இந்த விவகாரத்தை ரசிக்கும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சிலர் இப்போதே சீட்டுக்கு அப்ளிகேஷன் போட ஆயத்தமாகிவிட்டார்கள். அதுமட்டுமல்ல மாவட்ட அமைச்சரையும் சீட்டுக்காக வலம் வரத் தொடங்கிவிட்டார்களாம். இதனால் சீமைத் தொகுதி யாருக்கு என்பதில் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்துள்ளது.
இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் சிட்டிங் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் அந்த அமைச்சரின் வாரிசை அங்கே களமிறக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications