தேவையற்ற சர்ச்சையை கிளப்புறாங்க.. பேனா நினைவு சின்னத்தால் எந்த பாதிப்பும் இல்லை.. மா.சுப்பிரமணியன்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுச்சின்னமாக பேனாவை கடலில் வைப்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மெரினா கடற்கரையில் அமைய இருக்கும் அந்த சின்னத்தினால் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பதை அப்பகுதி மக்களும் அறிந்து இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அவரது நினைவாக சென்னை மெரினா அருகே கடலில் ரூ.80 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்டமான பேனா வடிவிலான நினைவு சின்னத்தை தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது.
பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அண்மையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் எதிர்ப்பாக ஒரு தரப்பினரும் பேசினர்.

ஆவேசம் அடைந்த சீமான்
குறிப்பாக கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகக் கடுமையாக பேசியிருந்தார். சீமானின் பேச்சுக்கு கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்றிருந்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஆவேசம் அடைந்த சீமான், "உங்களுக்கு எதைப்பற்றி அக்கறை உள்ளது. கடற்கரையில் புதைக்கவிட்டதே தவறு. இதில் பேனா நினைவுச் சின்னம் வேறு வைக்க வேண்டுமா? வேணும்னா, அறிவாலயத்தில் போய் வையுங்கள்...

கடுமையான போராட்டம் நடத்துவோம்
நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே, அதில் வையுங்கள், கடலுக்குள்தான் வைப்பாங்களாம். நீங்கள் பேனா வையுங்கள், ஒருநாள் நான் வந்து உடைக்கிறேன். பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது? பேனா நினைவு சின்னம் வைக்கக் கூடாது என்று சொல்லவில்லை. அதை ஏற்கிறோம். கடலில் வைக்கக் கூடாது.எனவே அதைத் தடுத்து நிறுத்தும் வரை கடுமையான போராட்டம் நடத்துவோம். இது உறுதி" என்று பேசியிருந்தார். சீமானின் இந்த பேச்சு கருத்துக் கேட்பு கூட்டத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது.

யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
தொடர்ந்து கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம் தொடர்பாக அரசியல் தலைவர்கள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பேசி வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுச்சின்னமாக பேனாவை கடலில் வைப்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

மீனவ பெருமக்களுக்கு நன்றாக தெரியும்
தேவையற்ற சர்ச்சையை இப்போது கிளப்பியிருக்கிறார்கள். மீனவ பெருமக்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மீனவ பெருமக்களுக்கு நன்றாக தெரியும். பேனா நினைவுச் சின்னம் அமைப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை மீனவ மக்கள் நன்றாக அறிந்து இருக்கிறார்கள். குறிப்பாக மெரினா கடற்கரையில் அமைய இருக்கும் அந்த சின்னத்தினால் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பதை அப்பகுதி மக்களும் அறிந்து இருக்கிறார்கள். மீன பெருமக்களுக்கு ஆதரவாக பேச வேண்டும் என்று எதோ ஒரு வகையில் இந்த பிரச்சினையை பூதாகரமாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications