மோசம் செய்த மழை.. மேட்டூருக்கு நீர் மட்டம் குறைந்தது.. காவிரி கால் வைக்குமா.. விக்கித்துப்போன டெல்டா
சென்னை: இதோ அதோ என்று ஆட்டம் காட்டி வருகிறது தென் மேற்கு பருவமழை. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை நம்பி குறுவை சாகுபடியை தொடங்கியுள்ளனர் விவசாயிகள். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடையாத நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்து விட்டது. கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டாலும் மவுனமே பதிலாக கிடைத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா என பயணம் செய்து தமிழகத்தில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியே பயணித்து, பூம்புகாரில் கடலில் கலக்கிறது. ஒகேனக்கல் வழியாக தமிழகம் வரும் காவிரி ஆறு, மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு தொடர்ச்சியாக பெய்த மழையால் ஓராண்டுக்கும் மேல் 100 அடிக்கும் மேல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்தது.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரி நதிநீர் பிரச்சினை தலைதூக்குவது வழக்கமாக உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு தமிழகத்தின் பங்கீடான காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் திறந்து விட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார் அப்போது முதல்வராக இருந்த சித்தராமையா. கர்நாடகாவின் குடிநீர் தேவைக்குத்தான் தண்ணீர் இருப்பு உள்ளது தமிழகத்திற்கு தண்ணீர் தர இயலாது என்று காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் ஒற்றுமையாக தெரிவித்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் காவிரி நீரில் தமிழ்நாட்டின் பங்கான 177.25 டி.எம்.சி. அடி நீரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என்பதும், இதில் ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. அடி நீர், ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி. அடி நீர், ஆகஸ்ட் மாதத்தில் 45.75 டி.எம்.சி. அடி நீர், செப்டம்பர் மாதத்தில் 14.70 டி.எம்.சி. அடி நீர் என மாதாந்திர அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை கர்நாடகம் திறந்து விட வேண்டுமென்பதும் நீதிமன்றத்தின் உத்தரவு. தமிழ்நாட்டிற்கு, கர்நாடகம் மாதாந்திர அடிப்படையில் திறந்துவிட வேண்டிய நீர் காவேரி மேலாண்மை ஆணையத்தால் கண்காணிக்கப்பட வேண்டும்
காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினை தலையெடுக்கும் போதெல்லாம் பருவமழை அபரிமிதமாக பெய்து கர்நாடகா அணைகள் நிரம்பி உபரி நீர்தான் அதிக அளவு காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும். கடந்த சில ஆண்டுகாலமாகவே பருவமழை அதிக அளவில் பெய்த காரணத்தால் அணைகள் நிரம்பி அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மேட்டூர் அணை நிரம்பி வழிந்தது. காவிரியிலும் கொள்ளிடத்திலும் வெளியேற்றப்பட்ட உபரிநீரால் வெள்ளம் பெருக்கெடுத்தது,
நடப்பாண்டு ஜூன் 1ஆம் தேதி தொடங்க வேண்டிய பருவமழை 8ஆம் தேதிக்கு மேல்தான் கேரளாவில் தொடங்கியது. அதே நேரத்தில் பைபர் ஜோய் புயலின் தாக்கத்தால் தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் பருவமழை மந்தமான நிலையிலேயே உள்ளது. கேரளாவிலும் பருவமழை இன்னமும் தீவிரமடையத் தொடங்கவில்லை. முல்லைப்பெரியாறு அணையிலும் நீர் மட்டம் குறைந்து வருவதால் மழையை நம்பி நடவு செய்துள்ள விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற வேண்டுமே என்று கவலையடைந்துள்ளனர். முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் மும்மதத்தினரும் மழை வேண்டி சர்வ மத பிரார்த்தனை நடத்தியுள்ளனர்.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் சரியான அளவில் பருவமழை பெய்தால் மட்டுமே அணைகள் நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்படும். நடப்பாண்டு பருவமழை டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருந்த நிலையில் டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவான 120 அடியில், தற்போதைய நிலவரப்படி ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. அடி நீரை கர்நாடகம் திறந்து வேண்டுமென்ற நிலையில், இன்றைய நிலவரப்படி வெறும் 1.65 டி.எம்.சி. அடி நீர் மட்டுமே தமிழ்நாட்டிற்கு கர்நாடகத்தால் திறந்துவிடப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் டெல்லியில் காவிரி மேலாண்டை கூட்டம் நடைபெற்ற போது தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ சாகுபடி துவங்கியுள்ளதையும், ஜூன் மாத அளவான 9.19 டி.எம்.சி.அடி நீரில், 7.54 டி.எம்.சி. அடி நீர் இன்னும் அளிக்கப்படட வேண்டுமென்றும், இந்த மாதத்திற்கான ஒதுக்கீட்டை உடனடியாக அளிக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டுமென்றும் தமிழ்நாடு சார்பில் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கர்நாடகத்தின் சார்பில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும்போது நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கர்நாடக அரசின் இந்தப் பதில் உபரி நீர்தான் அளிக்கப்படும், உரிய நீர் அளிக்கப்படாதது என்பது போல் உள்ளது.
ஜூன் மாதம் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசை காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் கேட்டுக்கொண்டதாகவும் ஆனாலும் இது தொடர்பாக எழுத்துப்பூர்வ உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 96 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 60.94 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 153 கனஅடியாக மட்டுமே உள்ளது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக அணைகளை பொறுத்தவரை கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 81 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 11.59 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 433 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 3,281 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 31.19 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 4.18 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 639 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
வருணபகவான் மனது வைத்து மழை பெய்தால் மட்டுமே கர்நாடகா அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும். மழை பெய்ய வேண்டும் என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் மட்டுமல்லாது கர்நாடகா மக்களும் வருண பகவானை வேண்டிக்கொள்ள துவங்கியுள்ளனர்.
-
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications