நெல்லை - பெங்களூருக்கு வந்தே பாரத்.. ஏர்போர்ட் போல மாறுது ஸ்டேஷன்.. ரயில்வேயின் அசரவைக்கும் பிளான்
சென்னை: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நெல்லை ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெங்களூர் - மதுரை வந்தே பாரத் ரயிலை நெல்லை வரை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் கூறியுள்ளார். இதேபோன்று நெல்லை - சென்னை இடையே மேலும் ஒரு ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ரயில் பயணிகளிக்கு அவ்வப்போது ஸ்வீட் சர்ப்ரைஸ்களை ரயில்வே கொடுத்து வருகிறது. ரயில் சேவைகள் நீட்டிப்பு, சிறப்பு ரயில்கள், பல்வேறு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் சேவைகள் என தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்று பாதுகாப்பான ரயில் பயணம் என்ற வகையில் ரயில் பெட்டிகளையும் மேம்படுத்தி வருகிறது.

அந்த வகையில் அம்ரித் பாரத் என்ற திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த ஊர்களின் பாரம்பரியத்தோடு, கூடுதல் வசதிகள், தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப புதுப்புது வசதிகளுடன் இந்த ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நெல்லை ரயில் பயணிகளுக்கு ஸ்வீட் சர்ப்ரைசை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புதுப்புது வசதிகளுடன் ரூ. 300 கோடியில் மேம்படுத்துவது மற்றும் சமீபத்தில் தொடங்கப்பட்ட மதுரை - பெங்களூர் வந்தே பாரத் ரயில் சேவையை நெல்லை வரை நீட்டிப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் தெரிவித்துள்ளார். இதனால் தென் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்கள் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் விழுப்புரத்தில் இருந்து நெல்லை ரயில் நிலையம் வரை பல்வேறு ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டும் வளர்ச்சிப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி நேற்று நெல்லை ரயில் நிலையத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்த ஆர் என் சிங் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன்பிறகு ஆர் என் சிங் கூறியதாவது:- ரயில் நிலைய வருவாய் அடிப்படையில் தற்போது நெல்லை ரயில் நிலையம் பி பிளஸ் தகுதிக்கு உயர்ந்துள்ளது. இதனால் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அம்ரித் பாரத் திட்டத்தில் நெல்லை ரயில் நிலையத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு இணையான வசதிகள் இந்த ரயில் நிலையத்தில் செய்யப்படும்.
பயணிகள் வந்து செல்ல தனித்தனி பாதைகள், லிப்ட்கள், மல்டி லெவல் பார்க்கிங் வசதி, வணிக வளாகம், ஏசி வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருக்கும் அறைகள் என பல்வேறு வசதிகள் செய்யப்படும். வரும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கிடு அடிப்படையில் இந்த வசதிகள் செய்யப்படும். நெல்லை தனி கோட்டம் அமைப்பு குறித்து அறிவிப்பானது அடுத்த 4 ஆண்டுகளுக்குள் வரும்.
சென்னை - நெல்லை இடையே மேலும் ஒரு ரயில் இயக்க பரிசீலனை செய்யப்படும். இதேபோன்று ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க ஏதுவாக கூடுதலாக முன்பதிவில்லா பெட்டிகள் இணைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோன்று பெங்களூர் - மதுரை வந்தே பாரத் ரயில் சேவையை நெல்லை வரை நீட்டிக்கவும் பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications