தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலி.. பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர் ஒடிசா செல்ல இன்று சிறப்பு ரயில்!
சென்னை: ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஒடிசா செல்ல வசதியாக தெற்கு ரயில்வே சார்பில் இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி நேற்று கோரமண்டல் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் அருகே இரவு 7 மணிக்கு இந்த ரயில் தடம் புரண்டது. இந்த ரயிலில் என்ஜின் ஏ1, ஏ2 மற்றும் பி2 முதல் பி 9 வரையிலான 8 பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் பெட்டிகளில் பயணித்த பொதுமக்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர்.

இதற்கிடையே தான் அந்த வழியாக வந்த பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் பெங்களூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 முன்பதிவில்லாத பொது பெட்டிகளும், ஒரு பிரேக் வேன் பெட்டியும் தடம்புரண்டது. அதற்கு பிறகு சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இப்படியாக அடுத்தடுத்து 3 ரயில்கள் விபத்தில் சிக்கின
இந்த விபத்தில் காலை 9 மணி நிலவரப்படி 270 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டை சேர்ந்தோர் உள்பட 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் ஒடிசா செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக தற்போது தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. அதாவது தெற்கு ரயில்வே சார்பில் ஒடிசாவுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்துக்காக இந்த ரயில் கட்டணமின்றி இயக்கப்படுகிறது.
இந்த ரயில் இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசாவுக்கு புறப்பட்டு செல்கிறது. ரயிலில் 1,350 பயணிகள் வரை பயணிக்கலாம். இந்த ரயில் 20 மணிநேரத்தில் ஒடிசா சென்றடையும். இந்த ரயிலில் பயணிக்க விரும்புவோர் தெற்கு ரயில்வேயின் இலவச சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களை பொதுமக்கள் 044-25330952, 044-25330953 & 044-25354771 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.












Click it and Unblock the Notifications