எழும்பூர் போய் ஏமாறாதீங்க.. தென் மாவட்ட ரயில் சேவையில் தொடரும் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேடை சீரமைப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 10ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை சில முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நவம்பர் 11ஆம் தேதிக்கு பிறகும் அதாவது நவம்பர் 29ஆம் தேதி வரை தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பயணிக்கும் பெரும்பாலான மக்கள், குறைந்த செலவில் பாதுகாப்பான பயணமாக இருப்பதால் ரயில் சேவையையே நம்பிக்கையுடன் பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக தெற்கு ரெயில்வே தினசரி பல முக்கிய ரயில்களை இயக்கி வருகிறது.

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், தேஜஸ் எக்ஸ்பிரஸ், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் தென் மாவட்ட மக்களுக்கு முக்கிய பயண வசதியாக இருந்து வருகின்றன.
தெற்கு ரெயில்வே
இதற்கு இணையாக சென்னை எழும்பூர் - திருச்சி வழியாகவும் பல்வேறு ரயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த சில மாதங்களாக எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை (பிளாட்ஃபாரம்) சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சில முக்கிய ரயில்கள் தற்காலிகமாக தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரெயில்வே இதற்கான மாற்று ஏற்பாடாக செப்டம்பர் 10 முதல் நவம்பர் 10 வரை இந்த நடவடிக்கை அமலில் இருக்கும் என முன்பே அறிவித்தது.
எழும்பூர் ரயில் நிலையம்
இப்போது அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், "நவம்பர் 11-ந்தேதிக்குப் பிறகு எழும்பூர் நிலையத்திலிருந்து வழக்கம் போல ரயில்கள் இயக்கப்படுமா?" என்ற கேள்வி பயணிகள் மத்தியில் எழுந்திருந்தது. ஆனால் தெற்கு ரெயில்வே தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, எழும்பூர் நிலையத்தில் நடைபெறும் பணிகள் இன்னும் முடிவடையாததால், சில முக்கிய ரயில்கள் தொடர்ந்து தாம்பரத்திலிருந்தே இயக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
தாம்பரம் ரயில் சேவை
இதன் விவரம் பின்வருமாறு," உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் - தாம்பரம் இடையே இயக்கப்படும். கொல்லம் - சென்னை அனந்தபுரி அதிவிரைவு ரெயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரத்தில் முடிவடையும். ராமேஸ்வரம் - சென்னை சேது அதிவிரைவு ரெயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இரவு 8.50 மணிக்கு புறப்படும் ரெயில், தாம்பரத்தை காலை 6.35 மணிக்கு அடையும்.
ரயில் சேவையில் மாற்றம்
ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரெயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரத்தில் முடியும். இந்த ரெயில் ராமேஸ்வரத்தில் மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தில் காலை 6.45 மணிக்கு வரும். குருவாயூர் விரைவு ரெயில் மறு அறிவிப்பு வரும் வரை தாம்பரத்திலிருந்தே இயக்கப்படும். சென்னை எழும்பூர் - மும்பை CSMT அதிவிரைவு ரெயில் தற்காலிகமாக சென்னை கடற்கரை (Chennai Beach) நிலையத்திலிருந்து புறப்படும். இதனால் தென் மாவட்ட பயணிகள் தாம்பரம் நிலையம் வழியாகவே தொடர்ந்து பயணம் செய்ய வேண்டியுள்ளது. எழும்பூர் நிலையப் பணிகள் முழுமையாக முடிந்த பிறகே வழக்கமான சேவை மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications