சென்னை மக்களே இதை கட்டாயம் கவனிங்க! ரயில் நேரம் மாற்றம்! கிரிக்கெட் போட்டி காரணமாக முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25 ஆம் தேதி சனிக்கிழமை இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டி நடக்க உள்ள நிலையில், பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவில் செல்லும் ரயில்களில் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இன்று (ஜனவரி 22) முதல் கொல்கத்தா, சென்னை, ராஜ்கோட், புனே மற்றும் மும்பை என மொத்தம் 5 இடங்களில் நடைபெறும் போட்டிகளில் இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்குகிறது. இந்த தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா vs இங்கிலாந்து டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. அதேபோல இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 செப்டம்பரில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சென்னை எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதல் முறையாக நடைபெறும் சர்வதேச போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.
சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25 ஆம் தேதி இங்கிலாந்து - இந்தியா மோதும் டி20 போட்டி நடக்க உள்ள நிலையில், பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில் 10 மணிக்கும், இரவு 10.20 மணிக்கு புறப்படும் ரயில் 10.30 மணிக்கும் மாற்றப்பட்டுள்ளது.

வேளச்சேரியில் இருந்து கடற்கரைக்கு இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடம் நிற்கும் (10.27 PM - 10.37 PM) என அறிவிப்பு வெளியாகி உள்ளது. பறக்கும் ரயில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் எந்த நேரத்தில் வரும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ளது. வரும் சனிக்கிழமை நடைபெறும் இந்தப் போட்டிக்கு டிக்கெட் வைத்திருப்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications