அதிரவைத்த கவரப்பேட்டை ரயில் விபத்து.. தவறு செய்தது யார்? 13 பேரை விசாரணைக்கு அழைத்த தெற்கு ரயில்வே!
சென்னை: கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக 13 ரயில்வே ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே சம்மன் அனுப்பியுள்ளது. விபத்துக்குள்ளான பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட் சுப்பிரமணியன் உள்ளிட்ட 13 பேர் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் இன்று மாலை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையில் குற்றம் நிரூபணமானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு சுமார் 2,000 பயணிகளுடன் நேற்று காலை 10.30 மணிக்கு பாக்மதி அதிவிரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் ஜோலார்பேட்டை, அரக்கோணம், பெரம்பூர் வழியாக கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 90 கி.மீ. வேகத்தில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் நேற்று இரவு 8.27 மணி அளவில், திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.

இதில், அந்த ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டன. மேலும் ரயிலின் பார்சல் பெட்டியில் அடிப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீsaaர், ஆர்.பி,எஃப். போலீசார், பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. 19 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ரயில் மாறியது எப்படி? கவரப்பேட்டையில் வல்லுநர் குழு விசாரணை!
தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், வழித்தட மாற்றம் செய்யப்பட்டும் உள்ளன. கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவின்பேரில் உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் லூப் லைனில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயில், லைன் சிக்னல் கொடுக்கப்பட்டும் மெயின் லைனுக்கு செல்லாமல் லூப் லைனுக்கு சிக்னல் சென்றதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதில் யார் மீது தவறு, சிக்னல் பிரச்சனையா என விசாரணை நடைபெற்று வருகிறது.
பதற வைக்கும் டிரோன் காட்சி! கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தின் தற்போதைய நிலை என்ன?
இந்தநிலையில் கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 13 ரயில்வே அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கவரப்பேட்டை ஸ்டேஷன் மாஸ்டர், பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட், உதவி லோகோ பைலட், மோட்டார் மேன் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் இன்று மாலைக்குள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
