நான் அமைச்சராகாததற்கு காரணம் என்ன? ஒதுங்கிவிட்டேன்! சவுமியா அன்புமணி
சென்னை: நான் அமைச்சராகாததற்கு காரணம் என்ன என்பது குறித்து பாமக அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும் தனது தாய் வீட்டிலும் மாமனார் வீட்டிலும் எப்படி பழகுவார்கள் என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து வாவ் தமிழா எனும் சேனலில் சவுமியா அன்புமணி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் சின்ன வயதில் இருந்த போதும் சரி, என் புகுந்த வீட்டிலும் சரி, முதல்வர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என நிறைய பேர் அப்பாவையும், மாமனாரையும், கணவரையும் பார்க்க வருவார்கள்.

அரசியல் ஆர்வம் என்பது தேர்தலில் போட்டி போடுவது என நினைக்கிறார்கள். எம்எல்ஏ, எம்பி ஆகணும், அல்லது கட்சியில் பதவியில் இருந்தால்தான் அரசியல் என்கிறார்கள். அப்படி கிடையாது. அரசியல் ஆர்வம் என்பது என்னை விட என் வீட்டில் வெளியே தெரியாத அத்தனை பேருக்கு அதிகமாக இருக்கிறது.
பசுமை தாயகம்
என்னை பார்ப்பவர்கள் எல்லாரும் ஏன் எம்எல்ஏ, எம்பி ஆகவில்லை என கேட்பார்கள். ஆனால் பசுமை தாயகம், மக்கள் தொலைக்காட்சி போன்ற நிறைய விஷயங்களை எடுத்து ஜெயித்துக் கொண்டிருக்கிறேன்.
சாதிக்க ஆசை
இதிலேயே எனக்கு நிறைய சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அரசியலில்தான் என் அப்பா, தம்பி, மாமனார், கணவர் என எல்லாரும் இருக்கிறார்களே! அவர்கள் படும் பாட்டை பார்க்கவே சரியாக இருக்கிறது.
ஒதுங்கி இருக்கிறேன்
இதில் நாமும் உள்ளே நுழைந்துவிட்டால் என்ன செய்வது என்பதால் நான் ஒதுங்கியே இருக்கிறேன். என் தந்தை குடும்பமும் எனது மாமனார் குடும்பமும் வேறு வேறு அரசியலை கொண்டிருக்கிறார்கள். இருவரும் ஒரு குடும்ப நிகழ்வில் சந்தித்துக் கொண்டால் அது மரியாதை நிமித்தமாக இருக்கும். அரசியல் பேச மாட்டார்கள்.
கூட்டணி
வெளியே இருவரும் வெவ்வேறு கட்சியினர், ஒரே கூட்டணியில் இருந்தாலும் பிரச்சினை இருக்கும். வெவ்வேறு கூட்டணியில் இருந்தால் ஒருவரை ஒருவர் எதிர்த்து தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டியிருக்கும். அப்படியிருக்கும் போது குடும்ப விழா எனும் போது எல்லாரும் ஒற்றுமையாக கலந்து கொள்வார்கள். "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்ற தெளிவுடன் நடந்து கொள்வார்கள்.
விசேஷம்
என் தம்பியும் என் கணவரும் கூட நன்றாக பேசிக் கொள்வார்கள். என் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் என்ற உரிமையுடன் என் தம்பியும், அவர் வீட்டு விசேஷத்தில் அத்தை, மாமா என்ற முறையில் நானும், கணவரும் முன்னாடி இருந்து நடத்தி வைப்போம்.
கலப்பு திருமணம்
வீட்டில் பேசிக் கொள்ளும் போது கூட இதுவரை காரசாரமாக விவாதித்தது இல்லை. எனது மகள்கள் காதல் திருமணம் செய்து கொள்வதில் எனக்கு விருப்பம் கிடையாது. ஆனால் எங்கள் வீட்டில் காதல் திருமணத்திற்கோ கலப்பு திருமணத்திற்கோ எதிர்ப்பு கிடையாது. இப்படி எத்தனையோ திருமணங்களை ஐயாவே நடத்தி வைத்திருக்கிறார்.
நாங்கள் எதிரியல்ல
எங்களுக்கு வேண்டாதவர்கள் இது போன்ற ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்குகிறார்கள். நாங்கள் எத்தனையோ முறை விளக்கிச் சொல்லியாகிவிட்டது. ஆனால் அவர்கள் கேட்ட பாடில்லை. நாங்கள் செய்த நல்லதுகளை யாரும் பேசுவதில்லை என சவுமியா அன்புமணி பேசியிருந்தார்.
சுமூக உடன்பாடு
பாமகவில் தந்தை ராமதாஸுக்கும் மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மூத்த நிர்வாகிகள் சமாதான பேச்சு நடத்தி வைத்த நிலையிலும் இருவருக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications