பொள்ளாச்சியில் அதே பிரம்மாண்டம்! அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தை கையிலெடுக்கும் எஸ்.பி.வேலுமணி!
சென்னை: கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரம்மாண்டமான முறையில் திமுக பொதுக்கூட்டம் நடந்த நிலையில், அதே பொள்ளாச்சியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி திமுகவுக்கு பதிலடி கொடுக்கும் யோசனையில் இருக்கிறார் எஸ்.பி.வேலுமணி.
இதற்காக எடப்பாடி பழனிசாமியிடம் அவர் நாள் கேட்டிருப்பதாகவும் அவர் நாள் குறித்தவுடன் முன்னேற்பாடுகள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வரும் செப்டம்பர் மாதம் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா பிறந்தநாள்
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். இந்தாண்டும் வழக்கம் போல் அந்த பொதுக்கூட்டங்கள் அதிமுக சார்பில் நடத்தப்படவுள்ளன. இதற்கான அறிவிப்புகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை எடப்பாடி பழனிசாமியை அழைத்து பொள்ளாச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளாராம் எஸ்.பி.வேலுமணி.

காரணம் என்ன?
கோவை மாவட்டம் எப்போதுமே அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையிலும் தனது செல்வாக்கை காட்டும் வகையிலும் பொள்ளாச்சியில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு இணையாக ஒரு பிரம்மாண்டத்தை காட்டும் முனைப்பில் இருக்கிறாராம் எஸ்.பி.வேலுமணி. இதற்காக எடப்பாடி பழனிசாமியிடம் அவர் தேதி கேட்டிருப்பதாகவும் அவர் நாள் குறித்தவுடன் முன்னேற்பாடுகள் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற வழக்குகள்
இதனிடையே அதிமுக பொதுக்குழு உள்ளிட்ட நீதிமன்ற வழக்குகள் இருப்பதால் தற்போதைய சூழலில் இது போன்ற பிரம்மாண்ட விழாக்கள் வேண்டாம் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு அவரது ஆலோசகர்கள் குழு வழங்கிய யோசனையாம். இருப்பினும் கட்சியினர் குறிப்பாக ஆதரவாளர்கள் சோர்வடையக் கூடாது என்பதற்காக பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என தொடர்ந்து நடத்தும் திட்டத்தில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

உதயகுமார் அழைப்பு
செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடத்தப்படவுள்ள நிலையில், மதுரையில் வந்து பங்கேற்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.பி.உதயகுமார் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.பி.வேலுமணி மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகிய இருவருமே எடப்பாடி பழனிசாமியை அழைத்து பிரம்மாண்டம் காட்ட திட்டமிட்டுள்ளதால் அவர் எந்த ஊரை தேர்வு செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே திருச்சி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்.பியுமான குமாரும் எடப்பாடி பழனிசாமியை அழைத்து திருச்சியில் மாஸ் காட்ட வேண்டும் என தவிக்கிறாராம்.












Click it and Unblock the Notifications