நான் சினிமா புரடியூசர்! ஷூட்டிங்கிற்காக கோபியில் மாதக் கணக்கில் தங்கி இருந்திருக்கிறேன்!-எ.வ.வேலு
சென்னை: தாம் திரைப்படத் தயாரிப்பாளராக இருந்தபோது ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில் மாதக்கணக்கில் தங்கியிருந்த காலமெல்லாம் உண்டு என பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிபாளையம் புறவழிச்சாலை குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் இன்று சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ஒரு காலத்தில் செங்கோட்டையனும், தானும் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்ததாகவும் கோபிச்செட்டிபாளையத்தை பொறுத்தவரை தனக்கு பரிச்சயமான பகுதி தான் எனவும் தெரிவித்தார்.
சினிமா படப்பிடிப்புகள் கோபி பகுதியில் அதிகம் நடைபெறுவதால் போக்குவரத்து அதிகமாகிக் கொண்டே இருப்பதை ஒப்புக் கொள்வதாகவும் ஷூட்டிங்கிற்காக தாமே ஒரு காலத்தில் கோபியில் மாதக்கணக்கில் தங்கியிருந்ததாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, நீங்கள் படத்தில் நடித்துள்ளீர்கள் என்கிறார்களே உண்மையா என அமைச்சர் எவ வேலுவிடம் கேட்க, அதற்கு புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்து தனது பேச்சை தொடர்ந்தார்.

அரசின் நிதி நிலை பற்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியும் என்று கூறிய எவ வேலு, 6 லட்சம் கோடிக்கு மேல் கடன் இருப்பதாகவும் அதற்கு வட்டி கட்ட வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறினார்.
இப்படிப்பட்ட சூழலில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதிக்கு சாலைத் திட்டப்பணிகளை கொண்டு வர வேண்டும் என்ற ஆவலும், ஆர்வமும் இருப்பதை தாம் தவறு என்று கூறவில்லை என்றார்.
செங்கோட்டையனின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஈரோடு மாவட்டம் கோபி புறவழிச்சாலை திட்டப்பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications