கிளாம்பாக்கம் போய் திண்டாட வேண்டாம்.. வீக் எண்டில் ஊருக்கு போறவங்களுக்கு குட் நியூஸ் சொன்ன எஸ்இடிசி
சென்னை: வார இறுதி நாளன வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால் அந்த இரண்டு நாட்களிலும் பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசின் போக்குவரத்து க்கழகம் தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் கடந்த வாரம் போதிய பேருந்து வசதி இல்லாமல் தவித்த நிலையில், இந்த வாரம் அத்தகைய பிரச்சினை இன்றி பயணிகள் பயணிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோவை என பல்வேறு ஊர்களுக்கு இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாலை 4 மணியில் இருந்து இரவு 10, 11 மணி வரை பயணிகள் வருவதும் போவதுமாக இந்த பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும்.

கிளாம்பாக்கத்தில் பயணிகள் கூட்டம்
அதிலும் வார இறுதி நாட்களில் திரும்பிய பக்கம் எல்லாம் திருவிழா கூட்டம் போல கிளாம்பாக்கம் காட்சியளிக்கும். தனியார் ஆம்னி பஸ்களும் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகின்றன. இதனால், ஆம்னி பஸ்களில் பயணிக்கும் பயணிகள், அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் என கூட்டம் அதிகமாக காணப்படும்.
கடந்த வாரம் பக்ரீத் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாள் இருந்ததால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் எதிர்பார்த்தை விட அதிகமாக இருந்தது. இதனால், பேருந்துகளில் இடம் கிடைக்காமல் பயணிகள் திண்டாடினர். பல ஊர்களுக்கு பேருந்து இயக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய பயணிகள் நள்ளிரவில் திடீர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
வார விடுமுறை நாட்கள்
இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதானப்படுத்தி பயணிகளை அனுப்பி வைத்தனர். கிளாம்பாக்கத்தில் இனி வரும் நாட்களில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூடுதல் பேருந்துகள் பேருந்துநிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் என்று போக்குவரத்துகழக அதிகாரிகள் கூறியிருந்தனர். வழக்கமாக வெள்ளி, சனிக்கிழமைகளில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
ஐடி நிறுவனங்கள், அலுவலங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சொந்த ஊர்களுக்கு சென்று வர பயணிகள் திட்டமிடுவார்கள். ரயில்களில் டிக்கெட் கிடைக்கது என்பதால் பயணிகள் பேருந்தையே அதிக அளவில் நாடுவது வழக்கம். அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் இந்த பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்தும் பயணிக்கிறார்கள்.
சிறப்பு பேருந்துகள்
எனினும், கடைசி நேர்த்தில் பயணத்தை திட்டமிடும் பயணிகள் வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு போக்குவரத்து விரைவு கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, வார இறுதியில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13- ம் தேதி 385 பேருந்துகளும், 14- ஆம் தேதி 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
250 சிறப்பு பேருந்துகள்
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 13-ம் தேதி 55 பேருந்துகளும் 14-ந் தேதி 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதாவரத்திலிருந்து 13 மற்றும் 14- ம் தேதிகளில் தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications