சபாஷ்..! குழந்தைகளுக்கு சிறப்பு கொரோனா வார்டு.. 3ஆம் அலையை எதிர்கொள்ள சூப்பர் திட்டம்
சென்னை: கொரோனா 3ஆம் அலையில் சிறார்கள் மத்தியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் சிலர் எச்சரித்துள்ள நிலையில், சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
Recommended Video
உலக வல்லரசான அமெரிக்கா தொடங்கி உலகின் அனைத்து நாடுகளுக்கும் கடந்த 1.5 ஆண்டுகளாகவே பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது கொரோனா வைரஸ் தான். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன.
இந்தியாவிலும் தீவிரமாகப் பாதிப்பை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக, கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் டெல்டா கொரோனாவால் ஏற்பட்ட 2ஆம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

தமிழ்நாட்டில் 2ஆம் அலை
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பத் தொடங்கின. ஒருபுறம் கொரோனாவாலும், மறுபுறம் சரியான நேரத்தில் சிகிச்சை, ஆக்சிஜன் கிடைக்காமலும் பலரும் உயிரிழந்தனர். நல்வாய்ப்பாகத் தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட பாதிப்புகளைக் கையை மீறிச் செல்லவில்லை. தலைநகர் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் ஆம்புலன்ஸ்களில் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. இருப்பினும், ஆய்வாளர்கள் கணித்த அளவுக்கு மிக மோசமான பாதிப்புகள் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. கொரோனா 2ஆம் அலை சமயத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் இப்போது தான் மெல்ல படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர்.

சிறார்கள் மத்தியில் வைரஸ் பாதிப்பு
இந்தச் சூழலில் கொரோனா 3ஆம் அலை குறித்து வெளியாகும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. அதாவது முதல் அலை சமயத்தில் முதியவர்களே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 2ஆம் அலை சமயத்தில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதனால் மூன்றாம் அலையின் போது குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புக்குள்ளதாகவும் அதை எதிர்கொள்ள ஏதுவாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சில ஆய்வாளர்கள் அறிவுறுத்தினர்.

அமைச்சர் நம்பிக்கை
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா எத்தனை அலை வந்தாலும் அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதாகத் தெரிவித்த மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சிறார்கள் மத்தியில் ஏற்படும் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் குழந்தைகளுக்குச் சிறப்பு வார்டுகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டுகளும் ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

சிறப்பு வார்டு
இந்தச் சூழலில் தற்போது சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக மருத்துவமனைகளில் குழந்தைகள் அட்மிட் ஆகும்போது அவர்களின் மன அழுத்தமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இதனால் குழந்தைகளுக்கான சிறப்பு வார்ட்டில் சுவர்களில் விலங்குகள் மற்றும் பொம்மைகளின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

என்ன சிறப்பு
இது சிறார்கள் மத்தியில் ஏற்படும் மன ரீதியான பாதிப்பு குறையும் என்றே மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். 15 படுக்கைகள் கொண்ட இந்த சிறப்பு வார்டில் குழந்தைகளுக்கு ஏற்ப வெண்டிலேட்டர், ஆக்சிஜன் வசதிகள், பல்ஸ் ஆக்சிமீட்டர் போன்ற வசதிகளை கொண்டுள்ளன. குறிப்பாக மயக்கமடைந்த நிலையில், குழந்தை எடுத்துவரப்பட்டாலும் அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்கும் வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பணிபுரியப்போகும் மருத்துவர்களுக்குக் குழந்தைகளுக்கு என்ன மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் எனப் பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.

மருத்துவர்கள் நம்பிக்கை
இது தவிரக் குழந்தைகளுக்கு ஏற்படும் மற்ற நோய்களுக்குச் சிகிச்சை அளிக்க ஏதுவாகவும் 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் விரைவில் தொடங்க தொடங்கப்படவுள்ளது. இதன் மூலம் சிறார்கள் மத்தியில் ஏற்படும் வைரஸ் பாதிப்புகளை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications