ரஜினி முதல்… அமைச்சர் உதயநிதி வரை.. - ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சி ஹைலைட்ஸ் என்ன?
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1. ஆனால் அதற்கு முதல் நாளே அவரது பிறந்தநாள் விழாவை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்துவிட்டார்.
ஸ்டாலினின் 70ஆவது பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக 'எங்கள் முதல்வர், எங்கள் பெருமை' என்ற புகைப்படக் கண்காட்சி ராஜா அண்ணாமலை மன்றத்தில் தொடர்ந்து சில நாள்களாக நடைபெற்று வருகிறது. திமுக சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக இக்கண்காட்சிக்கு அமைச்சர் சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்தார்.
இப்போதுவரை ப.சிதம்பரம் தொடங்கி ரஜினிகாந்த் வரை பலரும் வந்து தங்களின் கருத்தை அங்குள்ள பதிவேட்டில் எழுதிவிட்டுச் சென்றுள்ளனர். முதல்வர் ஸ்டாலினே ஒருநாள் வந்து கண்காட்சியைப் பார்வையிட்டுச் சென்றார். அதில் ஸ்பெஷல் என்னவென்றால், அங்கு மிசாவின் போது சிறையில் ஸ்டாலின் இருந்த காட்சியை அப்படியே தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர்.
அந்தச் சிறைக்குள் சென்று பார்த்த ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டிருந்த திண்ணையில் சற்றுநேரம் அமர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கினார். பின்னர் யார் யாரெல்லாம் வருகைப் பதிவேட்டில் என்ன எழுதிச் சென்றுள்ளனர் என்பதைப் பொறுமையாகப் படித்துப் பார்த்தார்.
அக்கண்காட்சியில், அவரது தந்தை மு.கருணாநிதி மருத்துவமனையிலிருந்த கடைசி நிமிடங்கள் புகைப்படங்களாக வைக்கப்பட்டிருந்தன. அதைக் கண்டதும் ஸ்டாலின், லேசாக கண்கலங்கி நின்றார்.
இந்தக் கண்காட்சி விடுமுறை தினங்களை ஒட்டி, இப்போது வேகம் எடுத்துள்ளது. அங்கே அமைக்கப்பட்டுள்ள ஸ்டாலின் போன்ற சிலை அருகே நின்று பலரும் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.
இதுவரை இந்தக் கண்காட்சி குறித்து யார் யார் என்ன சொன்னார்கள்? அவர்கள் பேசியது என்ன? முதலில் நடிகர் ரஜினிகாந்த் என்ன பேசினார் எனப்பார்ப்போம்.

நடிகர் ரஜினி:
"எனது நண்பர், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்க்கைப் பயணமும் அரசியல் பயணமும் ஏறக்குறைய ஒன்றுதான். கிட்டத்தட்ட 55 வருஷமாக அரசியலில் இருக்கிறார். படிப்படியாகக் கட்சியில் முன்னேறி வந்திருக்கிறார். பல பதவிகளை வகித்துவிட்டு, இப்போது முதலமைச்சர் ஆகியிருக்கிறார்.
அது மக்கள் அவரது உழைப்புக்குக் கொடுத்த அங்கீகாரம். அவர் நீண்டநாள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும்" என்றார்.
ரஜினி பார்வையிட்ட இக்கண்காட்சியை அவரது நண்பர் கமல்ஹாசன்தான் திறந்துவைத்தார். அவர் என்ன சொன்னார்?

நடிகர் கமல்ஹாசன்
இந்தக் கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் திறந்துவைத்தார். "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கலைஞர் மகன் ஸ்டாலின் என்பதிலிருந்தே எனக்குத் தெரியும். நெருங்க நட்பு எனச் சொல்லமுடியாது.
ஆனால் நட்பு இருந்தது. அது அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதை நாங்கள் இருவருமே தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு மாபெரும் தலைவரின் மகனாக இருப்பதின் சந்தோஷம் நிறைய உண்டு என்றாலும் சவால்களும் அதில் நிறைய உண்டு.
அந்தச் சந்தோஷங்களையும் அனுபவித்து, சவால்களையும் ஏற்று, தொண்டனாக, இளைஞரணி தலைவனாக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக, இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனப் படிப்படியாக உயர்ந்து வருவது என்பது அவரது பெருமையை மட்டுமல்ல; திறமையையும் காட்டுகிறது.
பதற்றப்படாமல், இத்தனை ஆண்டுக்காலம் அரசியலில் தொடர்ந்து இயங்கிவந்துள்ளார். நான் இளம் கமல்ஹாசனாக 'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்று சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால், அவர் தனது தந்தையின் செவிக்கு மிக அருகிலிருந்தபோதும் தனக்கென எதையும் சொல்லிக்கொள்ளாமல் வரிசையில் காத்து நின்று,இன்று அவரது திறமையினால் வந்துள்ளேன் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறார்.
சரித்திரத்தை நாம் அடிக்கடி நிலைப்படுத்த வேண்டிய கடமை இருக்கிறது. ஏனென்றால், சரித்திரத்தை மாற்றி எழுதத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். அதுவும் தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுதுவதில் பெரிய ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்குச் சவால் விடுவதைப் போல் நம் வரலாற்றை நாம் அடிக்கடி நினைவுகூர வேண்டும். அதற்கான முயற்சிதான் இந்தப் புகைப்படக் கண்காட்சி.
எப்போதும் ஒன்று சொல்வார்கள். நல்ல செய்தி தவழ்ந்துதான் வரும். தவறான செய்தி தந்தியில் வரும் என்று. அதைப்போன்று இந்தப் புகைப்படக் கண்காட்சியில் கூறப்பட்டுள்ளவை எல்லாம் நல்ல செய்தி" என்றார்.

விசிக தலைவர் திருமாவளவன்:
"வாழ்வில் ஒருவர் எப்படிச் செயல்படவேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது இந்தக் கண்காட்சி. ஒரு தொண்டனாகத் தனது வாழ்வைத் தொடங்கிய அவர், எவ்வாறு கடுமையான நெருக்கடிகளை எல்லாம் கடந்து வந்திருக்கிறார்? எப்படி அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகளுக்கு எல்லாம் ஆளாகியிருக்கிறார்? எப்படி படிப்படியாக தன் உழைப்பின் மூலமாக, பதவிகளைப் பெற்றிருக்கிறார்?
இன்றைக்குக் கட்சியின் தலைவராகவும் தமிழ்நாட்டின் முதல்வராகவும் எப்படி உயர்ந்திருக்கிறார் என்ற வரலாற்றுப் பரிமாணத்தை இந்தப் புகைப்படக் கண்காட்சிப் படம்பிடித்துக் காட்டி உள்ளது. பொதுவாழ்வில் சாதிக்கத் துடிப்பவர்கள் இதைக் கட்டாயம் காணவேண்டும்" என்றார்
மிசாவில் கைதாகி சிறையில் ஸ்டாலின் இருந்த காட்சியை அப்படியே வடிவமைத்திருக்கிறார்கள். அதற்குள்ளாக உள்ள இருக்கையில் சற்றுநேரம் அமர்ந்து பழைய நினைவுகளில் மூழ்கினார். அனைவரும் கண்காட்சி குறித்து என்ன எழுதியுள்ளனர் என்பதை வரிக்கு வரி படித்துப் பார்த்தார்.

நடிகர் பார்த்திபன்:
நடிகர் பார்த்திபன், "முன்பு ஒருமுறை, 'ஒவ்வொரு புகைப்படமும் ஒரு புதைகுழி மாதிரி' என நான் எழுதி இருந்தேன். அது இப்போது ஞாபகம் வருகிறது. பழைய புகைப்படத்திற்குள் மறைந்துள்ள ப்ளாஷ்பேக்கிற்குள் போய் விழுந்தால், அதிலிருந்து மீண்டு வருவது கஷ்டம்.
இந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது என்ன புரிகிறது என்றால், தமிழக முதல்வர் ஸ்டாலின் லிஃப்ட்டில் ஏறிவரவில்லை. படிப்படியாக ஏறித்தான் வந்துள்ளார் எனத் தெரிகிறது.
ஒவ்வொரு படியுமே கஷ்டமான, கடினமான, கற்களோடும் முற்களோடும் இருந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. இவ்வளவு சிரமங்களையும் தாண்டிதான் இந்த அரியணையில் அவர் ஏறியுள்ளார்.
நான் பெரியாரைப் பார்த்ததில்லை. பேரறிஞர் அண்ணாவைப் பார்த்ததில்லை. கலைஞரை என்னுடைய தந்தையைப் போலப் பாசமாகத்தான் பார்த்திருக்கிறேன். அதேபோலத்தான் தமிழக முதல்வர் ஸ்டாலினைத் தமையனைப் போலப் பார்த்திருக்கிறேன்.
அவர் மேயராக இருந்த போது நிறையப் பிரச்சினைகளுக்காக அவரைப் போய் அணுகியிருக்கிறேன். இன்றைக்கு அவர் முதல்வராக இருப்பது பெருமை. 'ஈசி கேக்வாக்' என்பார்கள். அந்தமாதிரி கேக்வாக் கிடையாது இது. கேட்கவே முடியாத, பார்க்கவே முடியாத அவ்வளவு கஷ்டமான விஷயங்களை அனுபவித்து விட்டு வந்துள்ளார்.
அவரிடம் எனக்குப் பிடித்த விஷயம் பொறுமை. பசிபிக் பெருங்கடல், கருங்கடல் எல்லாம் இருக்கலாம். ஆனால் பொறுமையின் பெருங்கடல் தமிழக முதல்வர்தான்" என்கிறார்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:
உதயநிதி ஸ்டாலின், "முதல்வர் ஸ்டாலினைப் பற்றிக் கூறும்போது உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்றார் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி. அதற்கான சான்று இந்தக் கண்காட்சி" அவரிடம் உங்களுக்குப் பிடித்த ஒரு படம் ஏதேனும் சொல்ல முடியுமா? என்றதற்கு "அனைத்தும்தான்" என்றார்.
அதேபோல் மிசாவில் ஸ்டாலின் சிறையிலிருந்த காட்சி இங்கே வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட கஷ்டங்களை எல்லாம் அனுபவித்து வந்தவர் ஸ்டாலின்.அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் எனக்கேட்டபோது, உதயநிதி மிகவும் நகைச்சுவையாக, "அப்ப நானும் உள்ள போகவேண்டும் என்று சொல்கிறீர்களா?" என்றார். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்.
மேலும் தொடர்ந்து அவர், "நானும் நிறைய முறை கைதாகி இருக்கிறேன். ஊழல் வழக்கு எல்லாம் கிடையாது. எல்லாம் போராட்டங்கள்தான். முதல்வர் ஸ்டாலின் மிசாவில் சிறையிலிருந்தபோதே நான் பிறந்துவிட்டேன். நான் பிறந்தபோது தாத்தா கருணாநிதி சிறையிலிருந்தார். அந்தப் பதிவுகள் எல்லாம் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது" என்கிறார்.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்:
"முதலமைச்சர் ஸ்டாலினைப் பற்றிய சுவையான கண்காட்சி இது. சரித்திரத்தைச் சொல்வது என்பது எளிதல்ல; சுவைக் குறையாமல், சரித்திரமும் பிறழாமல் இந்தக் கண்காட்சியை அமைத்துள்ளனர். அமைச்சர் சேகர்பாபு எதைச் செய்தாலும் சரியாகச் செய்யக் கூடியவர். அதை இந்தக் கண்காட்சி மூலமும் நிரூபித்துள்ளார்" என்றார்












Click it and Unblock the Notifications