பொங்கல் லீவு முடிந்து சென்னை வர்றவங்களுக்கு இன்ப அதிர்ச்சி.. சிறப்பு ரயில் அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற பயணிகள் சென்னை திரும்ப ஏதுவாக நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது வரும் ஞாயிற்றுக்கிழமை அதாவது வரும் 18 ஆம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் புறப்படும் நேரம், வழித்தடம், முன்பதிவு எப்போது தொடங்குகிறது என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு மக்கள் பலரும் சென்றுள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள், பேருந்துகள், கார்கள் உள்ளிட்டவற்றில் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகளும் ரயில்களும் இயக்கப்படுகின்றன.

பொங்கல் முடிந்து சிறப்பு ரயில்
பொங்கல் விடுமுறை வரும் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முடிகிறது. இதனால் அன்றைய தினம் சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு மீண்டும் திரும்ப ஆயத்தமாகி வருகிறார்கள். ரயில், பேருந்துகள் முன்பதிவு டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்ட நிலையில் ஆம்னி பஸ்கள் பக்கம் போகவே முடியாத நிலை உள்ளது.
நெல்லையில் இருந்து சென்னைக்கு 4 ஆயிரத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் வசூலிக்கப்படுவதால் சென்னை திரும்ப திட்டமிட்ட பயணிகள் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுமா? என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில்தான் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நின்று செல்லும் வழித்தடங்கள்
வரும் ஞாயிற்றுக்கிழமை 18 ஆம் தேதி இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
வண்டி எண் 06178 நெல்லை - தாம்பரம் ஒன்வே ஸ்பெஷல் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நெல்லையில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்க்கு வந்து சேரும். சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, கீழ கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், பம்பா கோவில்சாந்தி, சங்கரன் கோவில், ராஜபாளையம், ஸ்ரீவல்லிபுத்தூர், சிவகாசி , திருத்தங்கல், விருதுநகர், திருமங்கலம் வழியாக மதுரைக்கு 6.45 மணிக்கு இந்த ரயில் வந்து சேரும்.
நாளை காலையில் முன்பதிவு
மதுரையில் இருந்து மாலை 6.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு வழியாக திண்டுக்கல்லுக்கு இரவு 8.03 மணிக்கு வந்து சேரும். திண்டுக்கலில் இரண்டு நிமிடம் நின்று செல்லும் இந்த ரயில், மணப்பாறை வழியாக திருச்சிக்கு இரவு 9.15 மணிக்கு வந்து சேரும்.
திருசியில் இருந்து 9.20 மணிக்கு புறப்படும் ரயிலானது விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு திங்கள் கிழமை அதிகாலை 3 மணிக்கு வந்து சேரும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications