மீண்டும் பிசியாக போகுது! பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் மக்கள்! 19ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கம்!
சென்னை: பொங்கல் பண்டிகை நிறைவடைந்திருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையுடன் பொங்கல் விடுமுறை நிறைவடைகிறது. இதை எடுத்து 19ஆம் தேதி முதல் தென் மாவட்ட மக்கள் சென்னைக்கு திரும்புகிறார்கள். இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும், ரயில்களில் நெரிசலும் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை அடுத்து ராமநாதபுரத்திலிருந்து சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே இயக்குவதாக அறிவித்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை கடந்த 14ஆம் தேதி முதல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல் ஆகவும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்பட்டது.

நேற்று முன் தினம் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தினர். நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலாத் தளங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதுவரை இல்லாத அளவு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நீண்ட விடுமுறை கிடைத்தது. 11, 12, சனி ஞாயிறு, 13 போகிப் பண்டிகை, 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை, 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினத்திற்காகவும், 16ஆம் தேதி காணும் பொங்கலை ஒட்டியும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 17 ஆம் தேதி வேலை நாள் வந்தது. அதற்கு அடுத்த இரண்டு நாட்கள் வார இறுதியில் காரணமாக 18, 19 விடுமுறை நாட்களாக இருந்தது.

இந்த நிலையில் 17ஆம் தேதியையும் விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு செல்வதற்காக தென் மாவட்டங்களுக்கு சென்னை வாசிகள் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர். இதனால் பொங்கலன்று சென்னை வெறிச்சோடிக் காணப்பட்டது.
இந்த நிலையில் 19-ம் தேதியுடன் பொங்கல் விடுமுறை நிறைவடையும் நிலையில் பொதுமக்கள் அன்றிலிருந்து சென்னைக்கு திரும்புவார்கள். இதனால் பேருந்துகள் ரயில்களில் கூட்டம் அலைமோதும் என்பதால் தென்னக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. திருச்சி தாம்பரம், கன்னியாகுமரி தாம்பரம் , தூத்துக்குடி பெங்களூர், சென்னை சென்ட்ரல், எர்ணாகுளம் சென்னை சென்ட்ரல், எழும்பூர் திருநெல்வேலி, எழும்பூர் மதுரை ஆகிய பகுதிகளுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாக இருக்கும் அறிவிப்பில் 19ஆம் தேதி மண்டபத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மண்டபத்தில் 19ஆம் தேதி இரவு புறப்படும் அந்த ரயில் அடுத்த நாள் காலை 11:30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். அதில் மூன்று ஏசி பெட்டிகள், ஒன்பது ஸ்லீப்பர் பெட்டிகள், நான்கு பொதுப் பெட்டிகள், இரண்டு லக்கேஜ்- பிரேக் வேன் ஆகியவை இருக்கும்.
இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பழம் ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படும். தொடர்ந்து திங்கட்கிழமை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் வந்தடையும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications