தினம் 50 ஓட்டல்களுக்குக் கெட்டுப்போன கறி சப்ளை; சென்னை மக்களே உஷார்: மாட்டிறைச்சி மாஃபியா!
சென்னை: கெட்டுப்போன 800 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்தது குறித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரி பல அதிரடியான உண்மைகளைக் கூறியுள்ளார். எந்தளவுக்குப் பாதுகாப்பற்ற நிலையில் கறிகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டன என்பதைப் பற்றியும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இன்றைக்கு வீட்டுச் சாப்பாடு என விளம்பரப்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், பெரும்பாலான கடைகளில் வீட்டுச் சாப்பாட்டின் ருசியோ தரமோ கிடைக்கிறதா? என்று பார்த்தால் இல்லை. பலரும் உணவகத்தை மாடர்னாக மாற்றி வைத்து விடுகிறார்கள். உள்ளே சமையல் செய்பவரின் தரம், பொருளின் தரம் எப்படி உள்ளது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ஆனாலும், இந்த அவசர உலகத்தில் ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் உணவை வாங்கி சாப்பிடுகிறோம். அது எந்தளவுக்குத் தரமாக இருக்கிறது என்பதை எங்கே போய் உறுதி செய்வது? ஆர்டர் பண்ணச் சாப்பாடு தாமதமாக வந்தால் வரும் கோபம் பலருக்கு அதன் தரத்தின் மீது இருப்பதில்லை.

சமீபத்தில்தான் பஞ்சு மிட்டாய் உயிருக்கு கேடு விளைவிக்கக் கூடியது என்று அதைத் தடை செய்தார்கள். கெட்டுப் போன உணவகத்தின் மீது தடை விதிக்கப்படுகிறதா? அப்படி முடியுமா? என்பதைச் சட்டம் படித்தவர்கள் விளக்க வேண்டும். அதிகபட்சமாக ஒரு கடைக்கு அதிகாரிகள் சீல் வைக்கிறார்கள். சில நாட்களில் அந்தக் கடை சீரான நிலைக்கு திரும்பிவிடுகிறது.
இப்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் இன்னொரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார்கள் உணவு பாதுகாப்பு அதிகாரிகள். கிட்டத்தட்ட 800 கிலோ இறைச்சியைப் பிடித்துள்ளார்கள். அவ்வளவும் அழுகிப்போன நிலையிலிருந்துள்ளன. இந்தப் பறிமுதல் பற்றி உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார், “அழுகிப் போன மாட்டிறைச்சியை உணவகங்களுக்கு விநியோகம் செய்வதாக எங்களுக்கு சில தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில் தான் நாங்கள் பரிசோதனையில் இறங்கினோம். ஷெனாய் நகரில் கூவம் ஆற்று ஓரமாக இருக்கக்கூடிய ஒரு வீட்டுக்குப் போனோம். நாங்கள் போன போது சிலர் கெட்டுப் போன கறியை வெட்டி துண்டு போட்டுக் கொண்டிருந்தார்கள். அதை அனைத்தையும் பறிமுதல் செய்தோம். பார்க்கும்போதே பச்சை கலரில் பூஞ்சை படிந்திருந்தது.
வழக்கமாக அங்கேயே மாடு வெட்டுவார்கள் போல. அந்த இடம் முழுக்க ரத்தக் கறை. அங்கே உயிருடன் சில மாடுகள் கட்டிப்போட்டிருந்தனர். வழக்கமாக மாடுகளை வெட்ட வேண்டும் என்றால் மாநகராட்சி உட்பட்ட இடங்களில்தான் வெட்ட வேண்டும். அந்த இறைச்சிகள் உண்ணக் கூடிய அளவுக்கு தரமாக உள்ளன என்று மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும். அதுதான் விதி. ஆனால், இங்கே சட்ட விரோதமாக மாடுகள் வெட்டப்பட்டு வந்ததுடன் அதன் தரமும் கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்தது.
அது மட்டுமல்லாமல், அங்கே ஒரு குளிர்சாதனப் பெட்டி இருந்தது. அது நல்ல நிலையில் இல்லை. பழுதான நிலையிலிருந்தது. அதற்குள் வெளியிலிருந்து ஐஸ் வாங்கிக் கொண்டுவந்து கொட்டி இறைச்சியை வைத்திருந்தனர். இப்படியான உணவுப் பொருட்களை உண்டால் என்ன கேடு வரும் என்பதையே அவர்கள் உணரவில்லை. நாங்கள் விசாரிக்கத் தொடங்கிய உடனே அங்கிருந்த நபர் தப்பி ஓடிவிட்டார். ஏதோ கொஞ்ச அளவு மாட்டிறைச்சி இல்லை. கிட்டத்தட்ட 800 கிலோ பிடிபட்டுள்ளது. அதை முறையாக பிளீச்சிங் பவுடர் போட்டு கட்டிக் கொண்டு போய் முழுமையாக எரித்துவிட்டோம்.
நாங்கள் பரிசோதனைக்குப் போவதற்கு முன்பாகவே 28 கடைகளுக்கு அந்தக் கெட்டுப் போன இறைச்சியை அனுப்பிவிட்டார்கள். 20 ஹோட்டலுக்கு அனுப்புவதற்காகக் கறிகளை வெட்டி தயார் நிலையில் வைத்திருந்தார்கள். உடனே அத்தனை தடுத்தோம். மேலும் அனுப்பிய உணவகங்களின் தொலைபேசி எண்களை வாங்கி, அந்தக் கறியைச் சமைத்திருந்தால் உடனடியாக கீழே கொட்டச் சொல்லி உத்தரவிட்டோம். அதைச் செய்தார்களா என்பதையும் மீண்டும் உறுதிப்படுத்தினோம். அந்த வீட்டையும் சீல் வைத்துவிட்டோம்.
கெட்டுப் போன உணவுகளை உட்கொள்வதால் உடனடியாக ஃபுட் பாய்சன் ஏற்படும். இன்றைக்கு ஃபுட்பாய்சன் மூலம் உயிரை இழக்கக் கூடிய அளவுக்கு ஆபத்துகள் ஏற்படுகின்றன. செப்டிசீமியா என்று சொல்வார்கள். இப்படி அழுகிய கறியைச் சாப்பிடுவதன் மூலம் உடல் முழுவதும் செப்டிக் ஆகிவிடும். உடல் உறுப்புகள் கெட்டுப் போய்விடும். சிலர் கோமா நிலைக்கே சென்று விடுவார்கள். எனவே மாட்டிறைச்சி வாங்க வேண்டும் என்றால் நேரடியாக இறைச்சிக் கடைக்குச் சென்று வாங்க வேண்டும். அதன் தரத்தைச் சரி பார்த்து வாங்க வேண்டும்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த இறைச்சி கூட மாட்டுக்கறிதானா என எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அது வெளுத்துப் போய்விட்டது. அதனால் உடனடியாக ஆய்வுக்கு அனுப்பினோம். மாட்டுக்கறி என உறுதியானது. தமிழ்நாட்டில் நாய்கறி, பூனைக்கறி எல்லாம் விற்பது இல்லை. அதிக அளவில் கண்காணிப்பு இருக்கின்றது. ஆகவே அந்த அச்சம் மக்களுக்கு வேண்டாம். கூடுதலாக வெளிமாநிலங்களிலிருந்து ரயில் மூலம் கொண்டுவரப்படும் கறிகளை தினமும் கண்காணிக்கிறோம். இதுவரை நாய், பூனை கறிகள் தமிழகத்தில் பிடிபட்டது இல்லை” என்கிறார்












Click it and Unblock the Notifications