புறம்போக்கு நிலம், கிராம நத்தம் பட்டா.. சொத்து வரியில் சென்னை மாநகராட்சி ஆக்ஷன்.. விரைவில் அதிரடி
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு சொத்து வரி வசூலிப்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.. அத்துடன் பட்டா இல்லாத கட்டிடங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்வது குறித்தும் விரைவில் மாநகராட்சி முடிவெடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனம் சொத்து வரிகள் ஆகும்.. சுமார் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது..

கட்டமைப்பு: இதன் மூலம், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற மிக மிக அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில், வீடுகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், கடைகள் மூலம் வருடத்துக்கு 2 முறை சொத்துவரி வசூலிக்கப்படுகிறது.. சென்னையில், 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ள நிலையில், இவர்களிடமிருந்து மட்டும் அரையாண்டுக்கு சுமார் ரூ.850 கோடி வீதம், ஆண்டுக்கு ரூ-1,700 கோடி வசூலிக்கப்பட்டு வருகிறது.
சொத்து வரி: சொத்து வரியை செலுத்தாத உரிமையாளர்கள் கூடுதலாக 1 சதவீதம் தனி வட்டியுடன் சொத்துவரி செலுத்த வேண்டும். அதேபோல, சொத்துவரி மற்றும் தொழில்வரியை தாமதமின்றி 30 நாட்களில் செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம், அதிகபட்சம் 5,000 ரூபாய் ஊக்கத்தொகையும் அளிக்கப்பட்டு வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீடு செய்து வசூலிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.. சென்னையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதால், இவைகளுக்கு சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதாம். இதுதொடர்பாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மாவட்ட நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
புறம்போக்கு நிலம்: இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "முதலில் 20,000 கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீட்டை அதிகாரிகள் தொடங்க உள்ளனர். சென்னையில் தியாகராயநகர், ஆலந்தூர், மணலி, மாதவரம் பகுதிகளில் புறம்போக்கு நிலத்தில் கட்டிடங்கள் அதிக அளவில் உள்ளதால், இதுபோன்ற கட்டிடங்களை சுட்டிக்காட்டி அவற்றை மதிப்பீடு செய்து சொத்து வரி வசூலிக்க முடியும் என்று அரசிடம் விளக்கம் தரப்பட்டுள்ளது.
கிராம நத்தம் தவிர தி. நகர் போன்ற பகுதிகளில் சட்டபூர்வ வாரிசுகள் இல்லாமல் உரிமை கோரப்படாத நிலங்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் உள்ளன. ஆனால், பட்டா எதுவும் இல்லாமலேயே பல தலைமுறைகளாக குடும்பங்கள் வசித்து வருவதால், இதுபோன்ற சொத்துகள் மீது அரசு முடிவெடுக்கும்.
கிராம நத்தம்: அதேபோல, விரிவாக்கப்பட்ட பகுதிகளில் கிராம நத்தம் உள்ள பல கட்டிடங்களுக்கு சொத்துவரி மதிப்பீடு செய்யவில்லை... குறிப்பாக, இந்து சமய அறநிலையத் துறை நிலங்கள் மற்றும் வக்பு வாரிய நிலங்களில் உள்ள பல கட்டிடங்களுக்கு சொத்து வரி மதிப்பீடு செய்யவில்லை. எனவே, பட்டா இல்லாத கட்டிடங்களுக்கும் சொத்து வரி நிர்ணயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.. இவ்வாறு வசூலிப்பதன் மூலம் மாநகராட்சியின் வருவாயை பெருக்க முடியும்" என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications