சமூக வலைதளங்களை சூடாக்கிய ஸ்ரீதர் வேம்பு பதிவு.. சந்திரபாபு நாயுடு பேசியதை வைத்து பரபரப்பு கருத்து
சென்னை: ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்திக்கு ஆதரவாக பேசியதை வைத்தும், தமிழர்கள் ஆங்கில அறிவால் உயர்ந்தது பற்றி பேசியதை வைத்தும் பெரிய விவாதமே நடந்து வருகிறது. இந்நிலையில் இந்திக்கு ஆதரவாக சந்திரபாபு நாயுடு பேசியதை வைத்து பாஜகவினர் விவாதித்து வருகிறார்கள். இந்த சூழலில் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட பதிவு
சமூக வலைதளங்களை சூடாக்கி உள்ளது. திமுக ஆதரவாளர்கள் பலர் அவருக்கு பதிலடி கொடுத்து வருகிறாரகள்.
தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் பாஜகவை தவிர பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தமிழகத்தை ஆளும் திமுகவும் சரி, எதிர்க்கட்சியான அதிமுகவும் சரி, புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய்யும் சரி மும்மொழி கொள்ளையை எதிர்க்கிறார்கள்.. ஆனால் இது அரசியலுக்காகவே இப்படி செய்யப்படுவதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. பாஜக தற்போது மும்மொழி கொள்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது.

இந்நிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர பிரதேச முதல்வருமான சந்திபாபு நாயுடு நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு ஆங்கிலத்தை மட்டுமே ஊக்குவித்தது. ஆங்கிலம் மட்டும்தான் வாழ்வாதாரம் என்ற வகையில் ஊக்குவித்து வந்திருந்தது..
ஒருவருடன் தொடர்பு கொள்வதற்கு மட்டுமே மொழி தேவையாகும்,. அறிவுசார்ந்த படிப்புகள் தாய்மொழி மூலம்தான் கிடைக்க வேண்டும். தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகள் உலக அளவில் பிரசித்து பெற்று வருகின்றன. கூகுள் தலைமை செயல் அதிகாரி கூட ஒரு தமிழர்தான். தமிழகத்தில் இருந்து பலரும் அமெரிக்கா செல்கின்றனர்.
தமிழர்கள் ஆங்கிலம் கற்று மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றனர். உயர் பொறுப்புகளிலும், முதல் மற்றும் 2ஆம் இடங்களிலும் தமிழர்களே அதிகம் இருக்கிறார்கள். தமிழகம் என்றாலே முன்பு இந்திய அளவில் சேவைத்துறையில் அதிகம் இருந்தார்கள். தற்போது உலகம் முழுக்கச் சென்றுள்ளார்கள். காரணம் அவர்களின் திறமை. எனவே அறிவு வேறு, மொழி வேறு. அதேநேரம் மக்களுடன் எளிதில் பழகுவதற்கு ஹிந்தியை நாம் கற்றுக் கொள்வது நல்லதுதான்.
ஆந்திரத்தில் மூன்று மொழியல்ல.. ஐந்து முதல் 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்.. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஐந்து முதல் பத்து மொழிகளை நான் ஊக்குவிக்கப் போகிறேன் அதனை படித்து மாணவர்கள் விரும்பிய இடங்களுக்குச் சென்று வேலை செய்து பயன்பெற வேண்டும்" என்று கூறினார். இந்த கருத்தை குறிப்பிட்டு ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட பதிவில், இதோ ஆந்திர முதல்வர் (சந்திரபாபு நாயுடு), இந்தியின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுயிருக்கிறார்.
ஆந்திரப் பிரதேசம் நமது அண்டை மாநிலம். கலாச்சார ரீதியாக தமிழ்நாட்டிற்கு மிக நெருக்கமான மாநிலம் ஆகும். ஆனால் ஆந்திர மாநிலத்தவர்கள் மொழியை அரசியலாக்குவதில்லை. கேரளாவும் மொழியை அரசியலாக்குவதில்லை (அவர்களுக்கு பல விஷயங்களில் மத்திய அரசாங்கத்துடன் உடன்படவில்லை என்ற சூழல் நிலை உள்ள போதும், மொழியை வைத்து அரசியல் செய்வது இல்லை). நமது அண்டை மாநிலங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று இதுதான் என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். இவரது இந்த பதிவிற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடும் எதிர்வினையாற்றி வருகின்றன.
முன்னதாக கடந்த வாரம் டெல்லி மற்றும் மும்பையில் பணியாற்றும் ஸோஹோ நிறுவனத்தின் என்ஜினியர்கள் மத்தியில் ஸ்ரீதர் வேம்பு பேசுகையில், "இந்தியாவில் ஜோஹோ நிறுவனம் மிக வேகமாக வளர்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராமப்புற பொறியாளர்கள், மும்பை, டெல்லியில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறார்கள். எங்கள் வணிகத்தின் பெரும்பகுதி, டெல்லி, மும்பை, குஜராத்தில் மேற்கொள்ளப்படுகிறது. எனவே, தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொள்ளாதது எங்களுக்கு பெரிய குறைபாடாக உள்ளது.
இந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனமான முடிவாகும். கடந்த 5 ஆண்டுகளில் நான் இடைவிடாமல் இந்தியை கற்றுக் கொண்டேன். இப்போது இந்தியில் பேசப்படும் விஷயங்களில் சுமார் 20 சதவீதத்தை புரிந்து கொள்கிறேன். இந்தியாவில் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும். அரசியலைப் புறக்கணித்து விட்டு, மொழியைக் கற்றுக் கொள்வோம். இந்தி கற்றுக் கொள்வோம்... என்று கூறினார். ஸ்ரீதர் வேம்பின் இந்த கருத்துக்கும் அப்போது தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது.












Click it and Unblock the Notifications