மொத்தம் 7 மாநிலங்கள்.. "பாஜக vs இந்தியா கூட்டணி.." இடைத்தேர்தலில் ஆதிக்கம் செலுத்த போவது யார்!
சென்னை: நமது நாட்டில் இப்போது தான் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக இப்போது ஏழு மாநிலங்களில் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் என்டிஏ தரப்பிற்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. எதற்காக இந்த 13 தொகுதிகளில் இடைத்தேர்தல்.. இந்தத் தொகுதிகளின் களநிலவரம் என்ன.. என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் இப்போது தான் முடிந்துள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கும் வகையில் அதிகபட்ச இடங்களில் வென்றது. இதற்கிடையே இப்போது ஏழு மாநிலங்களில் 13 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

ஜூலை 10ம் தேதி நடக்கும் இந்தத் தேர்தலில் ஆளும் என்டிஏ தரப்பிற்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
13 தொகுதிகள்: மேற்கு வங்கத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, மத்தியப் பிரதேசத்தில் அமர்வாரா, பீகாரில் ரூபாலி, உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் மற்றும் மங்களூர், பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு, இமாச்சலப் பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய 13 தொகுதிகளில் தான் இடைத்தேர்தல் நடக்கிறது.
எம்எல்ஏவாக உயிரிழப்பு, ராஜினாமா செய்துவிட்ட மற்ற கட்சிகளில் இணைந்தது உள்ளிட்ட காரணங்களால் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. ஜூலை 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 13 தொகுதிகளிலும் களநிலவரம் எப்படி இருக்கிறது என்பது குறித்துப் பார்க்கலாம்.
மேற்கு வங்கம்: இதில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் 4இல் 3 தொகுதிகளில் (ராய்கஞ்ச், ரணகாட் தக்சின் மற்றும் பாக்தா) கடந்த முறை பாஜக வென்று இருந்தது. அந்த தொகுதிகளில் எமஎல்ஏவாக இருந்தவர்கள் லோக்சபா தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் ஐக்கியமானார்கள், அவர்கள் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போதிலும் மூன்று பேருமே தோல்வி அடைந்தனர்.
அதேபோல திரிணாமுல் தலைவர் சதன் பாண்டே உயிரிழந்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 4 தொகுதிகள் யாருக்குச் செல்கிறது என்பது மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு: தமிழ்நாட்டைப் பொருத்தவரை விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் காலமான நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் திமுக, பாமக கூட்டணியில் இருந்து பாமக, நாம் தமிழர் கட்சி களத்தில் உள்ளன. எதிர்க்கட்சியான அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், பாமக சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் அன்புமணியும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி டாக்டர் அபிநயாவை களமிறக்கியது. வன்னியர் மக்கள் அதிகம் இருக்கும் இந்தத் தொகுதியில் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி மரணம் இந்த இடைத்தேர்தலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரகண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ராஜேந்திர பண்டாரி கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. பத்ரிநாராயண் கோயில், சார் தாம் ஆலயம் மற்றும் சங்கராச்சாரியாரின் நான்கு மடங்களில் ஒன்றான ஜோஷிமத் ஆகியவற்றை உள்ளடக்கியதால் இந்த பத்ரிநாத் தொகுதி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல அங்குள்ள மக்களூர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் சர்வத் கரீம் அன்சாரி கடந்த அக்டோபரில் மரணமடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.. இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் இந்த தொகுதியில் பாஜக இதுவரை வென்றதே இல்லை. இதனால் இந்த தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இமாச்சல பிரேசம்: இமாச்சலப் பிரதேசத்தில் டெஹ்ரா, ஹமிர்பூர் மற்றும் நலகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலுக்குப் பிறகு இமாச்சல பிரதேசத்தில் மிக பெரிய மாற்றம் வரும் என பாஜக கூறுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸுக்கு ஆதரவு அளித்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடுத்து அவர்கள் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். இப்போது மூன்று தொகுதிகளில் சுயேட்சை எம்எல்ஏக்கள் மீண்டும் களமிறங்குகிறார்கள். இதில் டெஹ்ராவில் தொகுதியில் ஆளும் காங்கிரஸ் தரப்பு முதல்வர் சுகுவின் மனைவி களமிறங்குகிறார்.
மற்ற தொகுதிகள்: பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியு கட்சி எம்எல்ஏ பீமா பார்தி லோக்சபா தேர்தலுக்கு முன்பு செய்துவிட்டு ஆர்ஜேடி கட்சியில் இணைந்தார். எனவே, அங்கு அந்த ரூபாலியில் இடைத்தேர்தல் நடக்கிறது. ஆர்ஜேடி தரப்பு அதே பீமா பார்திக்கு வாய்ப்பு வழங்கி உள்ளது. அதேநேரம் ஜேடியு தரப்பில் களதர் மண்டல் போட்டியிடுகிறார். இருவருமே இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள கங்கோடா சமூகத்தைச் சேர்ந்தவர்களாகும்.
அதேபோல பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருந்த ஷீத்தல் அங்கூரல் லோக்சபா தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது. அங்குக் காங்கிரஸ் ஆம் ஆத்மி இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி எப்படியாவது அதைத் தக்க வைக்க வேண்டும் என்று முனைப்புக் காட்டுகிறது.












Click it and Unblock the Notifications