நீதியின் தூதுவர்களாக திகழ வேண்டும்! சட்டப் பல்கலை. மாணவர்களுக்கு முதல்வர் தந்த அட்வைஸ்!
சென்னை: சட்டம் பயிலக்கூடியவர்கள் நீதியின் தூதுவர்களாக திகழ வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியிருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளி விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இதனைக் கூறினார்.
மேலும், உங்களது கட்சிக்காரர்களுக்கு வெற்றி தேடித்தரும் வழக்கறிஞர்களாக மட்டுமில்லாமல் - நீதிக்கு வெற்றி தேடித் தரும் வழக்கறிஞர்களாக திகழ வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

சட்டம் ஒரு இருட்டறை
உங்களது சட்ட அறிவை, வாதத்திறனை, ஏழை எளிய - ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன். "சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதமே விளக்கு. அந்த விளக்கை ஏழைகளால் பெற முடியவில்லை"என்று பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள் வருந்தினார்கள். அப்படி அமைந்து விடக்கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிக் கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளைக் காக்க உங்களது கல்வியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

முதல்வர் அட்வைஸ்
சமத்துவ உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, எண்ணங்களை வெளியிடும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, பணிகள் செய்யும் உரிமை, மத சுதந்திரம்
கல்வி உரிமை, சொத்துரிமை பாதிக்கப்பட்டால் அதற்கு தீர்வு காணக்கூடிய உரிமை ஆகிய பல்வேறு உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதனைக் காக்கும் வழக்கறிஞர்களாக நீங்கள் திகழ வேண்டும். சட்ட நீதியை மட்டுமல்ல - சமூக நீதியையும் நிலைநாட்டக் கூடியவர்களாக நீங்கள் விளங்க வேண்டும்.

நீதியின் தூதுவர்கள்
சட்டத்தின் அரசாக - நீதியின் அரசாக - அதுவும் சமூகநீதியின் அரசாக - 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற சமூகநீதித் தத்துவத்தை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நாம் நடத்தி வருகிறோம். மக்களுக்கு இன்றைய தேவை என்பது நீதி மட்டும்தான். அத்தகைய நீதியின் தூதுவர்களாக சட்டம் படிக்கும் நீங்கள் எதிர்காலத்தில் திகழ வேண்டும்.

நீதிக்கு வெற்றி
சட்டப் புத்தகங்களையும் தாண்டி, இந்த சமூகத்தையும் பாடமாக நீங்கள் படிக்க வேண்டும். உங்களது கட்சிக்காரர்களுக்கு வெற்றி தேடித்தரும் வழக்கறிஞர்களாக மட்டுமில்லாமல் - நீதிக்கு வெற்றி தேடித் தரும் வழக்கறிஞர்களாக நீங்கள் விளங்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.












Click it and Unblock the Notifications