ஒரே நாடு ஒரே தேர்தல்! நினைத்ததை சாதிக்க தலையாட்டி பொம்மைகள் குழு! ஸ்டாலின் கிண்டல்!
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவும் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்பதற்காகவும் தலையாட்டி பொம்மைகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல மணவிழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
'''ஒரே நாடு - ஒரே தேர்தல்' என்ற ஒரு நிலையை ஏற்படுத்துவதற்காக சில முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஒரே நாடு - ஒரே தேர்தலை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறார்கள். அந்தக் குழுவிற்கு யார் தலைவர் என்றால், இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி.

இந்திய நாட்டின் முதல் குடிமகன் என்று சொல்கிறோம் அல்லவா, அந்த ஜனாதிபதி பொறுப்பில் இருந்தவரைத் தலைவராக போட்டிருக்கிறார்கள். இந்திய நாட்டின் ஜனாதிபதி என்பவர் ஒரு பொதுவானவர். அவர் பதவியில் இருந்து விலகினாலும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது அல்லது அரசியல் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையிலும் தலையிடுவது அவருக்கு நியாயம் கிடையாது. அதுதான் மரபு. அவர் ஒரு பொதுவானவராக மாறிவிடுகிறார்.
ஆனால் அதை எல்லாம் இன்றைக்குக் கொச்சைப்படுத்தி, கேவலப்படுத்தி அதையெல்லாம் பற்றிக் கவலைப்படாமல், இவர்கள் சொல்வதை அவர் கேட்பார் என்பதற்காக அவரைப் போட்டு, அதற்குப் பிறகு அதில் சில உறுப்பினர்களைப் போட்டிருக்கிறார்கள். அந்த உறுப்பினர்களிலாவது எல்லா கட்சியும் கலந்து, கேட்டு போட்டார்களா என்றால், அதுவும் கிடையாது.
திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. தி.மு.க.வின் பிரதிநிதிகள் இருக்கிறார்களா என்றால் கிடையாது.
எனவே தலையாட்டி பொம்மைகளாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பேரை போட்டு, அவர்கள் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சர்வாதிகாரத்தோடு அந்த கமிட்டியை நியமித்து ஒரு சதித்திட்டத்தை ஏற்படுத்துவதற்காக இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ''












Click it and Unblock the Notifications