முதல்வருக்கு எல்லோரும் சமம் “இந்து சமய அறநிலையத்துறைக்கு ஸ்டாலின் காலம் பொற்காலம்”- அமைச்சர் பேச்சு!
சென்னை : ஆத்திகர்களும் நாத்திகர்களும் ஒருசேர உருவாக்கியதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.
Recommended Video
தமிழ் சார்ந்த ஆட்சி என்பதால் தமிழை மையமாக வைத்து வாழ்ந்து மறைந்த மகான்களின் பிறந்த நாட்களை அரசு விழாவாக கொண்டாடுகின்ற முதல் தமிழக முதலமைச்சராக இருப்பவர் ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.
மேலும், முதல்வர் ஸ்டாலினின் ஆட்சிக் காலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒரு பொற்காலமாக வரலாற்றில் பதியும் என்றும் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

குன்றத்தூர்
பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழார் பிறந்த தலமான குன்றத்தூரில் ஆண்டுதோறும் பத்து நாட்கள் விழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த கால ஆட்சியில் ஒரு நாள் மட்டுமே அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு முதல் மூன்று நாட்களுக்கு அரசு விழாவாக வெகு சிறப்பாக நடத்தப்படும் என்று சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். அதன்படி, மே 26 முதல் அரசு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அமைச்சர்கள் பங்கேற்பு
இறுதி நாளான இன்று பெரிய புராணம் போற்றும் பெண் நாயன்மார்கள் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ செல்வபெருந்தகை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை கண்டுகளித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர்.

திராவிட மாடல் ஆட்சி
இந்த விழாவின்போது உரையாற்றிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தமிழக முதல்வரைப் பொறுத்தவரையில், ஆத்திகர்கள் நாத்திகர்கள் என்ற பிரிவினை இல்லை. முதல்வருக்கு எல்லோரும் சமம். ஆத்திகர்களும் நாத்திகர்களும் ஒருசேர உருவாக்கியதுதான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்பதில் எள்ளளவும் கருத்து வேறுபாடு இல்லை. அந்த அடிப்படையில்தான் தமிழக முதல்வர் செயல்படுகிறார்.

பொற்காலம்
இந்த 5 ஆண்டுகளுக்கு மக்கள் தந்துள்ள அங்கீகாரத்தை, 5 ஆண்டுகள் நிறைவுபெறும்போது பார்த்தால், இந்துசமய அறநிலையத்துறை 1959-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்தாலும், இதுவரை இல்லாத அளவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆட்சிக் காலம் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒரு பொற்காலமாக வரலாற்றில் பதியும் அளவுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து அவற்றை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications