சிக்சரடிக்க தயாரான ஸ்டாலின்! கிளாம்பாக்கம் ஸ்கைவாக்.. பூந்தமல்லி மெட்ரோ! அதிகாரிகளுக்கு பறந்த ஆர்டர்
சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை முக்கியமான ஆய்வுக்கூட்டம் நடந்துள்ளது. அதில் அரசின் "Iconic Projects" என அழைக்கப்படும் முக்கியத் திட்டங்கள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்ட நிலையில், இந்தக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரெயில் 2ஆம் கட்டத் திட்டத்தின் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் பாதை பணிகள் பற்றி முதல்வர் தனியாக ஆய்வு செய்ததாகக் கூறப்பாடுகிறது.
தேர்தல் நடைமுறைகள் விரைவில் தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மெட்ரோ ரயில் பாதை பணிகளை 2026 பிப்ரவரி மாதத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும், மெட்ரோ திட்டப்பணிகள் தாமதம் ஆகாமல் கவனிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அரசுத் துறை வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல் படி, "Iconic Projects" பிரிவில் ஆரம்பத்தில் 155 திட்டங்கள் இருந்தன. தற்போது அவை 24 துறைகளின் கீழ் மொத்தம் 288 திட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களுக்கு மொத்தம் ரூ.3,17,693 கோடி மதிப்பாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
இந்த 288 திட்டங்களில் 85 திட்டங்கள் ஏற்கனவே முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள திட்டங்கள் பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இவற்றில் ரூ.87,941 கோடி மதிப்பிலான 27 திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் நேரடியாக ஆய்வு செய்தார். இந்த 27 திட்டங்களையும் அதிகபட்சம் 2026 ஜனவரி மாதத்திற்குள் முடித்து விட வேண்டும் என அவர் அதிகாரிகளை அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஐகானிக் திட்டங்கள்
மேலும் வறட்சி அதிகமாக உள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சிவகங்கை, மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்தப் பணிகள் திட்டமிட்டபடி சென்று கொண்டிருக்கிறதா என்பதையும் முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதேபோல் மதுரையில் உள்ள வண்டியூர் ஏரி சார்ந்த மேம்பாட்டு பணிகள் பற்றிய விவரங்களும் கூட்டத்தில் விளக்கப்பட்டன.
ஸ்கைவாக்
இதுமட்டுமல்லாமல், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ் குத்தம்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையங்கள் பற்றிய முன்னேற்றங்களும் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் கிலாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் பயணிகள் பாதுகாப்பாகச் செல்ல ஸ்கைவாக் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகளும் வேகமாக முடிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.
உதயநிதி ஸ்டாலின்
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் ந.முருகநந்தம் உள்ளிட்ட பல துறைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அரசு திட்டங்கள் நேரத்தில் முடிந்தால் பொதுமக்கள் பயன் பெறுவார்கள் என்பதால், அவற்றின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மெட்ரோ 2ஆம் கட்டம்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத இடைவெளியே உள்ள நிலையில் பிப்ரவரி மாதத்திற்குள் முடிந்த அளவு அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் எனவும், இதனை தொடங்கி வைக்க, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ள உள்ளனர் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications