உள்ளாட்சித் தேர்தல்களில் முதல் முறையாக பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய திமுக ஆட்சி! ஸ்டாலின் பெருமை
சென்னை: உள்ளாட்சித் தேர்தல்களில் முதல் முறையாக பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிய ஆட்சி திமுக ஆட்சி என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை 1996ஆம் ஆண்டு வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.

பாலின சமத்துவத்தை காக்கும் வகையில் பெண்களுக்கு திமுக அரசு என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பது குறித்தும் முதல்வர் பட்டியலிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு;
* பெண்களுக்குச் சொத்தில் சம உரிமமைச் சட்டம்.
* பெண் காவலர்கள் நியமனம்
*அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 40 விழுக்காடு இடஒதுக்கீடு.
* உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு.
* பெண்கள் தம் சொந்தக் காலில் நிற்க வசதியாக மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்தது.
* ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரி வரை இலவசக் கல்வியும் வழங்கப்பட்டது.
* ஒன்று முதல் 5 வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக மகளிரை நியமித்த அரசு திமுக அரசு.
* கிராமப்புறப் பெண்களுக்குப் பணி நியமனத்தில் முன்னுரிமை கொடுத்தது கழக அரசு.
* மகளிருக்குப் பேருந்துகளில் கட்டணமில்லா விடியல் பயணம்.
* மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை - ஆகிய பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டியது தி.மு.க. அரசு.
பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் 1996-ஆம் ஆண்டு வழங்கினார். ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் 1990-ஆம் ஆண்டு இறுதியில் தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பின்னர், கழக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் நடைபெற்ற ஐந்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த அந்த ஆட்சியினர் முன்வரவே இல்லை.
1996-ஆம் ஆண்டு, தி.மு.க வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பக்கம் 6-இல், "அடுத்து அமைக்கப்படும் தி.மு.க அரசு, புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என்று உறுதி கூறுவதோடு, அது வெறும் அறிவிப்பாக இருந்து விடாமல், நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதியை அளிக்கிறோம்" என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
அவ்வாறு அறிவித்ததற்கிணங்க 96-ஆம் ஆண்டு அக்டோபர் 9 மற்றும் 12 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்தத் தேர்தலில் முக்கியமானது என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல்களில் முதல் முறையாக பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட்டதுதான். மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.
மொத்தம் 474 மாநகராட்சி வார்டுகளில் பெண்களுக்கு 161 என்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 35 என்றும் - மாவட்டப் பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மொத்தம் 28-இல் பெண்களுக்கு 10 என்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்க்கு 4 என்றும் - மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகள் பதவிகள் மொத்தம் 649-இல் பெண்களுக்கு 242 என்றும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்க்கு 97 என்றும் - நகராட்சித் தலைவர்கள் பதவிகள் மொத்தம் 106-இல் பெண்களுக்கு 35 என்றும், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்க்கு 6 என்றும் இப்படியே ஒவ்வொரு பதவியிலும் பெண்களுக்கு 33 விழுக்காடு என்ற அளவிற்குத் தொகுதிகள் பிரிக்கப்பட்டன.
அதுதான் இன்று 50 விழுக்காடாக உயர்ந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் இவ்வளவு பெண்கள் அதிகாரம் பொருந்திய இடங்களுக்கு வந்து, தங்களது நிர்வாகத் திறனை மெய்ப்பித்துக் காட்டி வருகிறார்கள். இதையே நாடாளுமன்ற, சட்டமன்றங்களும் வழங்க வேண்டும் என்றும் தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.












Click it and Unblock the Notifications