அவ்ளோ பிளான் போட்டும் கோட்டை விட்ட எடப்பாடி.. மிஸ் ஆகாம 2 “தலை”களை களத்தில் இறக்கிய ஸ்டாலின்! பக்கா!
சென்னை: எடப்பாடி பழனிசாமி 'மிஸ்' செய்த 2 தலைகளை பக்காவாக யூஸ் செய்திருக்கிறார் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களை குறிவைத்து 2 லீடர்களை களமிறக்கியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் வாக்கு சேகரிக்க, அரசியல் கட்சிகள் பல்வேறு யுத்திகளைப் பயன்படுத்தி வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்கள், சினிமா பிரபலங்கள், சமூக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சமூக வாக்குகள்: முன்னதாக, அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மற்றும், அகில இந்திய பார்வர்ட் பிளாக் பசும்பொன் கட்சி ஆகியவை இந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தன. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், குறிப்பாக தேவர் சமூக வாக்குகளை குறி வைத்து எடப்பாடி பழனிசாமி, தேவர் சமூகம் சார்ந்த கட்சிகளை இணைத்துள்ளதாக கூறப்பட்டது.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவடட்ங்களிலும் தேவர் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி உள்ளது. சில தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவுக்கு தேவர் சமூக வாக்காளர்கள் உள்ளனர். ஜெயலலிதா காலத்தில் தேவர் சமூக வாக்குகள் பெருமளவில் அதிமுகவுக்குச் சென்றதன் வாயிலாக, அதிமுக தென் மாவட்டங்களில் நல்ல எழுச்சியைப் பெற்றிருந்தது.
ஆனால், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி, 2021 சட்டமன்றத் தேர்தலிலும் சரி, தென் மாவட்டங்கள் அதிமுகவுக்கு பலன் தரவில்லை. 2021 சட்டசபை தேர்தல் சமயத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அளிக்க எடப்பாடி பழனிசாமி அரசாணை வெளியிட்டது தென் மாவட்டங்களில் எதிர் விளைவை ஏற்படுத்தி விட்டதாக அதிமுக தலைவர்களே வெளிப்படையாகப் பேசினர்.

எடப்பாடி பழனிசாமியின் முயற்சி: இந்நிலையில், வரும் லோக்சபா தேர்தல் தேவர் சமூக வாக்குகளை அதிமுக பக்கம் மீண்டும் திருப்ப வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக இறங்கினார் ஈபிஎஸ். டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் அந்த சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் என்பதால், அவர்களைத் தாண்டி அந்த வாக்குகளை அதிமுகவுக்கு கொண்டு வருவதற்கான வழிகளில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார்.
டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் பாஜக அணியில் உள்ளதால், பாஜகவை விரும்பாத தேவர் சமூக வாக்குகளை அதிமுக பக்கம் கொண்டு வர வேண்டும் என்பதே ஈபிஎஸ்ஸின் திட்டம் எனத் தெரிகிறது. அதற்காகவே, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க ஃபார்வர்டு பிளாக் கட்சிகளை தம் பக்கம் இழுத்தார் எடப்பாடி பழனிசாமி.
பாஜகவும் தென் மாவட்டங்களில் தேவர் சமூக வாக்குகளை குறி வைத்தே டிடிவி தினகரனுடன் கைகோர்த்தது பாஜக. தேவர் சமூக வாக்குகள் பாஜக பக்கம் திரும்பி விடக்கூடாது, பழைய அதிமுகவின் எழுச்சியை தென் மாவட்டங்களில் நிறுவ வேண்டும் என்பதற்காக கட்சி சார்பற்ற சமூக வாக்குகளைக் கவர்வதற்காகவே சிறிய கட்சிகளுடன் கைகோர்த்து பெரிய பிளான் போட்டார் எடப்பாடி பழனிசாமி.
குறுக்கே புகுந்து தட்டித் தூக்கிய ஸ்டாலின்: ஆனால், ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சியை தங்கள் பக்கம் இழுத்தார் ஸ்டாலின். மேலும், கடந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வந்த முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸையும் திமுக அணியில் சேர்த்துள்ளார் ஸ்டாலின். அதோடு, இவர்கள் இருவரையும் தேர்தல் பிரச்சாரக் களத்திலும் நேரடியாக இறக்கி விட்டுள்ளார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மூவேந்தர் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி தேர்தல் பரப்புரை சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
ஸ்ரீதர் வாண்டையார்: தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிதம்பரம் என தேவர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் ஸ்ரீதர் வாண்டையார்.
கருணாஸ் பிரச்சாரம்: ஏற்கனவே, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சிவகங்கையில் பிரச்சாரத்தை தொடங்கிய கருணாஸ், ராமநாதபுரம், திருநெல்வேலியில் பிரச்சாரத்தை முடித்துள்ளார். தொடர்ந்து, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார் கருணாஸ்.
தேவர் சமூக வாக்குகளை குறிவைத்து எடப்பாடி பழனிசாமி என்னென்னவோ முயற்சிகள் எடுத்தும், கருணாஸ் மற்றும் ஸ்ரீதர் வாண்டையாரை மிஸ் செய்துவிட்டார். அவர்களை தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு நேரடியாக பிரச்சாரத்திற்கு அனுப்பி, வாக்குகளை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஸ்டாலின். யாருக்கு வெற்றி என்பது விரைவில் தெரியும்.












Click it and Unblock the Notifications